Tuesday, 4 June 2013

சயின்டிஸ்ட் சங்கரின் சப்பாத்தி அவியல்-காப்புரிமைக்கு உட்பட்டது..

சில நாட்களுக்கு முன்னர் முக நூலில் தம்பி கார்ட்டூனிஸ்ட் முருகு சாதம்  வடித்த கதையை எழுதி இருந்தார்.அப்போதே நினைத்தேன் நாமும் சப்பாத்தி அவித்த கதையைச் சொல்வோமே என்று.

என்னது சப்பாத்தி அவிச்சீங்களா? சப்பாத்தி சுட்டேன்னு சொல்லுங்க.

ஐயோ இல்லீங்க. சப்பாத்தி சுடலை. அவிச்சோம். நிஜமாவே அவிச்சோம்.

ஓ , சுடத் தெரியாம அவிச்சீங்களா?

இங்கே பாருடா ! அய்யா, நமக்கு சப்பாத்தியும் சுடத் தெரியும் , பள்ளிக்கூடத்தில படிக்கிறப்போ பிலாசிக் கொட்டைய  (சுடுகாய்)தரையில் தேய்ச்சு நம்ம கூட்டாளிகளை தொடையில சுடவும் தெரியும். அது போக  துப்பாக்கியும் சுடத் தெரியும்.

துப்பாக்கியா?  இந்த தீவாளியப்போ சுருள் போட்டு டப் டுப்புன்னு வெடிக்கிற ரோல் துப்பாக்கி தானே

இந்தக் கிண்டல் தானே வேண்டாங்கிறது. நிஜத் துப்பாக்கிங்க, நிஜத் துப்பாக்கி. போலீஸ்கார்லாம் வச்சிருப்பாங்களே,பெரிய துப்பாக்கி, அந்தத் துப்பாக்கிங்க.நாம காலேஜ் படிச்சப்போ N.C.C , Navy ல இருந்தோம். அப்போ பசுமலை ரேஞ்சுல பயரிங் ஸ்குவாட் நடந்துச்சு. நாம் அதுல நல்லா பயர் பண்ணி முதல் இடத்துக்கு வந்து , நேவி ஆபீஷருங்க கிட்டே சபாஷ் வாங்கினோமாக்கும்.என்ன, அதுக்கு அப்புறம் ஒரு வாரம் கழுத்த திருப்ப , கிருப்ப முடியல்லே.

என்ன அண்ணே?  பகுத்தறிவாளர் அய்யா M.R.ராதா அவர்கள் 1967 ல , ஏழை பங்காளன், கொடுத்துச் சிவந்த கரத்தினன், பொன்மனச் செம்மல்., M.G.R .......

"உய்... உய்,.....உய்... உய், உய்... உய் ............."

விசில் அடிக்கிரவுங்க , கை தட்டுரவுங்கல்லாம் முடிச்சுட்டீங்களா?  சரி.. தொடருவோம்.MGR அவர்களைக் கழுத்தில் சுட்டது போல நமக்கு ஆச்சுன்னு நெனைச்சுட்டீங்களா? அதெல்லாம் இல்லைங்க. இது வேற சமாச்சாரம் . சயின்சு. நியூட்டனின் விதியாம். எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. “Every action has got a reaction”. அதாவதுங்க , நீங்க ஒரு பொண்ணப் பார்த்து கண்ணடிக்கிறீங்க.

யேய் , இரு..இரு... நீ நம்மல மாட்டிவிடாம இருக்க மாட்டே போல. நீ சப்பாத்தி சுட்ட கதை நமக்கு வேணாம். ஆளை விடு.

இது சப்பாத்தி சுட்ட கதை இல்லே .அவிச்ச கதை .நீங்க அப்பிடிசொன்ன எனக்கு கோபம் வரும்.  எனக்குக் கோபம் அதிகமாயிருச்சுன்னா ,பசங்க ஜீவா மாதிரி பாக்கெட்டைக் கிழிச்சிருவேன். அப்புறம்  பாவம் நீங்க.

ஏன்டா , ஒன்னோட பாக்கெட்டை நீ கிழிக்கப்போற , அதுக்கு ஏன்டா நான் பாவம்?

ஐயே ,ஆசையப் பாருங்க. நான் கிழிப்பேன்னு சொன்னது ஒங்க பாக்கெட்டை. சரி , சரி அதுக்காக தமிழ்ப் படங்கள்ல ஒரே ஒரு சீன்ல வர்ற துணை நடிகை மாதிரி கையை நெஞ்சில வச்சு மறைச்சுக்க வேணாம். கதையைக் கேளுங்க.நீங்க ஒரு பொண்ணப் பார்த்து கண்ணடிக்கிறீங்க..  அது ஒரு வினை.


டேய் நான் ரொம்ப நல்லவன்டா . வினையே வேண்டாண்டா.
இப்பிடிச் செஞ்சா எங்கப்பா சுத்துக் கட்டு, கல் தூண்ல கட்டி வச்சு புளிய விளார் இல்லாட்டி சிங்கபூரு பெல்ட் ட்ட ஒடம்பு புல்லா கோடு போட்டுருவாரு. விடுடா..

அப்பிடி எல்லாம் இல்லீங்கோ. ஒரு பேச்சுக்குத் தானே.
அதாவது , நீங்க ஒரு பொண்ணப் பார்த்து கண்ணடிச்சீங்கன்னு வச்சுங்கோங்க.அதுக்கப்புறம் என்ன நடக்கும் ?  ஒண்ணு, அந்தப் பொண்ணு கண்ணடிக்கும் , இல்லே கால்ல மாட்டி இருக்கிறதால அடிக்கும். அதுவும் இல்லைன்னா அவுங்க அண்ணன் காரன் , அப்பன்காரன் அரிவாளைத் தூக்கிட்டு வந்து ரெண்டு தட்டு
குடுத்துட்டுப் போவாங்கல்ல அதுதான் ரியாக்ஷன். எதிர் வினை.
அது போல , மிலிடரி துப்பாக்கில டிரிக்கர்ல விரலை வச்சு அழுத்தினா துப்பாக்கிக் குண்டு சீறிக்கிட்டு முன்னாடி பாயும் . குண்டை சுட்ட துப்பாக்கி பின்னாடிப் பாயும். அதை தடுக்கிறதுக்கு துப்பாக்கியை தோள்ல வச்சு கெட்டியா அழுத்திப் பிடிச்சுக்கிட்டு சுடனும். கொஞ்சம் ஏமாந்தோம் , காலர் எலும்பு அம்போ தான். அதுவும் 303 துப்பாக்கி பார்திருக்கீங்கள்ல. அடிப்பக்கம் நல்ல கனமா , வைரம் பாய்ஞ்ச தேக்குல செஞ்சிருப்பாங்க. ஒவ்வொரு அடியும் சும்மா இடிதான். கிட்டத்தட்ட அஞ்சு சுற்று. ஒரு சுற்றுக்கு 10  குண்டு. மொத்தம்  50  குண்டு சுட்டோம்.அதனோட விளைவு தான் , கழுத்துப்பகத்துல ஓரூ வீக்கம் , கழுத்தைச் சரியா திருப்ப முடியாம அவதிப்பட்டோம்.

யோவ் , சப்பாத்தி சுட்ட கதையைச் சொல்லுன்னா ரொம்ப பீலா விடுறே, சப்பாத்தி சுட்ட கதையைச் சொல்லு சீக்கிரம்

இங்கே பாருங்க , சப்பாத்தி சுட்ட கதை இல்லே , அவிச்ச கதை அவிச்ச கதை , அவிச்ச கதை. மறுபடியும் யாராச்சும் சப்பாத்தி சுட்ட கதைன்னு சொன்னீங்க , அப்புறம் மதுரைக்காரன்,என் ஸ்டைலுல ரெண்டு அப்பு கொடுத்திருவேன். சரி கதைக்கு வருவோம்.

