படிச்சோம், கிழிச்சோம் - பகுதி 3
படிச்ச பச்சோந்தி பாலைவனத்துக்குப் போச்சாம்
படித்தவனாயிற்றே நாம் . படித்துக் கிழித்தவனாயிற்றே நாம்.
நம்மைப் போய் பச்சோந்தி என்கின்றானே .. எப்படி இது நியாமாகும் ? எப்படி
நேர்மையாகும்? இதைக் கேட்க யாருமே இல்லையா? இந்தப் புலம்பல் கோஷ்டியில் ஒருவரா நீங்கள்?
அப்போ நீங்கள் தான் சரியான ஆள். வாங்க விவாதிப்போம்.விவரமாய்ப் பார்ப்போம்.
முதல்ல , நீ படிச்சதுக்கும் , நாங்க மேலே படிச்சதுக்கும் பச்சோந்திக்கும் , பாலைவனத்துக்கும் என்னடா சம்பந்தம்னு கேக்குறீங்கல.தமிழ்த் திரைப்படங்களில் இறுதிக்காட்சியில் ஒருவர் வந்து அந்தப் படத்தின் தலைப்பை இணைத்து ஒரு வசனம் பேசிவிட்டுப் போவார். அதுவரை அந்தத் தலைப்பை ஏன் வைத்தார்கள் என்று முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தவர்களும் , நானும் ஒருவன் தான் அதில் , ஒரு பெரு மூச்சுடன் இருக்கையை விட்டு எழுந்து செல்வர். அது போல நீங்க ஆகி விடக் கூடாதில்லையா? அப்புறம் நம்ம எழுதுறதை , சரி , சரி கிருக்கிரத்தை வாசிக்க ஆள் வேணுமே. அதுனால முதலிலே இந்தத் தலைப்பை விளக்கி விட்டு பின்னர் விவரமாக சொல்லுவோமே.
நான் இதைப் பாலை வனப் பூமியில் இருந்து எழுதுகிறேன். அப்ப ‘பாலை வனம் ‘ வந்திருச்சா? இனி பச்சோந்தியைத் தேடுவோம்.மலையின் கற் பாறையில் இருந்தால் மலைக்கல்லின் நிறம் , மரத்தில் இருந்தால் மரத்தின் நிறம் , இலையில் இருந்தால் இலையின் நிறம் என இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக் கொள்ளுவதே பச்சோந்தியின் குணம். அப்பாடா , பச்சோந்தியும் வந்திருச்சு. இனி ‘ படிச்ச ‘ தான் வரணும். எவ்வளவோ விளக்கி இருக்கிறோம் . பித்தக் கோரசு , பிசிகல் கெமிஸ்ட்ரி , ஆட்டம் பாம் , அடுப்பங்க்கரை சிம்னி என்று அனைத்திற்கும் சைன்டிபிக் விளக்கம் சொல்ற நாம் இதைச் சொல்ல மாட்டோமா என்ன?.
ஆனா , படிச்சவன் யாராவது வேணுமே... எங்க ஊர்ல நான் சின்னப் பிள்ளயா இருந்தப்போ அவன் என்ன படிக்கிறான்னு கேட்டா , PUC, BA , MA ன்னு சொன்னா தெரியாது. என்ன பன்னிரெண்ட்டாப்பா ,பதினஞ்சாப்பா படிக்கிரீக ன்னு தான் கேப்பாங்க. அப்புறம் ஒன்னாப்புல இருந்து படிச்ச வருஷங்களைக் கூட்டித் தான் சொல்லணும். இருபத்தி ஒன்னாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன்னு சொன்னா ரெண்டு விதமா அடுத்து வரும்.
