Sunday, 27 January 2013

படிச்சோம்..........கிழிச்சோம்......part-2

படிச்சோம்..........கிழிச்சோம்......part-2
கையில் தலையணை தடிமனுக்கு ஒரு புத்தகத்தை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு உங்களுக்கு குறுக்கும் நெடுக்குமாக மெதுவாக செல்கின்றானே தம்பி இராமகிருஷ்ணன், ஏழாவது படிக்கும் எதிர்கால மன்னன். அவனை விட்றுங்க.. பாவம் , அரையாண்டுத் தேர்வோ முழு ஆண்டுத் தேர்வோ படிக்கட்டும். என்னங்க..அதெல்லாம் ஒன்னும் இல்லையா?. வீக்லி டெஸ்ட் தானா?
அவன் என்னங்க செய்வான்? வாரந்திரமோ  ,மாதாந்திரமோ , யூனிட் டெஸ்டோ,காலாண்டோ, அரையாண்டோ, பப்ளிக் எக்ஸாமோ எதுவானாலும் என் பையன் தான் முதல் ரேங்க் வாங்குவான் என்று அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை  ஏங்கும் எல்லா அப்பாக்களையும் போல , சரி , சரி, எல்லா அம்மா - அப்பாக்களையும் போல் இவனின் அப்பாவும், அம்மாவும் எதிர்பார்க்கத்தானே செய்வார். எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி விட்டால் எஞ்சுவது ஏக்கங்கள் தானே. இராமகிருஷ்ணன் ‘தன் முயற்சியில் தளராத விக்கிரமன் போல் ‘  ஒவ்வொரு வாரமும் , மாதமும் ரேங்க் என்னும் வேதாளத்தை அவன் வழியில் விரட்டிப் பிடிக்கட்டும்.நாமும் , நம் கூட்டாளிகளும் அந்தக் காலத்தில் எப்படி வேதாளத்தை துரத்தினோம் என்பதை நினைவு கூறலாமா?
பள்ளிப் பாடத்தில் மனப்பாடம் என்று ஒரு பிரிவு. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இது முக்கியமான ஒன்று. ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்கி விடும்.  தமிழில் இன்னா நாற்பது , இனியவை நாற்பது, பழமொழி மற்றும் திருக்குறள். ஆங்கிலத்தில் சில POEMS.  இவைகளை நெட்டுரு போட்டு மனதில் பதிய வைப்பதே ஒரு தனிக் கலை.
ஒரு புறம் ஊதாக்கலர் பாவடையும் வெள்ளைக்கலர் சட்டையும் போட்டுக்கொண்டு நமது தோழிகள் முன்னும் பின்னுமாய் ஊஞ்சல் ஆடுவது போல் ‘ ஊர் ஓரம் புளிய மரம்‘ ரேஞ்சுக்கு ‘ காண மயிலாட கண்டிருந்த வான் கோழியை உள்ளே பதிய வைத்துக்கொண்டிருப்பர்கள்.  இன்னொருபுறம் காக்கி டவுசரும் , வெள்ளை சட்டையும் அணிந்த மாணவர்கள். அதில் ஒரு சில பேர் ராகம் எதுவும் இல்லாமல் எட்டுக்கட்டை குரலில் கத்திப்படிப்ப்பர்கள். ஆசிரியரின் ‘சத்தம் போட்டு படிச்சாதான் சந்திரனுக்கு பாடம் ஏறும்’ என்ற ஆசியும் உண்டு. இன்னும் சிலபேர் ஏதோ ரகசியம் பேசுவது போல ‘குசு குசு’ வென்று படித்துக்கொண்டிருப்பர்கள்.
ஆங்கிலப் பாடத்தை படிப்பது இன்னும்  சுவாரசியம்.  வாஸு,அண்டு , புட்டு ,சம்மு என்று அந்தக் காலத்திலே தனுஷின் கொலவெறி போல வாசித்துக் கொண்டிருப்பர்கள்.ஒரு வேளை தனுஷுக்கும் அவர் அப்பா தான் சொல்லிக் கொடுத்திருப்பாரோ என்னவோ?வேம்பை மாநகரின் வேந்தர்களில் ஒருவர் ஆங்கிலம் படிப்பதற்கு அருமையான ஐடியா கண்டுபிடித்தார்.‘ஒன்ஸ் அபான் எ டைம்’ என்று ஆரம்பித்து ஒரு பக்கம் முழுவதும்  தமிழிலே இருக்கும்.படிப்பதோ ஆங்கிலம். கூகுள் transliteration பயன் படுத்தி நாம் இந்தப் பதிப்பை எழுதுவதே அவர் கற்றுகொடுத்த முறைதான். அவர் ஆங்கிலத்தை தமிழில் எழுதி வாசித்தார். நாம் இன்று தமிழை ஆங்கிலத்தில் எழுதி பழகுகின்றோம். நம்மில் எத்தனை பேர் மின்னஞ்சலில், முக நூலில் , யாஹூ, கூகிள் மற்றும் குறும் தகவல்களில் இம்முறையை உபயோகிக்கிறோம். வேம்பத்தூர் வேந்தர் இதற்கு காப்புரிமை எடுத்திருந்தால் நாமும் ராயல்டி கொடுககவேண்டி இருந்திருக்கும்.அவரும் அந்நியச் செலாவணியை அள்ளிக் குவித்திருப்பார்.
மற்றுமொரு நண்பரின் முறையே தனி. பாடம் புரியவில்லை என்று தலைமுடியைப் பிய்த்துக்கொண்டார் என கேள்வி பட்டிருக்கிறோம். நிஜமாகவே இவர் பாடம் மனதில் படிக்கும்போது மிகவும் பாசத்துடன் ஒன்றிரண்டு முடிகளைக் கோதிக்கொண்டிருப்பார். பாடம் மனதில்  பதிந்ததும் அந்த முடிகள் வேரோடு வெளியேறி இருக்கும்.
அந்தக்காலத்தில் எங்களுக்கெல்லாம் இருந்த முழு நேர பொழுதுபோக்கு ‘ இலங்கை வானொலி’. கே.எஸ்.ராஜாவும் , ராஜேஸ்வரி ஷண்முகமும் அப்துல் ஹமீதும் நம்மை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு வரை  தூய தமிழில் பல் வேறு திரைப்பட பாடல்களால் மகிழ்வித்துக் கொண்டு இருப்பார்கள். பக்திப் பாமாலை, பொங்கும் பூம்புனல்,பிறந்த நாள் வாழ்த்து என தொடங்கி குறுக்கெழுத்துப் போட்டி , மற்றும் இசையும் கதையும் என ஒரே இசை மழை தான். மச்சானைப் பாத்தீங்களா என மழலைகளும் , கிருஷ்ணா முகுந்தா என பெரிசுகளும் ரசிக்கும் வண்ணம் எல்லாமே இனிமைதான். வீட்டில் வானொலிப் பெட்டி பாடிக்கொண்டிருக்க கையில் கோனார் நோட்ஸில் கம்பனின் ‘நாகமது நாக்முற நாகமென நின்றான்’ னுக்கு பதவுரை, பொழிப்புரை , இலக்கிய நயம் என பத்தி பிரித்துப் படித்துக் கொண்டிருப்பார்கள் நமது தோழிகள். ‘எனக்கு பாட்டு கேட்டா தான் படிக்கவே வரும்’ என்று விளக்கம் வேறு.
காலாண்டு ,அரையாண்டுத் தேர்வுக்கு வழக்கம் போல கணக்குப் பரிச்சைக்குப் படிக்காமல் மற்ற பாடங்களில் கவனம் செலுத்தி ஓரளவு நம்மைத் தயார் படுத்துவோம். என்ன , காலை ‘எழுந்தவுடன் படிப்பு’ தான் காணாமல் போயிருக்கும்.ஆழ்ந்த உறக்கம், அக்காவுடன் சண்டை ,பால் வாங்கச் செல்வது, பஜனைக்குப் போவது எனப் பல காரணங்கள். மாலைப் படிப்பு உப்பாற்றங்கரையில். கையெழுத்து மறைகின்ற நேரம் , அது தாங்க ‘இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதின் போது’ வீட்டுக்கு திரும்பி குழல் விளக்கின் ஒளி மழையில் தொடர முயலுவோம். அப்போதுதான் சிவன்கோவிலில் இருந்து ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ என்று எல்.ஆர்..ஈஸ்வரி  சாமியாட வைத்துக் கொண்டிருப்பர். சிறிது நேரத்தில் இசைத்தட்டு முடிந்து இளவட்டங்களின் இன்னிசை தொடங்கிவிடும். கோவிந்துவின் ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, ஞானசேகரனின் ‘பள்ளிக்கட்டு சபரி மலைக்கு’ விஜயனின் ‘ தங்க மாயம் முருகன் சந்நிதானம், மற்றும் சேது அண்ணனின் ‘முருகனைக்கும்பிட்டு ‘ என்று ஒவ்வொருவரும் தம் கைவரிசையைக் காட்ட நாமும் கூட்டத்தோடு கோவிந்தா போட சேர்ந்து விடுவோம். இவைகளை கடந்து இரவில் சிறிது நேரம் படிப்போம்.’சீக்கிரம் படிச்சிட்டு லைட் ஆப் பண்ணுங்கடா , கரண்ட் பில் ரொம்ப வருது’ என்ற அப்பாவின் நியாயமான கட்டளைக்கு பணிந்து 9:30 க்கெல்லாம் நமது படிப்பு முடிந்துவிடும்.ஓரளவு படித்து அரையாண்டு தேர்வை ஒப்பேற்றிவிடுவோம்.
முழு ஆண்டுத்தேர்வுக்கு முன்னதாக, பரிட்சைக்கு படிப்பதற்காக  பத்து நாட்கள் பள்ளி விடுமுறை. அப்போது தான்  நமது தோழர்கள் தூசி தட்டி தயார் செய்வார்கள். என்ன , புத்தகம் , நோட்டா ? அதெல்லாம் இல்லைங்க. பம்பரம், கோலிக்குண்டு, கிட்டிப்புள் முதலான உபகரணங்கள். கொளுத்தும் வெய்யிலில், தெரு முனையில் நமது ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும். இதைப் பார்த்து விட்டுச் செல்லும் பெரிசுகள் ‘ இந்த பக்கி களுக்கு வேற வேலையே இல்லையா என்ற அங்கலாய்ப்புக்கு ஹேய் என்று ஒரு பழிப்பு. அப்புறம் ஆட்டம் தொடரும்.யாராவது ஒரு ஆசிரியரின் தலை தெரிந்தால் போதும் , அத்தனை ஆட்டமும் மலை ஏறி விடும்.  
தேர்வு நாட்களில் நாம் நடந்து கொள்ளும் விதமே தனி. காலையில் குளித்து பக்திமானாய், வினாக்கள் ஈசியாக வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். பின்னர் ஆடைத் தேர்வு. இந்த சட்டையை போட்டுக்கிட்டு பரிட்சை எழுதினா ஊத்திக் கொள்ளும்  என்று ஓரிரு ஆடைகளை ஒதுக்கிவிட்டு முதல்   மார்க் எடுக்க வைத்த ஒன்றை மாட்டிக்கொண்டு பள்ளி செல்வோம்.பாதி வழியில் நாம் படித்ததை எல்லாம் மனதில் நினைத்துப் பார்த்தால் ஒன்று கூட நினைவுக்கு  வராது. பூஜ்யத்தை தேடி அலைகின்ற இன்றைய தேவை அப்போது இருந்திருக்க வில்லை.இருந்திருந்தால் அன்றே ஞானியாகி இருப்போம். மனதை ஒரு நிலைப்படுத்தி நினைவு படுத்திப் பார்ப்போம். ம்.. ஹும்  ஒன்றுமே ஞாபகத்திற்கு வராது. இது போதாதென்று சில நண்பர்கள் , நாம்  எதில் கவனம் செலுத்தி படிக்கவில்லையோ அது தான் மிகவும் முக்கியமான பாடம், அதில் தான் பத்து மார்க் கேள்விகள் கேட்கப்படும் என்று நம்மை பயத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்வார்கள். தேர்வு அறைக்கு சென்று கண்காணிப்பாளர் கொடுக்கும் வினாத்தாளை வாங்கி நமக்குத் தெரிந்த அனைத்து சாமிகளிடமும் வேண்டிக்கொண்டு வினாத்தாளை திறந்தால் நமக்குத் தெரிந்த வினாக்களே இருக்கும்.  ஒரு வழியாக தேர்வை மூன்று மணி நேரம் எழுதிவிட்டு வருவோம். சில நண்பர்கள் ஏதோ ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் அரைமணி நேரத்தில் எழுதிவிட்டு அறையை காலி செய்துவிடுவார்கள். அவர்கள் அம்மா ‘என் பிள்ளை சமர்த்து ‘ என்று பாராட்டுவார்கள்.
நாம் ஒரு தடவை, நமது நண்பர்கள் மற்றும் தேர்வு அறையிலிருந்த மற்ற பள்ளி நண்பர்கள் அனைவரின் கனல் வீச்ச்சுக்கு ஆளாகி வெந்து , தர்ம அடி வாங்காமல் தப்பித்து ஓடி வந்த நிகழ்ச்சியை பார்க்கலாமா? சிவகங்கையில் நாம் SSLC தேர்வு எழுதிய நேரம். கணித  தேர்வின் வினாத்தாள் அவுட் ஆகியதாக தேர்வுக்கு முதல் நாள் நமது சீனியர் அண்ணா , நமது பள்ளியில் பயின்று முதன் முதலில் பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்து மூன்றாம் ஆண்டில் பயணித்துகொண்டிருந்தவர், கொண்டு வந்து தந்தார். நாம், நமது பள்ளி நண்பர்கள், அதே மையத்தில் தேர்வு எழுத வந்த  மற்ற பள்ளி மாணவர்கள் , மற்றும் பதவி உயர்வுக்காக தேர்வு எழுத வந்திருந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என அனைவருக்கும் ‘உதவலாமே’ என்ற உயரிய நோக்கில் அவுட்டான வினாக்களையும், அவற்றிற்கான பதிலையும் விலாவரியாக அனைவருக்கும் விளக்கினோம். மறுநாள் தேர்வு மையத்திற்கு சென்று  வினாத்தாளை கையில் வாங்கிப் பார்த்தால் ஒரு வினா கூட அதில் இல்லை. அனைவரின் முகத்திலும் பெரிய ஏமாற்றம். கொடுக்கப்பட்ட வினாத்தாளோ மிகவும் கடினமானதல்ல. நமக்கு எளிதாகப்பட்டதால் எழுதத் துவங்கிவிட்டோம்.(அதில் 100/100 வாங்கினோம், அது வேறு). சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கம் பார்த்தால் பெரும்பான்மையான கண்கள் நம்மையே மொய்த்துக்கொண்டு இருந்தன . நல்லவேளை, அதில் ஒன்று கூட நக்கீரனை எரித்த நெற்றிக்கண் அல்ல. நாமும் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஒன்றும் தெரியாத மாணவனைப் போல் முழித்துக்கொண்டும் , கைகளை மேஜையில் தேய்ப்பதுவும் ,மற்றும் பெருமூச்சு விட்டுக்கொண்டும் பாக்கியராஜைப்போல் போக்கு காட்டிக் கொண்டிருந்தோம். மணியடித்த மறு நொடியே தேர்வுத்தாளை கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு எடுத்தோம் ஓட்டம். பின்னே அங்கே நின்றால் வாங்கும் தர்ம அடியில் எலும்பாவது மிஞ்சுமா என்பதே சந்தேகம். அதன் பின்னர் நடந்த எஞ்சிய  மூன்று தேர்வுகளுக்கும் வருவதும் போவதும் தெரியாதவாறு நடந்துகொண்டோம்.
ஒரு முறை M.Sc செமஸ்டர் தேர்வுக்காக படித்த போது நடந்த இன்றும் மறக்க முடியாததொன்று. இரவுநேரப் படிப்பு முடிந்து வராண்டாவில் தூங்கிகொண்டிருந்தோம். அதிகாலையில் சூடான காப்பியுடன் ஹாஸ்டல் அலுவலர் எழுப்பிவிட நாமும் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு கையில் ஒரு புத்தகத்துடன் சுமார் ஆறு மணியளவில் படிப்பதற்காக கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு சென்றோம். மணல் குமிந்து கிடந்த ஒரு இடத்தை தெரிவு செய்து நமது படிப்பை துவங்கினோம்.சிறிதுநேரத்தில் நித்திரா தேவியின் அரவணைப்பில் நாம் நம்மை மறந்தோம். சுமார் ௮:௩௦ அளவில் ஏதோ கனவில் நம்ம யாரோ அழைப்பது போல் உணர்ந்து விழித்துப் பார்த்தால் நமது சீனியர் நம்மை உதை பந்தாக்கிக் கொண்டிருந்தார். நன்கு விழித்த நாம் நான்கு கால் பாய்ச்சலில் அவர் மீது பாய ஆயத்தம் செய்தோம்.
நமது சீனியர் பத்து மணிக்கு தேர்வுக்கு செல்லவேண்டுமே எனக் கூற நமது சப்த நாடியும் ஒடுங்கி , நமது காலடியில் பூமி நழுவுவதை உனர்ந்தோம். அப்போது  நேரம் காலை 9:30. அவசரம் அவசரமாக ஹாஸ்டலுக்கு விரைந்து குளித்து , சிற்றுண்டியை முடித்துக்கொண்டு தேர்வு அறைக்குள் நுழையும் போது  நேரம் காலை ௧௦:௦௦. அன்று எடுத்தோம் ஓர் முடிவு .எந்த ஒரு காரணத்தினாலும் தேர்வு தினத்தன்று ஹாஸ்டல் அறையை விட்டு வெளியே செல்வதில்லை என்று.
என்னங்க , ரொம்ப போர் அடிச்சிட்டோமா ? இப்போதைக்கு இவ்வளவு போதும்னு முடித்துக் கொள்வோமா?
அன்புடன்,
சங்கரலிங்கம்

வாங்க........ பொங்க வைக்கலாம்


வாங்க........ பொங்க வைக்கலாம்.
என்னங்க .பொங்கலோ பொங்கல் என பொங்கலும் வந்துவிட்டது. அட ஆமாங்க.. நமக்கும் ஒரு வயசு கூடிருச்சு. இந்தப்பொங்கலை சிவகங்கையில்கொண்டாட இருக்கிறேன். ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பெரும்பாலும் பொங்கலை கொண்டாடுவது வீட்டில் தான்.காஸ் அடுப்பில் ‘எவர் சில்வர் ‘ பாத்திரத்தில் , கடையில் வாங்கிய கர்நாடகா பொன்னி அரிசியில், புத்தாடையுடன், என்னைக் கை பிடித்த நல்லவள்(ர்) சர்க்கரையும் நெய்யும் தாராளமாகச் சேர்த்து இறக்கிய பொங்கலை இறைவனுக்குப் படைத்த பின்னர் நமக்கும் நம் பரிவாரங்களுக்கும் பரிமாறுவார். கூடவே ஒரு ஸ்பெஷல் அட்வைஸ்  நமக்கு மட்டும் தான். ‘உங்களைத்தான் , சர்க்கரை நெறைய போட்டிருக்கேன், பொங்கலைக் கொஞ்சம் கம்மியா சாப்பிடுங்கள் ’.நாமும் சரி என்று சொல்லி  நம் இலையில் இட்ட பொங்கலைக் காலி செய்துவிட்டு, இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று ஏக்கத்துடன் பார்ப்போம். ம்.. ஹூம் ஹுஹும். நம்ம பக்கம் பார்க்கவே மாட்டாங்க. நாம தான் ஐடியா அருணாச்சலம் ஆச்சே. நம்ம வாரிசுகள் கிட்ட ‘அப்பாவுக்கு ஒரு வாய் கொடுங்கடா’ என்று கேட்டு ஒவ்வொருவரிடமும் ஒரு வாய் வாங்கி இரண்டாவது கோட்டா முடிந்துவிடும்.இன்னும் கொஞ்சோண்டு வேணுமே, என்ன செய்யலாம்? மூளையில் ஒரு பளிச். ‘என்ன தான் தட்டு நிறைய சாப்பிட்டாலும் நீ ஊட்டிவிடுறதுல ஒரு தனி ருசி  ’ என்று ஐஸ் வைக்க நம் முந்நாள் காதலி , ஆமாங்க இந்நாள் மனைவி அப்படியே உருகி ஒன்றுக்கு இரண்டு முறையாக ஊட்டிவிட நமது மூன்றாம் கோட்டாவுடன் பொங்கல் பண்டிகையே முடிந்துவிடும். அப்போது ஏனோ நம் மனம் பின்னோக்கி 6௦ - 7௦ களுக்கு பயணித்துவிடும். இளைப்பாறும் இடைவெளிகளில் தான் எத்தனை மாற்றம். நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிய பயணத்தில் நாம் சந்தித்தவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமா?
நமக்கெல்லாம் மார்கழி மாதம் முதல் நாள், தெக்கூர் சிவன் கோவிலில் கட்டிய கூம்பு குழாயிலிருந்து வரும்  ராஜா ஒலி பரப்பு சேவையின் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ நம்மை காலையில் தட்டி எழுப்ப நமது பொங்கல் count down தொடங்கிவிடும். அதிகாலை எழுந்து விறகு அடுப்பில் அம்மா போட்டு வைத்த வெந்நீரில் குளித்து விட்டு, வீட்டின் முன்னே காத்திருந்து , பக்தியுடன் வரும் தெக்கூர் பஜனைக்குழுவில் கலந்து ‘ கந்தன் திரு நீரணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்’ எனப் பாடி பக்த கோடிகளில் ஒருவனாக இந்த சங்கரரும் சங்கமமாகிவிடுவோம். எஞ்சி இருக்கும் இரண்டு வீதிகளில் பஜனை பாடி சிவன் கோவிலைச சென்றடையும் நம் குழு. சோமு பெரியப்பா சொக்கநாதரின் சந்நிதியில் ‘திருவிளையாடல் காணீரோ’ என்ற திரைப்பாடலை தெய்வீக ராகத்தில் பாடி, தீபாராதனையுடன்  பஜனை முடியும். பங்கெடுத்த நாங்கள் அனைவரும் வரிசையில் நின்று கையில் வழித்து வைக்கும சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை ருசி பார்க்க நாம்  பொங்கல் சுவைக்கும் நிகழ்வும் உதயமாகிவிடும்.
அந்த மாதம் முழுவதும் ஒரே பரப்புதான். அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று கவலை. பொங்கலுக்கு என்ன புது டிரஸ் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு, மாடுகளுக்கு மஞ்சியில் கழுத்துக்கட்டி பின்னவேண்டும் என்ற ஆர்வம் , இந்த வருடம் நம் வீட்டு வண்டி மாடுகளுக்கு கொம்பில் தி.மு.க. வர்ணம் பூச வேண்டுமே என்ற வேண்டுகோளுடன் , தினம் கிடைக்கும் கோவில் பிரசாதம் , அதுவும் 22 நாட்களுக்கு குறையாமல் சர்க்கரைபொங்கல், ஆகிய எல்லாம் கலந்து மார்கழி முழுவதுமே ஜாலி தான்
இதற்கிடையில் நமக்கு புது டிரஸ் தயார் செய்யும் பணி துவங்கிவிடும். கனமான துணியில் டவுசருக்கும் , கட்டம் போட்ட டிசைனில் சட்டைக்கும் துணி எடுத்து மாசானம் பெரியப்பாவிடம் கொடுத்திடுவோம் ,பொங்கலுக்கு மூன்று நாள் முன்னதாக கொடுத்து விடுங்கள் என்ற வேண்டுகோளுடன். அதென்னவோ தெரியவில்லை , எல்லா டைலருமே பண்டிகை தினத்தின் காலை அல்லது முதல் நாளிரவு 12 மணிக்குத் தான் தருவார்கள்.அதெல்லாம் தொழில் ரகசியம். பின்னே, மூணு நாளைக்கு முன்னாடி கொடுத்திட்டா நீங்க முப்பத்தாறு வாட்டி திரும்ப எடுத்துக்கொண்டு வந்து நோட்டை சொல்லி  நொங்கேடுப்பீங்களே 
மாடுகளுக்கு மஞ்சு விரட்டிற்கு கழுத்துக்கட்டி ரெடி பண்ண வேண்டுமே. சிறிய கற்றாழை இதழ்களை வெட்டி கொட்டங்கச்சியால் அதில் உள்ள சதைப்பாகத்தை வளித்து எடுத்து மிச்சமிருக்கும் மஞ்சி எனப்படும் நார் பகுதியைச் சேமிக்கத் தொடங்குவோம். இன்னும் சிலதொழில் நுட்ப வல்லுனர்கள் ‘மாஸ் ப்ரடக்க்ஷன் ‘ முறையில் பெரிய கற்றாழை இதழ்களை கட்டாக வெட்டி வயலிலோ , வாய்க்காலிலோ சேற்றில் புதைத்து பதப்படுத்தி கல்லில் துவைத்து கட்டுக்கட்டாய் ‘மஞ்சி’ தயார் செய்வார்கள். பழுப்பு நிறத்தில் மஞ்சி இருந்தால் பனியில் போடு வெள்ளையாகிவிடும் என்ற பெரிசுகளின் பேச்சைகேட்டு, வெண்ணிற மஞ்சி ரெடியாகிவிடும்.கழுத்துக்கட்டி செய்வது ஒரு பெரிய கலை. ஒரு கொத்து இழையை அழகாக தொடையில் வைத்து திரித்து கயறாக்கி இரட்டையாக்கி இடையில் சிறிய கொத்தை பூ பின்னுவது போல பிண்ணி சிக்கெடுத்து காய்ச்சி எடுத்த கலர் சாயத்தில்  ஒரே சீராக கலர் பிடிக்கும் வண்ணம் தோய்த்து எடுத்து காய வைத்தால் மாட்டுக்கு அணியும் மஞ்சி கழுத்துக்கட்டி ரெடி. நாமும் கற்றாழை சீய்ப்பில் துவங்கி,  யாராவது ஊறப் போட்ட கற்றாழைக்கட்டை கிளப்பிக்கொண்டு  வந்து  வெள்ளை மஞ்சி தயாரித்து கொடுத்துவிடுவோம்.   .
வீட்டுக்கு வெள்ளை, ஜன்னலுக்கு பெயின்ட், கதவுக்கு வார்னீஷ் அடிப்பது எல்லாம் அண்ணன்களின் வேலை. ஒரு அடி உயரத்துக்கு காவியும் வெள்ளையுமாக சுவர்களில் பட்டை அடிப்பது அநேகமாக நமது வேலையாகத்தான் இருக்கும். நமக்கிட்ட பணியை நாம் முடிக்காமல் விட சிறிய பேரத்தில் நமது உடன் பிறந்தோர் முடித்துவிடுவர். பேரம் என்னவா? பொங்கல் ரிலீஸ் படத்துக்கு நம்ம காசுல தான் டிக்கெட். பொங்கல் ரிலீச என்றதும் நேற்று வந்த துப்பாக்கி , நாளை வரும் , மற்ற நாள் வரும் என்று கூடங்குளம் மின்சாரம் போல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும்  விஸ்வரூபம் போல புதிய படம் என நினைத்து விடாதீர்கள். எல்லாத்தியேட்டர்களிலும் சவுண்ட் டிராக் தேய ஓடி , இனிமேல் பார்க்க ஆளில்லை என்ற நிலையில் நமது ஊருக்கு அருகில் இருக்கும் டெண்ட் கொட்டகையில் தஞ்சம் புகும் ‘மர்மயோகி’ மகாதேவி, லவகுசா என்பனவற்றை தவிர்த்து, அனபே வா , ஆயிரத்தில் ஒருவன் , மாட்டுக்கார வேலன் என்ற மாடர்ன் படங்கள் தான்.
மாடு இல்லாதவர்கள் தைபொங்கலை முதல் நாள் கொண்டாட இரண்டாம் நாள் மற்றவர்கள் பொங்கல் வைப்பார்கள். நம் வீட்டில் ரெண்டு நாளுமே பொங்கல் தான்.
மூன்று தலைமுறையாய் எங்களுக்கு சோறு போடும், கோழி பொறுக்கி நிலத்தில் விளைந்த மனம் மாறாத புது நெல்லை அரவை மில்லுக்கு எடுத்துச்சென்று அரிசியாக்கி விடுவோம், பொள்ளாச்சியில் இருந்து நமது ஊருக்கு புலம்பெயர்ந்த ஆலையில் நமது கரும்பை அரைத்து ,  சோடா , மற்றும் வீசசு பொடி போடாமல் வீட்டுக்கென தயாரித்த தனிச்சர்க்கரையும் ரெடி, நமது தோப்பில் இரண்டு நாள் முன்னதாக வெட்டிய தேங்காய் ,முருங்கை இலை போட்டு காய்ச்சி எடுத்த பசும் நெய் என எல்லா மூலப்பொருள்களும் உள்நாட்டுத் தயாரிப்பு தான் . கடையிலிருந்து வாங்குவது முந்திரிக்கொட்டையும் உலர்ந்த திராட்சையும் தான்.
பொங்கல் வைப்பதே தனி அழகு. வீட்டின் நடுக்கூடத்தில் ஆற்று மணலை அரையடி உயரத்திற்கு கொட்டி அமைத்த மேடை , அதன் மேல் புதியதாக வாங்கிய களிமண் அடுப்பு ,காவி வெள்ளை பட்டையுடன். பொங்கல் வைப்பதற்கென்று அம்மா புதுப் பெண்ணாக வந்த பொது கொண்டு வந்த வெங்கலப்பானை அதில் மஞ்சள் கிழங்கு மற்றும் பொங்கல் பூ செடி கட்டி அடுப்பில் ஏற்றி , அன்று கறந்த பசும்பாலை ஊற்றி பொங்கும் வரை அடுப்போரத்தில் காத்திருந்து பொங்கும்போது , சங்கொலித்து பொங்கலோ பொங்கல் என அப்பா , அம்மா , அண்ணன்கள் , அககா , தம்பி என அனைவருமே கூவுவதே தனி சந்தோஷம்.
இன்னும் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் உண்டு. இரண்டுமே மாட்டு பொங்கலன்று நடப்பவை.முதலாவது எச்சி கழித்தல். அணைத்து உணவு வகைகளையும் தலை வாழை இலையில் தழுகையாகப் படைத்து இருப்பார்கள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஒரு பேண்ட் வாத்தியக்குழு அமைத்து ஒவ்வொரு வீட்டிற்கும விசிட் அடிப்போம். கையில் கிடக்கும் தாம்பாளம், தகர டின், வெண்கலச சொம்பு இவைஎல்லாம் தான் வாத்தியக் கருவிகள்.டங் டங் என்று அடித்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் பட்டாளம் நுழையும். ஒருவர் செந்தணலை, உடைத்த புதுப்பானை ஓட்டில்  ஏந்திகொள்ள முன்னதாகச்செல்லும் முதியவர் ‘ பட்டி பழுக ,பால் பானை பொங்க , சீதேவி வர , மூதேவி போக என பாட , நாமும் கோரஸாகப் பாடி வீடெங்கும் புனித நீரை தெளிப்போம். தப்பித்தவறி முறைப்பெண்கள் நம் கண்ணில் பட்டால் அவர்கள் மேலும் சிறிது தெளித்து நம் அன்பை வெளிப்படுத்துவோம். நமக்கு ரகசியமாகக் கிடைக்கின்ற பாராட்டு என்ன தெரியுமா? ‘மூஞ்சியப்பாரு மொகரையப்பாரு’

இரண்டாவது மஞ்சு விரட்டு.. இது ஏதோ அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வாடிப்பட்டு மஞ்சு விரட்டு என்கின்ற ரேஞ்சுக்கெல்லாம் கற்பனை வேண்டாம்.
தெக்கூரின் மையமான நமது பெரிய வீட்டின் முன் ஊர் கூடிவிடும் முதலாவதாக , நமது தாத்தா முத்து மேனாட்டாரின் காளைகள். பக்கத்துக்கு ஒருவராக இரண்டு காளைகளையும் நான்கு பேர் பிடித்துக்கொண்டு ஓடுவார்கள். அதன் பின்னர் ஊரில் உள்ள அனைத்து மாடுகளும் ஒட்டிவரப்படும். நாமும் நமது வீட்டிலிருக்கும் கன்றுக்குட்டியை பிடித்துக்கொண்டு ஓடி வருவோம். ஒரு அரை மணி நேரம் ஒரே ஜாலிதான். தியேட்டரில் படம் பார்க்கும்போது பாப்கார்ன் கொரிப்ப்துபோல் மஞ்சு விரட்டுக்குக்காக காத்திருக்கும் வேலையில் ‘நண்டு சிண்டுமாய் இருக்கும் அனைவரிடமும் இரண்டடி கரும்புத்துண்டு வேகமாக கரைந்துகொண்டிருக்கும்

இரண்டு பொங்கல் நாளுமே. மதியம் , இரவு என இரு வேளைக்கும் சர்க்கரைப் பொங்கல் தான் பிரதான உணவு.  இனிப்பு திகட்டாமல் இருக்க பூசணிக்காயை வெட்டி செய்த புளிக்கறி. இவை எல்லாம் மாதவனின் ‘பட்டிக்காடா பட்டணமாவிலோ’ அல்லது பாரதி ராஜாவின் ‘பதினாறு வயதினிலே’லோ வருவதோ அல்ல. இவை எல்லாமே நம் கண் முன்னால் நடந்தவை. நாமும் பங்கெடுத்துக்கொண்டது. இவைகளை எல்லாம் நம் இளசுகளுக்கு சொல்லும்போது ‘ அப்பா ரொம்ப ஓவராப் பில்டப் கொடுக்கிறாங்க’ என்று கேலி செய்து சிரிப்பார்கள். நாமும் அடுத்த பொங்கலுக்கு தெக்கூர் செல்வோம் , நீங்களும் பார்க்கலாம்என்று சொல்லி சொல்லி 25 வருடங்கள் ஒடிவிட்டன.
தெக்கூருக்குச்சென்று மீண்டும் ஒருமுறை பார்த்தால் என்ன? வேண்டாம் சார்,  காவியங்கள் காவியங்களாகவே இருந்து விட்டு போகட்டும். கடைவிரித்து கவுரவத்தைக் குறைக்க வேண்டாமே! உழைத்து களைத்துப்போன மக்கள் ஊரை விட்டுச் செல்ல, படித்துக் களி(கிழி)த்தவர்க்கள் பட்டணத்தில் செட்டிலாக,   இளைத்துப்போன தெக்கூரில் இருப்பது என்னவோ குருட்டு அரசியலும்,  வரட்டுக் கவுரமும் , முரட்டுப் பிடிவாதமும் தான்.
இன்றைய நிலையில் பொங்கல் என்பது ஒரு கிலோ அரிசி  ஒரு கிலோ சீனி மற்றும் நூறு ரூபாய்களில் முடிந்து விடும் என்பது அரசின் கணக்கு.
சார், போரோட  தின்ன மாட்டுக்கெல்லாம் புடுங்கி போட்டா கட்டுப்படியாகுமா?

அனைவருக்கும் என் இதயங்கனிந்த பொங்கல் நல வாழ்த்துக்கள்.
அன்புடன்
சங்கரலிங்கம்

Friday, 11 January 2013

படிச்சோம்......கிழிச்சோம்....-1



நண்பர்கள் / உறவினர்கள் நம்மைப் பற்றி தம் நண்பர்களுடன் அறிமுகப்படுத்தும் போது அந்த புதிய நண்பர்களும் நாம் கெமிஸ்ட்ரி படித்ததில் ஏதோ இமாலய சாதனை செய்துவிட்டோம் என்று வியந்து சிலாகித்து பேசி நம்மை பயமுறுத்துவார்கள். ஏதாவது கெமிஸ்ட்ரியில் கேள்வி கேட்டு நம் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றி விடுவரோ என்று உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பிக்கும். அதென்னவோ சில நேரங்களில் நமது புத்தக அறிவிற்கும் , பயன்பாட்டு அறிவிற்கும் கொஞ்சம் கூட ஒட்டு / உறவு இல்லையோ என்று சந்தேகம் வருகின்றது. பின்னே என்னங்க? மானாட மயிலாட மேடையிலே நம்ம கலா அக்கா, ராஜஸ்தானி லம்பாடிகாரங்க கிட்டே இருந்து  பம்பர்ல  அடிச்ச நகைகளை   சுமக்க முடியாமல் போட்டுக் கொண்டு சந்த்ரு நீ பின்னிட்டேடா, நோ சான்ஸ் ,உனக்கும் ஸ்ருத்திக்கும் கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வொர்க் அவுட் ஆகுதுனு கமெண்ட் அடிக்கும் போது நமக்கு ஒன்னுமே புரியறதில்லைங்க. ஏனென்றால் நமக்கு தெரிஞ்ச கெமிஸ்ட்ரி எல்லாம் மீத்தேன் , ஈத்தேன் , கரைத்தேன் , குடித்தேன் அவ்வளவுதான்.இது என்ன கலா அக்கா கெமிஸ்ட்ரி என்று என் பிரண்ட் , பிலாசபர் , கைடு, ரசிகை இன்னும் எத்தனையோ அவதாரம் எடுக்கும் என் சக தர்மினியை (அப்பாடா , இன்னைக்கு சர்க்கரை போட்ட காபி கண்டிப்பா கிடைக்கும்) கேட்டு விளக்கம் பெற்று கொண்டோம். இது போல தான் , நம் மேலாளர் நீ அதிகமா உழைக்கணும் , அப்போதான்  அதிக எனர்ஜி கிரியேட் ஆகும் னு அட்வைஸ் பண்ணும்போது  சார் , உங்களுக்கு ஒன்னுமே தெரியவில்லை. தெர்மோடைனமிக்ஸ்ல முதல் விதியே சொல்லுது எனர்ஜியை யாரும் அழிக்கவும் முடியாது , பிறப்பிக்கவும் முடியாது என்று முகத்துக்கு நேரா சொல்லிடலாம் போலத் தோன்றும். பின்னே என்னங்க? இதைப்படிக்கிறதுக்கு நாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்? ராங்கா சொன்னா ? என்னது? கொஞ்சம் சத்தமா பேசுங்களேன். என்ன படிச்சுக் கிழிச்சோம் , எப்படி படிச்சுக் கிழிச்சோம் என்று கேட்கிறீர்களா? அந்த கலை(தை)யையும் தான் இங்கே சொல்லி விடலாமே.
டிண்டைங், டிண்டைங் என்று மியூசிக் கேட்டதும் நமது வாய் தானாகவே ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ னு முனுமுனுக்க ஆரம்பித்துவிடும். இன்றைக்கும் நம்மிடையே எத்தனயோ பேர் நம்மைப் போலவே, முக்காலே மூன்று வீசம் தி.மு.க பேச்சாளர்களின் பக்கா குரலில், டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா வாக வரித்துக்கொண்டு முழுப்பாடலையும் பாடிவிடுவார்கள். மாடு மேய்க்கும் மகாதேவன்  அண்ணா கூட ‘இரவுக்கும் பகலுக்கும் கோதுமை தோசை , இருக்கவே இருக்கு தேங்காய் சட்டினி’ என்று கண்ணதாசன் பாட்டை எளிதாக உல்டாசெய்துவிடுவார். இவையெல்லாம்  எந்த ஆசிரியர் மண்டி போட வைத்து சொல்லிக் கொடுத்தார்? இல்லை எத்தனை முறை இம்போசிஷன் எழுதி மனப்பாடம் செய்தனர் இந்தபாடலை? இது தானாகவே வருவது பல தலை முறையாய் நிகழ்வது.
எந்த ஒன்று நமது கனவுகளோடும், கற்பனைகளோடும் ஒன்றிப் போகின்றதோ அது காலத்துக்கும் நமது மனது விட்டு அகல்வதில்லை.அந்த ஒன்று  நாம் படிக்கின்ற பாடமாகவும்  இருக்கட்டுமே.பாட்டி சுட்ட வடையும் , பாடும் போது நான் தென்றல் காற்றும் மனதில் நிறைந்திருப்பதற்குக் காரணம் நாம் அதனை கேட்டோம் , படித்தோம் , ரசித்தோம். எனவே எதையும் படிக்கும்போது அதனை ரசிப்போமே. இதுதாங்க நம்ம முதல் பாடம். அப்படி ரசித்தது, படித்ததுதான் கணிதம்.அதனால் தான் அல்ஜீப்ராவும், ஜியோமெட்ரியும்  அல்வாவாக இனித்தது .நமக்கு முன்னே படித்த இரண்டு அண்ணாக்கள் மற்றும் ஒரு அக்காவின் கணக்குப் புத்தகங்கள் நம்மோடு பிணக்கு கொண்டதேயில்லை.அப்போதே நமக்கு தெரிந்து விட்டது  கணிதம் தான் சரியான அடித்தளமாக இருக்கமுடியும் என்று.
அதே கருத்தை இந்நாளில், ஐநூறுக்கு  பேருக்கு விளங்க வைத்த ஒரு நிகழ்வினை நேரில் பார்த்தோம்.ஒருமுறை கோவையிலிருந்து ஒரு பேராசிரியர் ஒரு பள்ளியில் HOW TO INCREASE THE  MEMORY POWER என்று ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மட்டுமின்றி  மாணவர்களின் பெற்றோருக்கும் அனுமதி இருந்தது.நாமும் யாரோ மோகனாங்கியாம்ல , அந்த தில்லானா மோகனாம்பாளும் என்னதேன் ஆடுராகன்னு பாத்திட்டு வாரேன்னு போனோம்.நிகழ்ச்சி ஆரம்பமானது. தமிழ்த்தாய்க்கு வாழ்த்துப்பாடி , தலைமை ஆசிரியரின் முன்னுரையோடு  தொடங்கியது.பேராசிரியரும் பேசத்தொடங்கினார்.பேச்சில் ஒன்றும் பெரிதாய் இல்லை.நடையோ மிகவும் சாதாரணம்.இதில் என்ன ஸ்பெஷாலிட்டி என்று கட்டம் போட்ட சட்டைக்காரர் கமெண்ட் அடித்தார். அப்போது தான் அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எந்த ஒரு மாணவரின் பெயரைக் கூறினாலும் அந்த மாணவரின் முழு விவரங்களைக் கூறுவதாக அந்தப் பேராசிரியர்அறிவித்தார்.எந்தப் பெயரைசொன்னாலும்  உடனே எந்திரன் சிட்டி போல கட கடவென்று அந்தக்குழந்தை  படிக்கும் வகுப்பு , பகுதி மற்றும் பிறந்த தேதியை அறிவித்தார் பதில் வந்தது..கையில் கணனியோ , காகிதமோ எதுவுமே இல்லை. அவரது நினைவுத்திறனுக்கு , திறமைக்கு நாம் தலை வணங்கினோம். (மன்னிக்கவும்-அவரது பெயர் நினைவில்லை. இதுதான் நமது நினைவுத்திறன் லட்சணம். பின்னூட்டத்தில் அவர் பெயரை கண்டிப்பாக யாராவது தெரியப்படுத்துவார் என நம்புவோம்)
இது எப்படி சாத்தியமாயிற்று? அவரே பின்னர் விளக்கினார். அந்த எண்களை வைத்து ஒரு சிறிய,எளிய கதையைப் புனைந்து கொண்டதாகவும்கதையில்
அந்த எண்களை பாத்திரங்களின் எண்ணிக்கை யாக்கி  நினைவுறுத்திக் கொண்டதாக கூறினார். ஒரு நல்ல நிகழ்ச்சி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
இதே போல நாம் கெமிஸ்ட்ரி பயிலும் போது லிட்மஸ் பேப்பரையும்,அதன் BLUE TO RED    OR      RED TO BLUE  நிற மாற்றத்தையும் நினைவிறுத்த முடியாமல் தவித்து நாமும் குழம்பி , நமக்கு கை வந்த கலையான, நம் நண்பர்களையும் குழப்பிக் கொண்டிருந்த வேலையில் நமக்கு கெமிஸ்ட்ரி ஆசிரியர் ‘’BAR” ஐ நினவு படுத்திக் கொள்ளச் சொன்னார்.அது தான் முக்குக்கு முக்கு ஒன்னு இருக்கே.நமக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும். Blue Litmus in ACID turns Red   ; Blue Acid Red   என்று நினைவிறுத்தக் கூறினார். ( BAR – Blue in Alkali  turns Red னு நினைசுட்டானு அப்பாவி முகத்தோடு நாம் கேட்க அந்த ஆசிரியரின் முகத்தில்  எள்ளும் கொள்ளும் வெடிக்க நாம் ஆங்கிலத்தில் உள்ள அத்தனை திட்டுக்களும் அர்ச்சனையாக வாங்கியது ஒரு தனி ட்ராக். (Alkali என்பதற்குப்  BASE என்று பொருள் கொள்க ).  
சில நேரங்களில் சில விதிகளில் ஒரு சிறிய வார்த்தை மிஸ் ஆகியதால் அதனை மதிப்பிடும் ஆசிரியர், அப்பீலுக்காக காத்திருந்து இந்தியப் பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கும் அம்பயர்களைப் போல உடனே ஒரு சுழி போட்டு அரை மார்க் அல்லது ஒரு மார்க் , சில நேரங்களில் முழுவதுமாக குறைத்து தன் தொழில் தர்மத்தை நிலை நாட்டிடுவர். ‘ஒரு திடப் பொருள் திரவத்தில் (தங்கு தடையின்றி) மூழ்கும்போது அது இழப்பதாக தோன்றும் எடை ‘ என ஆர்க்கிமிடீஸ் விதியினை நீங்களும் நீரில் மூழ்கிக் குளிப்பதோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டால் ‘ தங்கு தடையின்றி ‘ என்பது  எப்போதுமே தங்கு தடையின்றி நினைவுக்கு வரும.
சின்ன சின்ன விதிகளையும் அதன் இணைப்பான எண்களையும் நமக்கு நன்கு தெரிந்தவற்றோடு பிணைத்துக்கொண்டு படித்தால் கண்டிப்பாக  மனதில் பதியும் என்பதே நாம் கற்ற இரண்டாம் பாடம்

‘அறத்தான் வருவதே இன்பம்’ என்பதில் அவசரமாக ‘ற’ வை விழுங்கிவிட்டு ‘அத்தான் வருவதே இன்பம்’ என்று எட்டாங் கிளாசில் போர்டில் எழுதி இன்று வரை எங்களின் கேலிப்பேச்சுக்கு முகம் சிவக்கும் நண்பி (பெயர் வேண்டாமே.ப்ளீஸ்) கற்றுதந்த பாடம் கவனக்குறைவைத் தவிர்.
.
மற்றபடி எல்.கே.ஜி  , யூ.கே.ஜி  என்று காலீல் ஷூ மாட்டி , கலர் ,கலராய்
யூனிபோர்ம் போட்டுப் படித்ததில்லை. ஏ பி சி டி எல்லாம் எட்டாம் வயதில் தான் , அட ஆமாங்க சத்தியமா , மூணாங்கிளாஸ்  படிக்கும் போதுதான் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.   
படிக்கும்போது புத்தகப் புழுவாய் மாறி எந்நேரமும் பளு தூக்கியதில்லை. சினிமா பார்க்க வேண்டுமா ? பார்த்துவிடுவோம்.பின்னர் படிப்பில், பயங்கலந்த கவனம் இருக்கும்.எழுதிப்பார்த்தோம் . பேப்பர் இல்லையா? இருக்கவே இருக்கிறது அறையின் சுவர்கள்.அம்மாவோ ,ஹாஸ்டல் வார்டனோ திட்டாதவரை அதுதான் நமக்கு விளையாட்டரங்கம்.காட்டினோம் கை வரிசையை. கண்டதைத் தின்றால் குண்டனாகலாம் , பார்ப்பதை எல்லாம் படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று ஈசாப் நீதிக்கதையில் தொடங்கி  இன்குலாப் ஜிந்தாபாத் , என்று எத்தனை முடியுமோ அத்தனையும்  வாசித்தோம். கம்பனை மட்டுமல்ல கம்பரசத்தையும்  ரசித்தோம்.
எங்கள் பெரியகோட்டை நூலகத்திலே ‘ செய்து பாருங்கள் விஞ்ஞானியாகலாம் ‘ என்று ஒரு புத்தகம் பல செயல் முறை விளக்கங்களுடன் இருந்தது. அதில் எளிதானவைகளை இளம் சிறுவர்கள் முன் செய்து காட்டி இருக்கிறோம் . அதில் ஒன்று. உடைத்து வைத்த ஈர்க்குச்சியில் தவமுனிவர் செய்வதுபோல் தண்ணீரைத் தெளித்து உடைந்த குச்சிக்கு உயிர் கொடுத்தோம். ( இது போல நெறைய சரக்கு தனியா இருக்கு. பின்னூட்டம் வழியாக விசில் அடித்தால் தவறாமல் அஞ்சலில் அனுப்புவோம்)
என்னவோ பெருசா படிச்சத  எதிர்பார்த்து வந்த நீங்க இது  எல்.கே.ஜி குழந்தைக்கு அறிவுரை என்று தெரிந்து, மனம்  நொந்து பிடி சாபம் என   கொடுக்கும் முன்பே  விடு  ஜுட்.
ஜகா வாங்கும்
சங்கரலிங்கம்

Friday, 4 January 2013

படிச்சோம்.. கிழிச்சோம் : பள்ளிக் கூடத்திற்குப் போறோமே..



நான் , நான் என்ன நான் , எங்கள்  ஊர்  இம்புட்டூண்டுகள் எல்லாம் 60 களில் பள்ளியில் சேர்ந்த  கதை பார்க்கலாமா ? வீட்டில் அம்மா கொடுப்பதை தின்று விட்டு கொட்டாங்கச்சியை ஜன்னலில் கட்டி வைத்து  சனல் , அம்மா வின் சேலை கரை அல்லது அப்பாவின் வேட்டிக்கரை , இதில் எதாவது ஒன்று , கிழித்து கனெக்ஷன் கொடுத்து, பழைய நோட்டின் அட்டையை ‘L’ லாக்கி அதன் மேல் வட்டமான ஒரு நசுங்(க்)கிய சோடா டப்பா மூடி  வைத்து விட்டால்  ‘ கௌரி சவுண்ட் சர்வீஸ் ‘ அல்லது பாலா ரேடியோஸ்  ரெடி.அம்மாவும் நீயே அப்பாவும் நீயே முதல்   வெத்திலைய போட்டேண்டி வரை எல்லாவற்றுக்குமே ஒரே தட்டு தான். ரேடியோ போடுற நாம்  சொல்றதுதான் பாட்டு. நாமே தான் பாடுவோம். சிலசமயங்களில் பக்கத்துக்கு வீட்டு இன்னொரு வாண்டு தான் ஸ்பீக்கர். கொட்டங்கச்சி  ஜன்னலில் கட்டி  இருந்தால் ஸ்பீக்கரும்அதன் மேலே ஏறி உக்காந்திருக்கும்.பாடினால் வீடே அதிரும்.  ‘என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெனைப்பு’ இல்லாட்டி ‘ருக்குமணிய பொரத்தாடி ஒக்கார வச்சு’  இல்லாட்டி ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா‘ என்று . நேரங்காலமெல்லாம் இல்லை நமது ஒலிபரப்பிற்கு. அப்படியொரு  சந்தோஷமான நாளில், அம்மாவின் மதிய தூக்கம்  போய்விட்ட வெறுப்பில் அப்பாவிடம் ‘ஏங்க பிள்ளையை பள்ளிகூடத்துல  சேருங்க ‘ என்று அப்ளிகேஷன் போட  இந்த வருஷம் பள்ளிகூடம் திறக்கும்போது சேர்த்திருவோம்னு -அப்பா முடிவெடுத்தார். ஜூலை மாதம் முதல் தேதிக்காக  காத்திருக்கும் இடைவேளியில் நமக்குபுது டிரஸ் ,புது பைக்கட்டு புது சிலேட்டு , மற்றும்  குச்சி எல்லாம்  வாங்கி ஒரே அமர்க்களம் தான் போங்க.

பையன் வளர்ற பிள்ளை,சட்டையும் டவுஷரும் கொஞ்சம் பெரிசா தைச்சிருங்க என்ற அம்மாவின் ஆலோசனையை அப்பா செவிமடுத்து நமது ஊர் ஆஸ்தான டெயிலர் மாசானம் பெரியப்பாகிட்ட  கூட்டிக்கிட்டு போனாக. அவரும் கை அளவு , கால் அளவு,  இடுப்பு  சுற்றளவு  எடுக்கும் பொது சந்தோசம் முகத்தில் பொங்கி வழிந்தது. பக்கத்துக்கு வீடு அக்காகிட்டே , நாலாம் கிளாஸ் படிக்கும் பெரிய சாமி அண்ணே கிட்டேன்னு  எல்லார் கிட்டேயும் எனக்கு புது சட்ட இருக்கே , டவுசர் இருக்கே என்று பீத்திக்கொண்டோம்.

ஜூலை-1 வந்தது. அம்மா காலையிலே குளிப்பாட்டி, நம்மை வெள்ளையாக்கும் முயற்சியில் பாண்ட்ஸ் பவுடரை முகம் பூரா அப்பி புது டிரஸ் போட்டுவிட்டார்கள். சட்டை அது நம்ம ஒரே ஆளுக்கு தானா இல்லே மாற்றான் படத்து சூர்யா போல இன்னொருத்தர் வந்து ஒட்டிகொள்வாரோ என்று பயம். டவுசர் இடுப்பிலே நிக்கமாட்டேங்குது. அம்மா நமதுகருப்புக் கலர் பட்டுக்கயறு எடுத்து அது மேலமாட்டி  சுருக்கி விட்டாங்க. புது பையில ஸ்லேட்டு , குச்சி எல்லாம் எடுத்துக்கிட்டு நம்ம கல்விக்கான முதல் படியை இல்லே அடியை எடுத்துவச்சோம். பின் வந்த நாட்களில் நாம் பட்டனை எல்லாம் பிச்சு  எறிந்துவிட்டு இறுக்கமான முடிச்சொன்றை போட்டு டவுசர் அணிவதற்கு ஒரு புது ட்ரென்ட் உருவாக்கியது , பைக்கட்டை மண்ணில் புதைத்துவிட்டு வயற்காட்டில் பாடம் படித்தது எல்லாம் தனிக்கதை.

நாம் சேர்ந்த பள்ளிக்கூடம் மானாமதுரை பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி,பெரியகோட்டை.  ஒரு பெரிய ஹால , தட்டு தட்டா மரச்சு வச்சு ஒன்னாம் கிளாஸ் , ரெண்டாம் கிளாஸ்னு பிரிச்சு அஞ்சம் கிளாஸ் வரைக்கும் எழுதி வைத்திருந்தார்கள். பள்ளிகூடத்து வாசல்ல தண்டவாளத்து துண்டை கயற்றில் கட்டி தொங்க விட்டிருந்தாங்க.அதுதான் மணி. ஒரு பெரிய அண்ணே காலையில் ஒம்போது மணிக்கு ஒரு ராகத்துல அடிப்பாரு. பின்ன சாயங்காலம் நாலரை மணிக்கு வேற ராகத்தில் அடிப்பார். காலை ராகம் வயித்துல புளியைக்கரைக்கும். மாலை ராகம், உற்சாகம் கலந்த குதூகலம். சரி , நாம் பள்ளியில் சேர்ந்த கதைக்கு வருவோம்.

தலைமை ஆசிரியர் அறையில் நம்மைபோன்று ஒரு பன்னிரண்டு பேர், ஆண்பிள்ளையும், பெண்பிள்ளையும் அவுங்க அப்பா அல்லது அம்மாகூட நின்னுக்கிட்டு இருந்தாங்க. வணக்கண்ணே , வாங்கண்ணே எல்லாம் முடிஞ்சு சேர்க்கை படலம் துவங்கியது..

வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவராய் தலைமை ஆசிரியரிடம் அனுப்பப்பட்டார்கள்.தலைமை ஆசிரியர் ‘ இங்கே வா ,காதை தொடு’ என்றார்.நமக்கு முன்னே சென்றவர்கள் எல்லாம்தலைக்குமேல கையை வச்சு சுத்தி வந்து காதை தொட்டாங்க.

நம்ம முறையும் வந்தது.. நாம தான் அப்போவே புத்திசாலி ஆச்சே. புதுமையாய் செய்வோமே. டக்குனு வலது கையை முகத்துக்கு நேராக பிடித்து இடது காதைத் தொட்டோம்.. ஆசிரியரின் உதவியாளர் கைய தலைக்குமேல சுத்தி காத தொடு என்றார். நமக்கு அம்மா தலைக்கு சுத்திப் போடுவாங்களே , அது நினைவுக்கு வர வலது கையால் தலைக்கு மேல் இரண்டு மூன்று வட்ட மடித்து பின்னர் மறுபடியும் முகத்துக்கு நேராய் தொட்டோம்.தலைமை ஆசிரியரும் , உதவியாளரும் முறைத்துப் பார்க்க அப்பா ‘நம்ம பையன் ரொம்ப சமர்த்துன்னு சொல்லி நிலைமையை குளிர்ப்பித்தார்.உதவியாளர் சிரித்துகொண்டே ( வேற வழி?) நம் கையை தலைக்குமேல் சுற்றி வந்து காதைத் தொட முயற்சித்தார். அப்பவும் இப்பவும் நமக்குத் தான் கை நீளம் இல்லையே.எவ்வளவு முயன்றும் தொட முடியவில்லை.

பையனுக்கு என்ன வயசு?

நாலு முடிஞ்சு அஞ்சு நடக்குது. வர்ற பொங்கலுக்கு அஞ்சு முடியும்.

அஞ்சு முடியனுமே.சரி பரவாயில்லே.அட்ஜஸ்ட் பண்ணி சேர்த்திருவோம்.

தலைமை ஆசிரியரே ஜூலைக்கு அஞ்சு வயசு முடிவது போலஒரு தேதியைப் போட்டுகொண்டார்.நமக்கு பிறந்த நாள் ஜூன் 15 ஆக மாறியது. நீங்க வேண்ணா பாருங்க. 1950ல இருந்து 1970 வரை பள்ளியில் சேர்ந்த 87 சதவீதம் மக்களுக்கு அவர்களது பிறந்த நாள் மே,ஜூன் அல்லது ஜூலை மாதமாகத் தான் இருக்கும்.எல்லாம் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆசீர்வாதம்..

அந்தக்காலத்தில் ஒருகுழந்தை பள்ளியில் சேர்ந்தால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம். அன்று நமக்கு , பச்சைகலர் காகித சாக்லேட் , கலர் கலராய் ஆரஞ்சு மிட்டாய் , கல்கண்டு  , இல்லாவிட்டால் ஒரு வாய் சர்க்கரை என்று ஏதாவது ஒன்று கிடைக்குமே.அன்றும் ஒரு தாம்பாளத்தில் நாம் வாங்கி வந்திருந்த ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டை கொட்டி பியூன் அண்ணா , நம்மையும் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு கிளாஸ் ரூமிற்கும் சென்று எல்லோருக்கும் கொடுத்தார்கள்.. அழகாய் கொண்டை போட்டு , கையில் பிரம்போடு இருந்த டீச்சர்களுக்கெல்லாம் ஒரு பேப்பரில் சிறிய பொட்டலமாய் கொடுத்தார்கள். டீச்சர்களும் , நம் கன்னத்தை செல்லமாக கிள்ளி கொஞ்சினார்கள்.டீச்சர் ரொம்ப நல்லவங்கன்னு நாம் நினைத்தோம். நமக்கு அப்போது தெரியவில்லை இது சிறிய சாம்பிள் தான் என்று. பின்னாட்களில் , வீட்டுபாடம் எழுதவில்லை என்றும் , அடுத்தவன் கூட பேசினோம் என்றும் , இன்னும் பல பல காரணங்களுக்காக கிள்ளும், கொட்டும் பிரம்படியும் பட்டபோது தான் இந்த டீச்சர் நல்லவங்க இல்லேன்னு நாம் திருத்திக்கொண்டோம்.

நம்மைக் கூட்டிச்சென்று ஒன்னாம் வகுப்பிலே அமர வைத்தார்கள். பக்கத்தில் இருந்த சீனியர்  கண் நமது புது பையின் மேலே இருந்தது. நமது பையும் ரொம்ப நல்லாவே இருக்கும் . அழகாக ஒரு குழந்தை படம் போட்டு  கீழே மணிச்சரம் போல நூல் தொங்கவிட்டிருக்கும். இந்த நூலை படித்து இழுத்து பெரிதாக்கி காண்பித்து நமக்கு டென்ஷன் ஏற்படுத்துவார் சீனியர் என்று அப்போது தெரியவில்லை.இப்படியாகத்தான் நமது ஸ்கூல் அட்மிஷன் நடந்து முடிந்தது.

பள்ளியுள்ளும் , வெளியிலும் , நமது , நம்  தோழர்களது , நமது சீனியர்களது லூட்டி & சாகசங்களை இன்னொரு பதிப்பில் பார்க்கலாமா ?

வணக்கத்துடன்

சங்கரலிங்கம்

 

பி.கு: இந்த பதிப்பு கொஞ்சம் பெரிதாகி விட்டது. இன்றைய நிலையில் ஒருகுழந்தையை ‘LKG’ல்  சேர்ப்பதற்கு சென்னையில் ஒருவர் பத்து லட்சம் ‘அன்பளிப்பு' கொடுத்தார் என்ற தகவலின் தாக்கமே இந்த பதிப்பு. 60 களில் ‘school admission’ என்பது எவ்வளவு எளிதாக இருந்தது!  இன்றைய தலை முறைக்கு இது தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிப்பு.