வாங்க........ பொங்க வைக்கலாம்.
என்னங்க .பொங்கலோ பொங்கல் என பொங்கலும் வந்துவிட்டது. அட ஆமாங்க.. நமக்கும் ஒரு வயசு கூடிருச்சு. இந்தப்பொங்கலை சிவகங்கையில்கொண்டாட இருக்கிறேன். ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பெரும்பாலும் பொங்கலை கொண்டாடுவது வீட்டில் தான்.காஸ் அடுப்பில் ‘எவர் சில்வர் ‘ பாத்திரத்தில் , கடையில் வாங்கிய கர்நாடகா பொன்னி அரிசியில், புத்தாடையுடன், என்னைக் கை பிடித்த நல்லவள்(ர்) சர்க்கரையும் நெய்யும் தாராளமாகச் சேர்த்து இறக்கிய பொங்கலை இறைவனுக்குப் படைத்த பின்னர் நமக்கும் நம் பரிவாரங்களுக்கும் பரிமாறுவார். கூடவே ஒரு ஸ்பெஷல் அட்வைஸ் நமக்கு மட்டும் தான். ‘உங்களைத்தான் , சர்க்கரை நெறைய போட்டிருக்கேன், பொங்கலைக் கொஞ்சம் கம்மியா சாப்பிடுங்கள் ’.நாமும் சரி என்று சொல்லி நம் இலையில் இட்ட பொங்கலைக் காலி செய்துவிட்டு, இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று ஏக்கத்துடன் பார்ப்போம். ம்.. ஹூம் ஹுஹும். நம்ம பக்கம் பார்க்கவே மாட்டாங்க. நாம தான் ஐடியா அருணாச்சலம் ஆச்சே. நம்ம வாரிசுகள் கிட்ட ‘அப்பாவுக்கு ஒரு வாய் கொடுங்கடா’ என்று கேட்டு ஒவ்வொருவரிடமும் ஒரு வாய் வாங்கி இரண்டாவது கோட்டா முடிந்துவிடும்.இன்னும் கொஞ்சோண்டு வேணுமே, என்ன செய்யலாம்? மூளையில் ஒரு பளிச். ‘என்ன தான் தட்டு நிறைய சாப்பிட்டாலும் நீ ஊட்டிவிடுறதுல ஒரு தனி ருசி ’ என்று ஐஸ் வைக்க நம் முந்நாள் காதலி , ஆமாங்க இந்நாள் மனைவி அப்படியே உருகி ஒன்றுக்கு இரண்டு முறையாக ஊட்டிவிட நமது மூன்றாம் கோட்டாவுடன் பொங்கல் பண்டிகையே முடிந்துவிடும். அப்போது ஏனோ நம் மனம் பின்னோக்கி 6௦ - 7௦ களுக்கு பயணித்துவிடும். இளைப்பாறும் இடைவெளிகளில் தான் எத்தனை மாற்றம். நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிய பயணத்தில் நாம் சந்தித்தவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமா?
நமக்கெல்லாம் மார்கழி மாதம் முதல் நாள், தெக்கூர் சிவன் கோவிலில் கட்டிய கூம்பு குழாயிலிருந்து வரும் ராஜா ஒலி பரப்பு சேவையின் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ நம்மை காலையில் தட்டி எழுப்ப நமது பொங்கல் count down தொடங்கிவிடும். அதிகாலை எழுந்து விறகு அடுப்பில் அம்மா போட்டு வைத்த வெந்நீரில் குளித்து விட்டு, வீட்டின் முன்னே காத்திருந்து , பக்தியுடன் வரும் தெக்கூர் பஜனைக்குழுவில் கலந்து ‘ கந்தன் திரு நீரணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்’ எனப் பாடி பக்த கோடிகளில் ஒருவனாக இந்த சங்கரரும் சங்கமமாகிவிடுவோம். எஞ்சி இருக்கும் இரண்டு வீதிகளில் பஜனை பாடி சிவன் கோவிலைச சென்றடையும் நம் குழு. சோமு பெரியப்பா சொக்கநாதரின் சந்நிதியில் ‘திருவிளையாடல் காணீரோ’ என்ற திரைப்பாடலை தெய்வீக ராகத்தில் பாடி, தீபாராதனையுடன் பஜனை முடியும். பங்கெடுத்த நாங்கள் அனைவரும் வரிசையில் நின்று கையில் வழித்து வைக்கும சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை ருசி பார்க்க நாம் பொங்கல் சுவைக்கும் நிகழ்வும் உதயமாகிவிடும்.
அந்த மாதம் முழுவதும் ஒரே பரப்புதான். அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று கவலை. பொங்கலுக்கு என்ன புது டிரஸ் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு, மாடுகளுக்கு மஞ்சியில் கழுத்துக்கட்டி பின்னவேண்டும் என்ற ஆர்வம் , இந்த வருடம் நம் வீட்டு வண்டி மாடுகளுக்கு கொம்பில் தி.மு.க. வர்ணம் பூச வேண்டுமே என்ற வேண்டுகோளுடன் , தினம் கிடைக்கும் கோவில் பிரசாதம் , அதுவும் 22 நாட்களுக்கு குறையாமல் சர்க்கரைபொங்கல், ஆகிய எல்லாம் கலந்து மார்கழி முழுவதுமே ஜாலி தான்
இதற்கிடையில் நமக்கு புது டிரஸ் தயார் செய்யும் பணி துவங்கிவிடும். கனமான துணியில் டவுசருக்கும் , கட்டம் போட்ட டிசைனில் சட்டைக்கும் துணி எடுத்து மாசானம் பெரியப்பாவிடம் கொடுத்திடுவோம் ,பொங்கலுக்கு மூன்று நாள் முன்னதாக கொடுத்து விடுங்கள் என்ற வேண்டுகோளுடன். அதென்னவோ தெரியவில்லை , எல்லா டைலருமே பண்டிகை தினத்தின் காலை அல்லது முதல் நாளிரவு 12 மணிக்குத் தான் தருவார்கள்.அதெல்லாம் தொழில் ரகசியம். பின்னே, மூணு நாளைக்கு முன்னாடி கொடுத்திட்டா நீங்க முப்பத்தாறு வாட்டி திரும்ப எடுத்துக்கொண்டு வந்து நோட்டை சொல்லி நொங்கேடுப்பீங்களே
மாடுகளுக்கு மஞ்சு விரட்டிற்கு கழுத்துக்கட்டி ரெடி பண்ண வேண்டுமே. சிறிய கற்றாழை இதழ்களை வெட்டி கொட்டங்கச்சியால் அதில் உள்ள சதைப்பாகத்தை வளித்து எடுத்து மிச்சமிருக்கும் மஞ்சி எனப்படும் நார் பகுதியைச் சேமிக்கத் தொடங்குவோம். இன்னும் சிலதொழில் நுட்ப வல்லுனர்கள் ‘மாஸ் ப்ரடக்க்ஷன் ‘ முறையில் பெரிய கற்றாழை இதழ்களை கட்டாக வெட்டி வயலிலோ , வாய்க்காலிலோ சேற்றில் புதைத்து பதப்படுத்தி கல்லில் துவைத்து கட்டுக்கட்டாய் ‘மஞ்சி’ தயார் செய்வார்கள். பழுப்பு நிறத்தில் மஞ்சி இருந்தால் பனியில் போடு வெள்ளையாகிவிடும் என்ற பெரிசுகளின் பேச்சைகேட்டு, வெண்ணிற மஞ்சி ரெடியாகிவிடும்.கழுத்துக்கட்டி செய்வது ஒரு பெரிய கலை. ஒரு கொத்து இழையை அழகாக தொடையில் வைத்து திரித்து கயறாக்கி இரட்டையாக்கி இடையில் சிறிய கொத்தை பூ பின்னுவது போல பிண்ணி சிக்கெடுத்து காய்ச்சி எடுத்த கலர் சாயத்தில் ஒரே சீராக கலர் பிடிக்கும் வண்ணம் தோய்த்து எடுத்து காய வைத்தால் மாட்டுக்கு அணியும் மஞ்சி கழுத்துக்கட்டி ரெடி. நாமும் கற்றாழை சீய்ப்பில் துவங்கி, யாராவது ஊறப் போட்ட கற்றாழைக்கட்டை கிளப்பிக்கொண்டு வந்து வெள்ளை மஞ்சி தயாரித்து கொடுத்துவிடுவோம். .
வீட்டுக்கு வெள்ளை, ஜன்னலுக்கு பெயின்ட், கதவுக்கு வார்னீஷ் அடிப்பது எல்லாம் அண்ணன்களின் வேலை. ஒரு அடி உயரத்துக்கு காவியும் வெள்ளையுமாக சுவர்களில் பட்டை அடிப்பது அநேகமாக நமது வேலையாகத்தான் இருக்கும். நமக்கிட்ட பணியை நாம் முடிக்காமல் விட சிறிய பேரத்தில் நமது உடன் பிறந்தோர் முடித்துவிடுவர். பேரம் என்னவா? பொங்கல் ரிலீஸ் படத்துக்கு நம்ம காசுல தான் டிக்கெட். பொங்கல் ரிலீச என்றதும் நேற்று வந்த துப்பாக்கி , நாளை வரும் , மற்ற நாள் வரும் என்று கூடங்குளம் மின்சாரம் போல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் விஸ்வரூபம் போல புதிய படம் என நினைத்து விடாதீர்கள். எல்லாத்தியேட்டர்களிலும் சவுண்ட் டிராக் தேய ஓடி , இனிமேல் பார்க்க ஆளில்லை என்ற நிலையில் நமது ஊருக்கு அருகில் இருக்கும் டெண்ட் கொட்டகையில் தஞ்சம் புகும் ‘மர்மயோகி’ மகாதேவி, லவகுசா என்பனவற்றை தவிர்த்து, அனபே வா , ஆயிரத்தில் ஒருவன் , மாட்டுக்கார வேலன் என்ற மாடர்ன் படங்கள் தான்.
மாடு இல்லாதவர்கள் தைபொங்கலை முதல் நாள் கொண்டாட இரண்டாம் நாள் மற்றவர்கள் பொங்கல் வைப்பார்கள். நம் வீட்டில் ரெண்டு நாளுமே பொங்கல் தான்.
மூன்று தலைமுறையாய் எங்களுக்கு சோறு போடும், கோழி பொறுக்கி நிலத்தில் விளைந்த மனம் மாறாத புது நெல்லை அரவை மில்லுக்கு எடுத்துச்சென்று அரிசியாக்கி விடுவோம், பொள்ளாச்சியில் இருந்து நமது ஊருக்கு புலம்பெயர்ந்த ஆலையில் நமது கரும்பை அரைத்து , சோடா , மற்றும் வீசசு பொடி போடாமல் வீட்டுக்கென தயாரித்த தனிச்சர்க்கரையும் ரெடி, நமது தோப்பில் இரண்டு நாள் முன்னதாக வெட்டிய தேங்காய் ,முருங்கை இலை போட்டு காய்ச்சி எடுத்த பசும் நெய் என எல்லா மூலப்பொருள்களும் உள்நாட்டுத் தயாரிப்பு தான் . கடையிலிருந்து வாங்குவது முந்திரிக்கொட்டையும் உலர்ந்த திராட்சையும் தான்.
பொங்கல் வைப்பதே தனி அழகு. வீட்டின் நடுக்கூடத்தில் ஆற்று மணலை அரையடி உயரத்திற்கு கொட்டி அமைத்த மேடை , அதன் மேல் புதியதாக வாங்கிய களிமண் அடுப்பு ,காவி வெள்ளை பட்டையுடன். பொங்கல் வைப்பதற்கென்று அம்மா புதுப் பெண்ணாக வந்த பொது கொண்டு வந்த வெங்கலப்பானை அதில் மஞ்சள் கிழங்கு மற்றும் பொங்கல் பூ செடி கட்டி அடுப்பில் ஏற்றி , அன்று கறந்த பசும்பாலை ஊற்றி பொங்கும் வரை அடுப்போரத்தில் காத்திருந்து பொங்கும்போது , சங்கொலித்து பொங்கலோ பொங்கல் என அப்பா , அம்மா , அண்ணன்கள் , அககா , தம்பி என அனைவருமே கூவுவதே தனி சந்தோஷம்.
இன்னும் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் உண்டு. இரண்டுமே மாட்டு பொங்கலன்று நடப்பவை.முதலாவது எச்சி கழித்தல். அணைத்து உணவு வகைகளையும் தலை வாழை இலையில் தழுகையாகப் படைத்து இருப்பார்கள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஒரு பேண்ட் வாத்தியக்குழு அமைத்து ஒவ்வொரு வீட்டிற்கும விசிட் அடிப்போம். கையில் கிடக்கும் தாம்பாளம், தகர டின், வெண்கலச சொம்பு இவைஎல்லாம் தான் வாத்தியக் கருவிகள்.டங் டங் என்று அடித்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் பட்டாளம் நுழையும். ஒருவர் செந்தணலை, உடைத்த புதுப்பானை ஓட்டில் ஏந்திகொள்ள முன்னதாகச்செல்லும் முதியவர் ‘ பட்டி பழுக ,பால் பானை பொங்க , சீதேவி வர , மூதேவி போக என பாட , நாமும் கோரஸாகப் பாடி வீடெங்கும் புனித நீரை தெளிப்போம். தப்பித்தவறி முறைப்பெண்கள் நம் கண்ணில் பட்டால் அவர்கள் மேலும் சிறிது தெளித்து நம் அன்பை வெளிப்படுத்துவோம். நமக்கு ரகசியமாகக் கிடைக்கின்ற பாராட்டு என்ன தெரியுமா? ‘மூஞ்சியப்பாரு மொகரையப்பாரு’
இரண்டாவது மஞ்சு விரட்டு.. இது ஏதோ அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வாடிப்பட்டு மஞ்சு விரட்டு என்கின்ற ரேஞ்சுக்கெல்லாம் கற்பனை வேண்டாம்.
தெக்கூரின் மையமான நமது பெரிய வீட்டின் முன் ஊர் கூடிவிடும் முதலாவதாக , நமது தாத்தா முத்து மேனாட்டாரின் காளைகள். பக்கத்துக்கு ஒருவராக இரண்டு காளைகளையும் நான்கு பேர் பிடித்துக்கொண்டு ஓடுவார்கள். அதன் பின்னர் ஊரில் உள்ள அனைத்து மாடுகளும் ஒட்டிவரப்படும். நாமும் நமது வீட்டிலிருக்கும் கன்றுக்குட்டியை பிடித்துக்கொண்டு ஓடி வருவோம். ஒரு அரை மணி நேரம் ஒரே ஜாலிதான். தியேட்டரில் படம் பார்க்கும்போது பாப்கார்ன் கொரிப்ப்துபோல் மஞ்சு விரட்டுக்குக்காக காத்திருக்கும் வேலையில் ‘நண்டு சிண்டுமாய் இருக்கும் அனைவரிடமும் இரண்டடி கரும்புத்துண்டு வேகமாக கரைந்துகொண்டிருக்கும்
இரண்டு பொங்கல் நாளுமே. மதியம் , இரவு என இரு வேளைக்கும் சர்க்கரைப் பொங்கல் தான் பிரதான உணவு. இனிப்பு திகட்டாமல் இருக்க பூசணிக்காயை வெட்டி செய்த புளிக்கறி. இவை எல்லாம் மாதவனின் ‘பட்டிக்காடா பட்டணமாவிலோ’ அல்லது பாரதி ராஜாவின் ‘பதினாறு வயதினிலே’லோ வருவதோ அல்ல. இவை எல்லாமே நம் கண் முன்னால் நடந்தவை. நாமும் பங்கெடுத்துக்கொண்டது. இவைகளை எல்லாம் நம் இளசுகளுக்கு சொல்லும்போது ‘ அப்பா ரொம்ப ஓவராப் பில்டப் கொடுக்கிறாங்க’ என்று கேலி செய்து சிரிப்பார்கள். நாமும் அடுத்த பொங்கலுக்கு தெக்கூர் செல்வோம் , நீங்களும் பார்க்கலாம்என்று சொல்லி சொல்லி 25 வருடங்கள் ஒடிவிட்டன.
தெக்கூருக்குச்சென்று மீண்டும் ஒருமுறை பார்த்தால் என்ன? வேண்டாம் சார், காவியங்கள் காவியங்களாகவே இருந்து விட்டு போகட்டும். கடைவிரித்து கவுரவத்தைக் குறைக்க வேண்டாமே! உழைத்து களைத்துப்போன மக்கள் ஊரை விட்டுச் செல்ல, படித்துக் களி(கிழி)த்தவர்க்கள் பட்டணத்தில் செட்டிலாக, இளைத்துப்போன தெக்கூரில் இருப்பது என்னவோ குருட்டு அரசியலும், வரட்டுக் கவுரமும் , முரட்டுப் பிடிவாதமும் தான்.
இன்றைய நிலையில் பொங்கல் என்பது ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சீனி மற்றும் நூறு ரூபாய்களில் முடிந்து விடும் என்பது அரசின் கணக்கு.
சார், போரோட தின்ன மாட்டுக்கெல்லாம் புடுங்கி போட்டா கட்டுப்படியாகுமா?
அனைவருக்கும் என் இதயங்கனிந்த பொங்கல் நல வாழ்த்துக்கள்.
அன்புடன்
சங்கரலிங்கம்
No comments:
Post a Comment