பாத்து தம்பி , சும்மா படிச்சிக்கிட்டே இருக்காதீக. மூளை குழம்பிப் போயிடும், சீக்கிரம் வேலை வெட்டியப் பார்த்துட்டு கல்யாணத்தப் பண்ணுங்க –இது ஒரு வகை. இதுக்கு நாம மனசுக்குள்ளே, பிள்ளையப் பெத்த சிவசுப்ரமணியமோ , இல்லே பொண்ணைப் பெத்த உலகநாதானோ தாண்டா கவலைப் படனும், ஒனக்கு எதுக்குடா அந்தக் கவலைன்னு சந்தானமாய் கலாயித்து விட்டு சொல்லிக்கிட்டு , வெளியே சந்தனமாய்“‘இல்லை பெரியப்பா , நாம் இன்னும் படிச்சு பெரிய வேலைக்குப் போகணும்” னு சொல்லிட்டு நடையக் கட்டிருவோம் , இல்லாட்டி அடுத்து நீங்க கலக்டர் ஆவீங்களான்னு கேப்பாங்க. என்னமோ ரெடியா வச்சுக்கிட்டு , வாடி மாப்பிள்ளைன்னு சொல்லி நம்ம கையில யாரோ கலெக்டர் வேலை ஆர்டர் கொடுக்கப் போறது மாதிரி.
இன்னோரு வகை , ஆத்தா இந்தப் பிள்ளை சரியான மக்காம் , அதுதேன் பத்தாப்பு படிச்சதும் வெளியூர்ல கொண்டு போய் படிக்க வைக்கிராக, பெயிலாகி , பெயிலாகிப் படிச்சுக்கிட்டே இருக்காம் னு ஒரு டிக்கட்டு சொல்ல , அடுத்த டிக்கட்டு ‘ ஆமக்கா , எங்க மாமா மகன் கோபாலு ,டவுனுக்குப் போயி மூணு வருஷம் தேன் படிச்சாக. பட்டம் எல்லாம் குடுத்தாகலாம் , போட்டா புடிச்சுக் கூட வீட்டுல பெரிசா மாட்டி இருக்காக.. இந்தக் காந்தி அத்தை மகன் என்னடான்னா பெரிய பத்து பெரியகோட்டைல முடிச்சுப்புட்டு , பத்து வருஷமா வெளியூர்ல படிச்சிக்கிட்டே இருக்காக. கருமாத்தூரு , மதுரை, தூத்துக்குடி , பெங்களூருன்னு ஊர் ஊரா போயிக்கிட்டு இருக்காக. ஒரு எடத்தில நறுக்கினு உக்காந்து படிக்க மாட்டேங்கிராக..ஒரு போட்டோ கூட வீட்டுல மாட்டல. சும்மா டூப் விட்டுக்கிட்டு திரியிறாருக்கா. பாத்து , தங்கச்சியப் பொண்ணு, கிண்ணு கேட்டா கொடுத்திராதீக. அவுக கணிப்பு நம்மைப் பற்றி ... ம்ம்ம்...
ஆளுக்காளு அவுங்க அபிப்ராயத்த சொல்லட்டும் , நமக்கென்னனு , கவலைப் படாம , இருபத்தி ஒன்னாப்பு படிச்சு ( 11+1+3+2+4) , எங்கம்மா காந்தி, பட்டத்து மேல பட்டமா வாங்கினவன் என் மகன்னு பெருமைபட்டது போல P.U.C , B.Sc , M.Sc , Ph.D ன்னு பட்டங்களும் வாங்கிட்டோம்.
அப்பாடி , படிச்சவன்னும் வந்திட்டானா?
படிச்சவனும் வந்திட்டான் , பச்சோந்தியும் வந்திருச்சு , பாலை வானமும் வந்திருச்சு. ஆனா CID சங்கர் படத்தில வர்ற மாதிரி காட்சிகள் ஒன்னுக்கொன்னு ஒட்டலையே. ஏன்? எப்பிடி?
அதைத் தெரிஞ்சிக்கனும்னா, ஒரு டீயும் பண்ணும் சாப்பிட்டுட்டு தொடருவோம். சின்னதா ஒரு பிரேக்........
*
&
$
ஆச்சு , துபாய்க்கு வந்து 20 வருஷமாச்சு. 94 ல 'பம்பாய் ல வேலை பார்த்தப்போ ,இந்த ஆயில் கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட , .நம்மையும் நம்பி இங்கே விசாவைக் கொடுத்து , வேலையைக் கொடுத்துட்டாங்க . 20 வருஷமா ஒரே கம்பெனிக்கு உழைச்சு களைச்சுப் போயிட்டோம் . போதும்னு சொல்லி போகலாம்னா, முடியலே. ஏதோ ஒன்று தடுக்கிறது. என்ன அது? விட்ட குறை தொட்ட குறையாக இந்த மண்ணைப் பிரிய முடிய வில்லையா? இந்த மண்ணின் மக்களைப் பிரிய முடியவில்லையா ? மண்ணைப் பிரிவதில் வருத்தம் தான். வளம் கொழிக்க வைத்த மண். மனிதர்கள் எப்படி?,.. பார்த்தால் பயங்கரமாக இருப்பான் பாக்கிஸ்தான் காரன், அடி மடியில் வைத்திருக்கும் சவுக்கால் அடித்து அடிமைப்படுத்துவான் அரேபியாக்காரன் , கடித்தே குதறிடுவான் கருப்பான ஆப்பிரிக்காகாரன் என்று தமிழ்த்திரைப்படங்களைப் பார்த்து மனதில் பதிந்திருந்தவைகள் யாவும் சுக்கு நூறாய், சூறைத் தேங்காயாய் உடைந்து நொறுங்கியது இங்குள்ள மனிதர்களிடம் பழகிய பின்னே. மனிதன் எங்கிருந்தாலும் மனிதனே , அவனுக்குள் மனிதம் , மனிதாபி மானம் , மானம் , சூடு , சொரனை என்று எல்லாமே கலந்து தான் இருக்கிறது. அதுபோல எண்ணற்ற நாட்டினர் இங்கே இருந்தாலும் எல்லோரும் சராசரி மனிதர்களே. அவர்களுக்கும் இதயம் இருக்கிறது. சில பேருக்கு இரும்பாய் இறுகி விட்ட இதயம். பலருக்கு பனிக்கட்டியாய் உருகும் இதயம். எரிகின்ற கொள்ளிக் கட்டைகளில் எல்லாக் கட்டையுமே சுடத் தான் செய்யும். இலை விட்டு உதிர்ந்த மல்லிகைகளில் எல்லாமே மணக்கத்தான் செய்யும்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியாராகவும் , எட்டாம் வகுப்பு படிக்கும் போது தலையில் கொட்டி சொல்லிக் கொடுக்கும் தமிழாசிரியரகவும் பத்தாம் வகுப்பில் கிளார்க் , பதினஞ்சாம் வகுப்பில் ஆபீசர் , பதினெட்டாம் வகுப்பில் கலெக்டர் , இருபத்தி ஒன்னாம் வகுப்பில் , இந்தியாவின் விஞ்ஞானி என்று கற்பனைகளில் பல நிறம் , பல வடிவம் எடுத்த இந்தப் பச்சோந்தியைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமே.
அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வி , பின்னர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வி , குருத்துவம் கற்றுக் கொடுத்த கிறித்துவக் கல்லூரியில் (அருளானந்தர் கல்லூரி , கருமாத்தூர் ) பி.யூ. சியும் என முடித்து ஆயிரமாயிரம் 'இஞ்சினீயர் ' கனவுகளோடு மிதந்த காலம் . தந்தையும் அரசியலில் ஓரளவு அறியப்பட்டவராக இருந்ததனால் கனவு மெய்ப்படும் என்று காத்திருந்தோம் . கட்டிக்காத்த , பட்டி தொட்டிகளில் பாமரனுக்கு பக்குவமாய் எடுத்துச் சொல்லி கட்சி வளர்த்த தந்தையும் காத்திருந்தார் வாய்ப்புக்காக , மைந்தனுக்கு உதவிட வேண்டுமென்று. மனம் இல்லை அன்றைய காலக் கட்டத்தில் மந்திரிமார்களுக்கு. படிப்பதற்கு விலை கேட்கும் பொறியியல் கல்லூரிகள் அன்று தமிழ்நாட்டில் இல்லை .பக்கத்து மாநிலங்களில் பணம் கொடுத்து இடம் வாங்க தந்தையிடம் பணமும் இல்லை. அன்று அவரிடம் இருந்தது நல்ல மனம் மட்டுமே.
ஏமாற்றப்பட்ட ஏக்கத்தில் , ஏற்பட்ட கோபத்தில் ,தனியே இல்லாமல் தாகியார் துணையுடன் மந்திரிமார்களிடம் அலுத்துக் கொண்டார் தந்தை. அரசியலில் அடித் தொண்டனுக்கு கிடைப்பதென்ன அல்வா தானே.மந்திரிமார் மாதவரும் , நாவலரும் மறு வருடம் பார்ப்போமென பொறுப்பாய் கூறினரோ அன்றி போக்குக் காட்டினரோ? வெட்டியாகி விடுவோம் வீட்டில் இருந்தால் என அஞ்சி , வேதியல் படிக்க அமெரிக்கன் கல்லூரியில் விண்ணப்பித்தோம். தங்கமான முதல்வர் தங்கராசு அய்யா அவர்கள் ,தயக்கம் சிறிதும் இன்றி இடம் கொடுக்க ஆஸ்டலில் தங்கிப் படித்தோம். கூடவே எண்ணற்ற ஆசைகளையும் வளர்த்தோம். பெரியகோட்டைப் பள்ளிக்கு ஆசிரியர் , பேங்கிலே அக்கௌன்டன்ட் , பேச்சாளராகி அரசியலில் ,அதிகார வர்க்கத்தில் ஒருவன் என எத்தனையோ வடிவங்களை கனவூற்றி வளர்த்தோம். கற்பனையில் மிதந்தோம். கவிதை , கதை கட்டுரை என்று இரண்டு ஆண்டுகளைக் கழித்து இறுதியாண்டில் விழித்துக்கொள்ள எடுத்தோம் ,படித்தோம், எழுதினோம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றோம்.
அப்பாவின் வேண்டுகோள் வைக்க , அதனை அர்த்தம் மாறாமல் தாகியார் சித்தப்பா தயக்கமின்றி வழி மொழிந்திட , பண்பாளர், பாமரனின் அன்பாளர், ஆத்திகர் அய்யா பழனி வேல் ராஜன் அவர்களின் ஆதரவில் நமக்கு அகப்பட்டது பட்ட மேற்ப் படிப்பு.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சேர்ந்து எம்.எஸ்.சி படித்தோம் , முடித்தோம். கல்வித் தகுதி கூடியதால் கனவுகளில் நமக்கு புரமோஷன் தான். பள்ளி ஆசிரியர் கல்லூரி ,ஆசிரியராக , பேங்க் அக்கௌன்டன்ட் , பெரிய ஆபீசராக....... ..கனவில் வட்டம் அகன்றது .
அண்ணா திமுக, அனைத்திந்திய அண்ணா திமுக வானது போல , பெரியகோட்டை சங்கரலிங்கம் பெங்களூர் சங்கரலிங்கம் ஆகி விட்டான் பி.எச்.டி படிக்க பெங்களூர் சென்றதனால்..ஆசிரியர் , ஆபீசர் கனவெல்லாம் ஆராய்ச்சியாளருக்கு மாறி , ஆல்வா எடிசன் , ஐன்ஸ்டீன் என்று திசை திரும்பியது.கூடவே அமெரிக்கக் கனவுகள் .
மற்றவர் சிபாரிசு ஏதும் இல்லாமல் மத்திய அரசு வேலை 1984 இல் கிடைத்தவுடன், அண்ணா.., அறிஞர் அண்ணா ஆனது போல் , கருணாநிதி.., கலைஞர் கருணாநிதி ஆனது போல் சங்கரலிங்கம் ,சைன்டிஸ்ட் சங்கரலிங்கமாக மாறியாயிற்று.Central power research Institute (CPRI) ,Bangalore. இது மத்திய அரசின் நிறுவனம் . மின்சாரத்தோடு இணைந்த அனைத்து தொழில்களுக்குமான ஆராய்ச்சிக்கூடம் .எரிபொருள் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம்பெற்றவன் இந்திய ஏவுகணைத் தளங்களில் எரிபொருள் பொறுப்பாளராக இருந்திருந்தால் பொருத்தம். ஆனால் சேர்த்ததோ CPRI இல் எலக்ட்டிரிகல் என்ஜினீயர்கள் பிரதானமாய் இருக்க,என்னைப் போன்ற ஏனையோர் இரண்டாம் சிட்டிசன் தான் இங்கே.
ஐந்தே வருடத்தில் அரசு வேலை அலுத்துப் போக எடுத்து விட்டோம் ஓட்டம் இந்தியாவின் வணிகத் தலை நகராம் மும்பைக்கு. அங்கே கரெண்டு எண்ணை (Transformer oil ) தயாரிக்கும் கம்பெனியில் தரக் கட்டுப்பாடு மேலாண்மையாளராக சேர்ந்து, இரண்டே வருடங்களில் ,தரக் கட்டுப்பாடு , ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ( R&D ), தொழில் நுட்ப சேவைகள் என மூன்று பிரிவுக்கும் தலைவராகி மேலாண்மையின் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தோம்.எல்லாமே சரிதான், இந்தியாவின் எல்லா மூலைக்கும் சென்று வந்தோம். மாதம் இரண்டு அல்லது மூன்று பயணம். பின்னே என்ன? விதி வலியது.அதை யாரும் வெல்ல முடியாது..ஆண்டவாளைப் பாக்கலியோ... . டேய் ட்ராக் மாறாம சீக்கிரம் முடி டா . சாரிங்க... சரிங்க.
இப்போது போல அப்போது தொலைத் தொடர்பு வசதிகள் இல்லை. வீட்டுப் போன் இணைப்பிற்காக காத்திருப்போர் பட்டியலில் கடைசி வரிசையில் நாம். செல்லுமிடம் எல்லாம் கூட வரும் செல்போனும் இல்லாத நேரம். போதாக்குறைக்கு தீவிர வாதம் தலை விரித்து ஆடிய காலம். பாபர் மசூதி இடிப்பு. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் மும்பையில் பதினோரு இடங்களில் குண்டு வெடிப்பு. முடித்திடுவோம் மும்பை வாசம் என முடிவெடுத்துக் காத்திருந்த போது காற்றும் வந்தது.கதவைத் தட்டியது அமீரக வாய்ப்பு. அன்னையையும் பிள்ளையையும் சிவகங்கையில் விட்டு விட்டு அமீரகம் வந்தோம். பணியில் சேர்ந்தோம். விட்டு விட்டு வந்த சொந்தத்தை இரண்டாண்டுகளுக்குப் பின்னர் இழுத்துக் கொண்டோம் நம்மிடமே.
பள்ளியில் முதல்வனாய் இருந்தவன் இங்கே பணிக்கூடத்தின் முதல்வன் ஆனேன். நல்ல வேலை.. நல்ல ஊதியம் .. எல்லாமே நன்று தான் . ஓடி விட்டது. உருண்டோடி விட்டது இரு பத்து வருடங்கள்.முதல் பத்தில் வீடு. இரண்டாம் பத்தில் இரு பிள்ளைகள் என்ஜினீயர்கள். மூத்தவர் மணம் முடித்து முத்தாய் ஒரு பேத்தி. இன்னும் என்ன வேண்டும்?
இது எப்படி சாத்தியமாயிற்று ? இதை எண்ணும் போது ஒரு மலைப்பு.
இந்த மண்ணே.அமீரக மண்ணே
தத்தெடுத்து ஏற்றி விட்டாய் என்னை.
தயக்கமின்றி , மயக்கமின்றி பிரிவதெங்கன் உன்னை?
ஆனாலும் பிரியத்தான் வேண்டும்.
பிரியமுடன் பிரியத்தான் வேண்டும்.
மா ஸலாமா. .மா துஜே சலாம்.
2 comments:
Arpudam...ennangal
Arumai...tamil
Perumaii..neengal en nambar..enbathil
Thodaratum....
-ஆடலரசன்@Natarajan
ஆடலரசின் எண்ணங்களும் கவிதைகளும்
http://www.facebook.com/Aadalarasin.Ennangal.Kavithaigal
Arputham....ennangal
Arumai...tamil
Perumai...nan ungal namban enbathil...
#athu seri breakle ADVT onnum kanom sponsor. Kidakilayaa
-ஆடலரசன்@Natarajan
ஆடலரசின் எண்ணங்களும் கவிதைகளும்
http://www.facebook.com/Aadalarasin.Ennangal.Kavithaigal
Post a Comment