Monday, 12 August 2013

நல்ல பசங்க ....... நாங்க நல்ல பசங்க..


நல்ல பசங்க ..... நாங்க  நல்ல  பசங்க.......................
 
இந்தக் காலத்துப் பிள்ளைங்களை , அவுங்க அடிக்கிற லூட்டிகளைப் பார்க்கும்போது  நாங்கள்லாம் ரொம்ப நல்ல பசங்கன்னு தோனுது.
கவனிக்கவும்: பெங்களூருவில் பசங்கன்னு சொன்னா அது பெண் பிள்ளைகளைக் குறிக்குமாம். இங்கே நாம பசங்கன்னு சொன்னா பசங்க தான் சார். தப்பால்லாம் நெனைக்காதீங்க.
பின்ன என்ன சார் ? காலையில எழுந்த உடனே  கையில மொபைல் போனு ,பேஸ் புக்.   இல்லாட்டி லேப்டாப்பு. அவுங்க உலகமே தனி. எதைக் கேட்டாலும் எரிஞ்சு விழுவாங்க. லீவுன்னு விட்டா அது சுட்டெரிக்கும் வெயிலா இருக்கட்டும் .கொட்டும் மழையா இருக்கட்டும் கிரௌன்ட்ல கிரிக்கெட்டு. இவுங்க மாதிரியா நாம எல்லாம் இருந்தோம் ?
யேய் பெரிசு , என்ன ரொம்ப சலிச்சுக்கிறே. அப்படி என்ன தான் நீ நல்ல பிள்ளையா இருந்தே , சொல்லு.அதையும் தான் பார்ப்போம்.
டேய் பொடிப் பசங்களா, நாங்க எல்லாம் ரொம்ப நல்ல பசங்கடா.. ஒங்களை மாதிரி எல்லாம் இல்லே.
அதைத்தான் சொல்லு பெரிசு . சும்மா பில்டப் கொடுக்காதே. ஓவரா சீன போடுறே.
ஒங்களுக்கு என்னடா தெரியும் எங்களைப் பத்தி. நாங்கள்லாம் ரொம்ப தங்கமான பசங்கடா.
இந்தா பெரிசு , பார்த்தியா? அந்தக்காலத்தில காங்கிரஸ் காரங்க பேசுற மாதிரி பேசுறே. அவங்க தான் ஒவ்வொரு வருஷமும் சுதந்திர தினம் இல்லாட்டி குடியரசு தினத்தன்னிக்கு ஒரு கூட்டம் போட்டு  முதல்ல ஒருத்தர் வந்து பேசுவாரு “காந்தி நம் தேசத் தந்தை. அவர் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். வந்தே மாதரம் “. அதுக்கடுத்து இன்னொருத்தர் பேசுவாரு. ‘ காந்தி சுதந்திரம் வாங்கித் தந்தார் .அவர் நம் தேசத் தந்தை. வந்தே மாதரம்.” இது போக அடுத்து ஒருத்தர் வருவாரு அவரு “ இந்தியாவின் தந்தை காந்தி .அவர் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் .. வந்தே மாதரம்”  அது மாதிரி நாங்க நல்ல பசங்க , நடு வீட்டுல தோண்டுன பசங்கன்னுகிட்டு.மேலே சொல்லு.
 
நாங்க காலையில எழுந்ததும் பண்ணைக்குப் போயி பால் வாங்கிட்டு வந்து கொடுப்போம். அப்புறம் காபியை குடிச்சிட்டு வயல்காட்டுக்கு போவோம். அப்புடியே வர்ற வழியிலே ஊருணில குளிச்சுட்டு வீட்டுக்கு வருவோம். வீட்டுல செஞ்சு வச்சிருக்கிறதை சாப்பிட்டிட்டு ஸ்கூலுக்கு சீக்கிரமாகவே கிளம்பிப் போயிருவோம்.
அந்தக் கதையெல்லாம் இங்கே வேணாம். காலையிலே எழுந்த உடனே பால் பண்ணைக்குப் போய் பால் வாங்கிட்டு வர்றது, ஏன்னா அப்பத் தான் ஒனக்கு சீக்கிரமா காபி கெடைக்கும்.ஒரு வேலை போயிருக்கலாம். போகட்டும். இந்த வயக்காட்டுக்கு போவோம் , குளத்தில குளிப்போம் , அப்புறம் ஸ்கூலுக்கு சீக்கிரமாப் போவோம்னு சொல்லுறியே அது தான் கொஞ்சம் ஒதைக்குது.
அப்படி என்னதான் பண்ணுவே? இரு ... இரு .. ஒன்கிட்டே கேட்டா உண்மை வராது. நம்ம சங்கரு தாத்தா கிட்டே கேட்ருவோம். அவரு தான் அப்பப்ப ஏதோ கொஞ்சம் கொஞ்சம் ஒளிவு மறைவு இல்லாம உண்மையச் சொல்றாரு.
சங்கர் தாத்தா , இந்தப் பெருசு சொல்றதெல்லாம் உண்மையா ? ரொம்ப பீத்திக்கிருது .  கொஞ்சம் சொல்லேன்
ஆமாடா. அது சொல்றதெல்லாம் உண்மைதான் . நீ நம்ப மாட்டே. அதுனால நான் விளக்கமாவே சொல்லிடறேன். காலையிலே எழுந்த உடனே  பால் பண்ணைக்குப் போகனும். போய்த்தான் ஆகனும். வேற வழி இல்லே. எழுந்திருக்கிறது எப்படியும் ஆறரை ஆயிடும். பால் பண்ணைய மூடிட்டுப் போயிருவாங்க . அதுனால  வெரசா பண்ணை மூடுறதுக்குள்ள ஓடனும். இல்லாட்டி அன்னைக்கு காப்பி யாருக்கும் இல்லே. காப்பி இல்லேன்னா வட்டியும் மொதலுமா நம்மைத் தான் டின்னு கட்டிருவாங்க.அதுனால போய் பாலை வாங்கியாந்து கொடுத்திருவோம்.
வீட்டுல காப்பி ரெடி ஆனதும் நல்ல பெரிய டம்ளர்ல அமுக்கி அமுக்கி , ஒ அமுக்க முடியாதுல்ல, தழும்ப தழும்ப ஊத்திக் குடிச்சிட்டு வயக்காட்டுக்கு ஓடுவோம். வயக்காட்டுக்கு ஓடுறத்துக்கு ரெண்டு காரணம். முதலாவது வெல்லக்கட்டி காபி தன் வேலைய உடனே காட்டிடும்,சீக்கிரமா தண்ணி இருக்கிற இடமாப் பார்த்து ஓடனும். ரெண்டாவது காரணம் தான் ரொம்ப இன்டரெஸ்டிங். வயக்காடுன்னா அங்கே என்னென்ன கிடைக்கும். சொல்லு பார்க்கலாம்.
நம்ப சாப்பிடுறது எல்லாம் கெடைக்கும்.
எப்பிடி கெடைக்கும்?
செடியில கெடைக்கும். வீட்டுல பூத்தோட்டில வளர்ற பூச்செடியில இருந்து ரோஸ் கெடைக்கிற மாதிரி வயக்காட்டுல தக்காளிச் செடியில தக்காளி கெடைக்கும், கத்தரிக்கா செடியில கத்தரிக்கா கிடைக்கும், அரிசிச் செடியில அரிசி கிடைக்கும் , ரவா செடியில ரவா கிடைக்கும் அப்புறம் சேமியச் செடியில சேமியா கிடைக்கும்.
அப்படின்னா சப்பாத்தி , சப்பாத்தி செடியில கெடைக்குமா?
தாத்தா நீங்க எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நெனைச்சீங்களா? சோறு அரிசியில செய்வாங்க.அந்த அரிசிதான் செடியில கிடைக்கும் அதுமாதிரி  சப்பாத்தி,கோதுமை  மாவுல செய்வாங்க. அந்த மாவுதான் கோதுமை செடியில கெடைக்கும்.
ரொம்பத்தான் தெரிஞ்ச்சிருக்கு உனக்கு. சூப்பர். இப்போ இது போதும். வேண்டாம்ப்பா இனி ஒன்கிட்டே இந்த விஷப் பரிட்சை. நம்ம மேட்டருக்கு வருவோம். பெரிசு வயலுக்குப் போகுமா! பெரிசு என்ன பெரிசு , அப்போ அதுக்குப் பத்துப் பதினஞ்சு வயசிருக்கும். அந்த விடலை பருவத்துல கல்லை வயித்துக்குள்ளே போட்டாலும் கரையும்பாங்க. நம்ம ஆளு வயகாட்டுக்குப் போனதுமே முதல் அட்டாக் ‘கரும்புத் தோட்டம் தான் ‘. ஆமா , நீ கரும்பு சாப்பிட்ருக்கியா? எவ்வளவு சாப்பிடுவே?
ஓ... சாப்பிட்டுருக்கேன். நல்லா இனிக்கும். ஒரு கரும்பு புல்லா சாப்பிட்ருவேன்.
அஞ்சடிக் கரும்பையும் சாப்பிட்ருவியா ?
தாத்தா , ஒனக்கு ஒண்ணுமே தெரியல்லை. ஒரு கரும்பு ஒரு அடிதான் இருக்கும். பத்துக் கரும்பு சேர்த்து ஒரு பாக்கெட்ல போட்டு சூப்பர் மார்க்கெட்ல விப்பாங்க.
சரி தான்.. சுத்தம்.. ஒங்க தாத்தா விவசாயி , நூறு ஏக்கர் நிலம் வச்சிருந்தார் ,நாலு ஜோடி மாடு இருந்துச்சுன்னு எல்லாம் சொல்லிடாதே. நம்ப மாட்டாய்ங்க.சரி நம்ம கதைக்கு வருவோம்.
நம்ம ஆளு கரும்புக்காட்டுக்குப் போய் ரெண்டு முழுகரும்பை ஒடிச்சி வந்து சாப்பிட ஆரம்பிப்ப்பாப்ல..
ரெண்டு கரும்பா?
இல்லே. உன் பாஷைல சொல்லனும்னா பத்துக் கரும்பு. கரும்பை தின்னு முடிச்சிட்டு அடுத்த விசிட் கடலைப் புஞ்சைக்கு..ரெண்டு பெரிய கடலைச் செடியப் பிடுங்கி அதுல இருக்கிற கடலையைப் பூராம் பறிச்சு டிரௌசர் பாக்கெட்ல போட்டுகிட்டு ஒரு ஜூட்.
வீட்டுக்கு கொண்டு வந்திருவாங்க்களா?
வீட்டுக்கா? அப்புறம் யாரு பெல்ட்ல அடி வாங்கிறது? அதுனால வீட்டுக்கு வரும் முன்பு எல்லாத்தையும் தின்னு காலியாக்கிட்டு பின்னே குளத்தங்க்கரை. இவுங்க செட் எல்லாம் ஒவ்வொருத்தரா வந்து சேருவாங்க. எல்லோரும் வந்ததும் குளியல் தான்.. ஒரே கும்மாளம்தான். கடப்பாரை நீச்சல், தவண்டை  , மல்லாக்க நீச்சல்னு ஆட்டம் தான். ஒருவழியா குளியல் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா  அம்மா டிபன் ரெடி பண்ணி வச்சிருப்பாங்க. டிட்லி , தோசை , உப்புமா , புட்டு , இடியாப்பம் , பணியாரம் னு ஏதாவது ஒன்னு. தினம் மாறிக்கிட்டே இருக்கும்.
நீங்க பிரட் , பட்டர் , ஜாம் ,ஆம்லேட் எல்லாம் சாப்பிட மாட்டீங்களா?
பிரட்டா? ஓ ரொட்டிகட்டா ? சாப்பிடுவோமே. என்னைக்காவது காய்ச்சல் அடிச்சா வாங்கிட்டு வந்து ரொட்டிய பாலில் நனைச்சு சாப்பிடுவோம்.டிபன் சாப்பிட்டு முடிச்சதும் , நேத்து கொண்டு வந்து ஆணில இல்லாட்டி கதவுக்குப் பின்னாடி மாட்டி வச்ச பைக்கெட்டைத் தூக்கிட்டு ஸ்கூலுக்குப் போயிருவோம். நாங்க போனதுல இருந்து முதல் மணி அடிக்கிற வரைக்கும் விளையாட்டுதான். சினிமாப் பேரு , ஊர்ப் பேரு ,  உஸ்கி , தாயம் இப்பிடி ஏதாவது விளையாண்டுட்டு முதல் மணி அடிச்சதும் வகுப்புக்குப் போயிருவோம்.அப்புறம் ஸ்கூல்ல வாத்தியாரு பாடம் எடுக்க ஆரம்பிச்சுடுவார். எப்பிடி தெரியுமா?
டேய் ராமு , டீ வாங்கிட்டு வா. டே அளகேசா , அந்தப் பதினோராம் வாய்ப்பாட சொல்லு. யாரவது பேசுனா பேரு எழுதிக் கொடு ன்னு சொல்லிட்டு சேர்லே உட்க்கார்ந்த படி ஒரு குட்டித் தூக்கம்.ராமு டீ வாங்கி வந்து “ சார் ..சார்.. னு கூப்பிடுவான். சார் கண்ணு முழிக்கிற வரைக்கும் கையிலே டீயை வச்சுக்கிட்டு நிப்பான். வாத்தியாரு கண்ணைத் தொறந்து டீயை வாங்கி ஒரு மடக்கு குடிச்சிட்டு , பெரம்பால மேசைல ரெண்டு தட்டு . ‘சத்தம் போடாதீங்கடா.. பாடத்தை கவனிங்க டா ”
தாத்தா அம்மா ஹார்லிக்ஸு குடிக்க கூப்பிடுறாங்க ......ஹார்லிக்ஸு குடிக்கலைன்னா திட்டுவாங்க. நம்ம நாளைக்குப் பேசுவோம்... சரியா?
இது தான் இந்த சின்னப் பசங்க கிட்டே.. ஒன்னு சொன்னா முழுதும் கேக்க மாட்டாங்களே. பக்கிக , வரட்டும் நாளைக்கு. அண்ணே நீங்களும் போயிட்டு வாங்க.
அன்புடன் ஷார்ஜாவிலிருந்து சங்கரலிங்கம்.

No comments: