Friday, 7 February 2014

மாலைப் பொழுதின் சாரத்தில்.......

மாலைப் பொழுதின் சாரத்தில்.......

*********************************************

இனியதோர் மாலைப் பொழுது.
இலக்கின்றி என் பயணம்.........

முற்றிய நெற்கதிரை
முனையில் கட்டி வைத்து
அறுவடைக்காய் காத்திருக்கும்...
அன்னை வயல் வெளி.யில்
.
இனிமையான குரலில்
இதயத்தை தொலைத்தவனின் கானம்
காற்றில் கலந்து தீண்டும்.

அன்பே
நீயும் நானும்
நேசித்திருப்போம்....

உலகத்து முதற் காதல்
உன்னிடத்தில் கொண்டவன் நான்.

காய்ச்சல் கவலை
கையறு நிலையில் நான்.
தேகம் இழைத்து
தேய் பிறை மதியானேன்.
உன் முத்தம் நீ பதிக்க
உன்மத்தம் ஆனேன் .

அன்பே
நீயும் நானும்
நேசித்திருப்போம்....

ஒரு நாள்.............

இந்திய நதிகள்
இமயத்தின் மேல் ஏறி
எவரெஸ்ட் சிகரம் தொடும்..

வண்ண மீன்கள்
கடல் விடுத்து
வாசலில் நீ இட்ட கோலத்தில்
குதூகலிக்கும்.

இலங்கையில் எம் உறவு
இழப்புகள் ஏது இன்றி
வாழ்ந்திடும்..

அந்நாள்
வரும் வரையில்

அன்பே
நீயும் நானும்
நேசித்திருப்போம்....

ஒரு நாள்...............

ஆழ் கடலை அள்ளி
அன்புடன் தடவி
காகிதமாய் மடித்து
காற்றாட விடுவாய் நீ.

வானத்து சப்த ரிஷிகள்
வாசலில் வந்து குவா கூவி
கூட்டாஞ் சோறு படைக்கும்.

வெறி தன்னை விதைக்கும் மதங்கள்
வெயில் பட்ட மார்கழிப் பனியாய்
முற்றிலும் மறைந்து விடும்

அந்நாள்
வரும் வரையில்

அன்பே
நீயும் நானும்
நேசித்திருப்போம்

- சங்கரலிங்கம்