சப்பாத்து சுடுறதுன்னா ஆளுக்கு ஒரு அஞ்சுன்னு வச்சு சுட்டாலே எப்பிடியும் ஒரு இருபது சப்பாத்தி சுடன்னும். நல்லாக் அரச்ச சம்பா கோதுமை மாவை நாலு கப்பு ஒரு குண்டான்ல எடுத்து ,எண்ணையோ பாலோ விடாம , கொஞ்சம் உப்புப் போட்டு பிசைங்க. என்ன கேட்டியா இருக்கா? அவசரப்பட்டு தண்ணிய ஊத்த  வேணாம். நல்லா பெசைஞ்சுக்கிட்டே இருங்க. அப்ப அப்பா கொஞ்சம் தண்ணிய தெளிச்சுகிட்டே பிசைங்க.  பத்து நிமஷம் பசைஞ்சுட்டு, அப்பிடியே ஒருபத்து நிமிஷம் வச்சிருங்க. பின்னர் அதை சின்ன சின்ன உருண்டையாக்கி , சப்பத்திக்கட்டைல வைச்சு அழகாய்ப் பொறியும் அம்பிகா அப்பளம் சைசுக்கு ரொட்டியாத் தட்டி வச்சிருங்க. அடுப்புல காய்ஞ்ச தோசைக் கல்லுல என்னை ஊத்தாம, இந்த ரொட்டிய போட்டு புரட்டி  எடுத்து. அந்தச் சூடு குறையாம பக்கத்து அடுப்பு  நெருப்புல போட்டு எடுத்தா , பூரி மாறி வரும் , அதுக்குப்பேரு தான் புல்கா / சப்பாத்தி. கொஞ்சம் தோசைக்கல்லுல என்னைய ஊத்தி எடுத்தா நம்ம ஊரு சப்பாத்தி. ஹிந்திக்காரங்க எல்லாம் அதை பரோட்டா ன்னு சொல்லுவாங்க.
இப்பிடி கஷ்டப்பட்டு  சுட்ட சப்பாத்தியில ரெண்டு மூணு மிஞ்சிப் போச்சுன்னா தூக்கியா போட முடியும் ? செல்லும் செல்லாததுக்கு வீட்டுல ஒரு ஏப்பை , சாப்பை இருக்கும் .பெரும்பாலான நேரத்தில அது நாமாகத் தான் இருக்கும். அடுத்த் வேளை சாப்பாட்டு நேரத்தில அன்போட அத்தான் இத நீங்க சாப்பிட்ருங்கன்னு ஒரு வேண்டுகோள். ஆக்சுவல்லி அது வேண்டாத கோள்.
'என்னம்மா சப்பாத்தி காய்ஞ்சு போச்சே'ன்னு கம்ப்ளைன்ட் குடுத்தா ரெண்டு சொட்டு என்னைய கல்லுல விட்டு மறு படி சுட வச்சுக் கொடுப்பாங்க. அதுக்கு சும்மாவே சாப்பிட்டிருக்கலாம். இதற்கு ஒரு வழி கண்டு பிடிக்காம இருக்கிறதா? சைண்டிஸ்டு ஆச்சே. என்ன பண்ணலாம்னு ரொம்ப நாளா யோசனை.
அப்போ தான் ஒரு நாள் பொரட்டா கடை வச்சு நடத்துற பெரியசாமி அண்ணே ஒரு தொழில் ரகசியத்தைச் சொன்னது ஞாபகம் வந்துச்சு. அதாவது காஞ்சு போன பொரட்டாக்களைத் தூக்கி குப்பைல போடாம வச்சிருந்து அடுத்த நாள் இட்லித் தட்டுல வச்சு அவிச்சு எடுத்து சுடச் சுட கொடுப்பாங்களாம். அத சாப்பிடுறவங்களிடம் இருந்து  "பெரியசாமி கடைப் பொரட்டா சூப்பரு. அடிச்சிக்கிறவே முடியாது " ன்னு கமெண்டு வேறு.

ஆகா புடிச்சாச்சு , யுரேக்கா , யுரேக்கா ன்னு உரக்கக் கத்தி , பெரியசாமி அண்ணே பொரட்டாவ இட்லித் தட்டுல அவிச்சா , சப்பாத்திய நாம ஏன் இடியாப்பத் தட்டுல அவிக்கக் கூடாதுன்னு ஒரு கேள்வி கேட்டு  இடியாப்பத் தட்டுல ஒரு ஐஞ்சு நிமிஷம் அவிச்சு எடுத்தோம் . பின்ன அதை சூடா எடுத்து ருசி பார்த்தப்போ, சூப்பர்
நிஜம்மாத் தாங்க. , நமது வாத்தியாரு...  

 உய்ய்ய்.. உய்ய்ய் ...

டே , டே இருங்கடா , இவங்க ஒருத்தன்ங்க , வாத்தியாருன்னு சொல்ல விடமாட்டேங்கிறாங்க. உடனே  உய்..உய்.. தான்

 நமது வாத்தியாரு, ஆயிரத்தில் ஒருவன்ல நீலக் கலர் பால்ல ஏதோ ஒரு சொட்டு புழிஞ்சு விட , பாலும் வெள்ளையா மாற , சக்சஸ், சக்சஸ்னு கத்துவாரே அது மாதிரி நாமும் கத்திட்டோம்.

டேய் அய்யா, வாத்தியாரு மேட்டரை சொன்னா தப்பு இல்லாம சொல்லு. அவரு எங்கேடா சக்சஸ்னு சொன்னாரு ., வெற்றி , வெற்றி னு தானே சொன்னாரு.

சரிங்க ... தப்பாச் சொன்னதுக்கு ரொம்ப சாரீங்க. இந்தியா , இலங்கை , சிங்கப்பூர், மலேசியா , தாய்லாந்து ..........

டேய் . நிறுத்து . நிறுத்து ,நீ என்ன கோபால் பல்பொடி விக்க ஆரம்பிச்சுட்டே
இல்லீங்க அண்ணா, இது மாதிரி நம்ம ஒரு இருபத்தி ரெண்டு  நாடுகளுக்குப் போயிட்டு வந்திருக்கோம்ல , அதுனால இங்கிலிபீஷு பேசிப் பேசி நமக்கும் கொஞ்சம் பழக்கம் ஆயிப்போச்சு. அதுனால தான் வெற்றின்னு கூவாம , சக்ச்சஸ்னு கூவுனோம்.

சங்கரா, வெல்டன் , தீசிஸ் எழுதிரலாம், ஜர்னல் ஆப் வெட்டியாலாஜி ல பப்ளிஷ் பண்ணி இன்னோரு டாக்டரேட் வாங்கிரலாம்னு முடிவு பண்ணிட்டோம். அப்பிடியே காப்புரிமையும் எடுத்துரனும்னு அன்னைக்கே முடிவெடுத்துட்டோம்.

யான் பெற்ற இன்பம் பெறுக  இவ் வையகம் இல்லையா ? வையகம்னா உலகம் தானே. உலகம் இருக்கட்டும் , மொதல்ல உலகநாதன் புத்திரி ,அதுதாங்க நம்ம முதல் ரசிகை மற்றும் குருவான எங்க வீட்டு வையகத்துக்குச சொல்லிக் கொடுத்தோம். அவுங்களும் அதுல இருந்து , காய்ஞ்சு போன சப்பாத்திய கடமை தராம அவிச்சே கொடுத்தாங்க. அவுங்க தான் இப்போ ஊருக்குப் போயிட்டாங்களா .


"அப்ப என்ன ஜாலி தானே. எஞ்ஜாய் மாமே.."

அட நீங்க  ஒன்னு .. நானே வள்ளுவர் சொன்ன.....

"நீங்கின் தெராஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றால் இவள்" னு தவிச்சுக்கிட்டு இருக்கோம்

"யேய் நிறுத்து , இந்தக்குறளைத் தானே  கொஞ்ச நாளைக்கு முன்னாடி முக நூல்ல போட்டு லைக் அள்ளிக்கிட்டே.. மறுபடியும் அது தானா?"

அதுதான் .ஆனா ஒரு ரகசியம் .அதில தப்புத் தப்பா எழுதிப்புட்டேன். யாரும் கண்டுபுடிக்கலை. எல்லாத்தையும் வாசிக்கிற கலைஞர் அய்யா என்னைக்காவது வாசிக்கும்போது கண்டுபுடிச்சு உரிமையோட நாலு டோஸ் விட்டா 'இல்லை அய்யா , நான் கரெக்டா எழுதி இருக்கேன்னு இதைக் காமிச்சு தப்பிக்கலாம் பாருங்க அதுக்குத்தேன்.

சரி சரி , அதை விடுங்க.நம்ம கதைக்கு வருவோம் . எப்பிடியும் சமையல் நம்ம தானே செய்யனும். அப்பிடி ஒரு நாள் காலையில சப்பாத்தி சுட்டப்போ மிஞ்சிபோச்சு. அதை ஈவினிங் ,ரொம்ப பொறுப்பா அவிப்போம்னு சொல்லி இட்லிச்சட்டில கொஞ்சம் தண்ணி ஊத்தி , இடியாப்பாத் தட்டை மேல வச்சு சப்பாத்திய அதுல அடுக்கி மூடி வச்சுட்டு அடுப்பை ஏத்தி விட்டு வந்துட்டோம். கம்பியூட்டர்ல உக்காந்து surfing னு எதையெதையோ அலசிக்கிட்டு இருந்தோம். நமக்குத் தான் இது வேணாம் , அது வேணாம்னு தள்ளுற பழக்கம் இல்லையே. ஆன்மீகத்தையும் படிப்போம் , அண்ணாவின் கம்பரசத்தையும் படிப்போம்.  சிட்னி ஷெல்டன் தொடங்கி சமையல் ராணி செல்லம்மா சொல்ற பீட்ரூட் சட்னி வரைக்கும் படிப்போம்.


நெட்டுலயும் , கிரிக்கெட்டுலயும் உக்காந்திட்டா , ஒங்களுக்கு எது  நடந்தாலும் தெரியாதே ன்னு  வீட்டுக்காரம்மா , அதுதாங்க , ஹோம் மினிஸ்டரு , அடிக்கடி சொல்லுவாங்க.
அன்னைக்கும் அப்பிடித் தான் ஆச்சு. அஞ்சு நிமிஷத்துல அணைக்க வேண்டிய அடுப்பை அரைமணி நேரத்துக்கு மேல அமத்தாம இருந்துட்டோம். என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லத்தான் வேணுமா?

அடுப்படி முழுதும் ஒரே புகை மூட்டம்.இட்லி சட்டில இருந்த தண்ணியெல்லாம் வத்திப் போயி உள்ளே இருந்த சப்பாத்தி எல்லாம் அடுப்புக்கரியாப் போச்சு. எவர்சில்வர் இட்லிச் சட்டி கருப்பு இருப்புச் சட்டியா மாறிப் போச்சு. சப்பாத்தி போனாப் போயிட்டுப் போகுது. ஆனா சட்டி போச்சே. வந்து பார்த்தா நொந்து , நூடுல்ஸ் ஆகிப்  போயிருவாங்களே. சரி, நல்லா புளி போட்டு வெளக்கி வச்சிருவோம்னு , நாலு நாளைக்கு தேச்சது தான் மிச்சம். ம்ம்ம்... ம்ம்.. கலரு (!!!) போகவே மாட்டேங்குது. இது கதைக்கு ஆகாதுன்னுட்டு  அதை மேல் தட்டுல  ஒளிச்சு வச்சுட்டு புதுசு ஒண்ணு வாங்கி வச்சுட்டோம்.
அம்மக்கரங்களும் வந்த்திட்டாங்க. அடுப்படில போலங்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாக்காரங்க அடுப்படில இருக்கையில எல்லாம் நமக்கு பக் பக். "அத்தான் எனக்கு ஞாபக மறதி சாஸ்தி" ன்னு சொல்லிச்  சொல்லி கல்யாணமான உடனே  கன்னியாகுமரிக்கு கூட்டிட்டுப் போயும், அந்தக்  கடற்கரைல மீனு வாங்கிக் கொடுக்காதத வரி வரியாச் சொல்லுவாங்க. அப்பிடி இருக்கும் போது அவுங்க  பொலங்குன சட்டி அவுங்களுக்குத் தெரியாம இருக்குமா ? ஒரு நாள் கேக்கவும் செய்திட்டாங்க, அத்தான் , இது நம்ம பழைய இட்லிச் சட்டி இல்லையே.அது எங்கப்பா வீட்ல சீதனம் கொடுத்தது. நல்ல கேட்டியா இருக்கும். இது அது மாதிரி இல்லே.

"இல்லேடி செல்லம் , ஒனக்கு ஞாபக மறதி அதிகம்டா . இதுதான்டா கண்ணு நீ வச்சிருந்த பாத்திரம் "னு அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டு அண்ணன்காரனாட்டம் பொய் சொல்லி ஏமாத்திட்டோம். எப்ப மாட்டப் போறோம்னு தெரியலை. அதுக்கு முந்தி எப்பிடியாவது பழைய பாத்திரக்காரன்ட்ட போட்டுடனும்.........ஈயம் , பித்தளைக்கு பேரிச்சம்பழம் , அப்பளப்பூ ன்னு ஒரு குரல்,எட்டுக் கட்டைல  கேட்டுச்சுன்னா நமக்கு ஒரு போன் போட்டுச் சொல்லிருங்க.  நீங்க பாட்டுக்கு வீட்டுப் போனுக்கு அடிச்சிராதீக.வெவகாரம் பெருசாப் போயிரும். அதுனால நம்ம மொபைல் போனுக்கு அடிங்க..நம்பர் இருக்குல்ல. சரியா? வரட்டா?



அமீரகத்தில் இருந்து அன்புடன்  சங்கர்.



No comments: