சக்கரைப் புளி..... , பச்சரிசி மாங்காய்...... ,
இது என் வாழ்வில் என்னுடன் ஐக்கியமான இரு
ஜீவன்களைப் பற்றியது. எங்கள் கிராமத்தில் இருந்த இரண்டு அஃறினை உயிர்கள்.ஒன்று
சிவன் கோயில் மா மரம். மற்றொன்று சக்கரைப்
புளியமரம். ஆமா , மரங்களுக்கு ஜீவன் உண்டா? மரம் நட்டு , வளர்த்துப்
பாருங்கள். உங்களுக்கே தெரியும்..
சக்கரைப்புளி..... இது எங்கள் ஊர் எல்லையில்
ரோட்டின் மேலே பறவைகளுக்கெல்லாம் சரணாலயமாக இருக்கிறது. மரத்தின் கிளைகள் நான்கு பக்கமும் சிதறி நல்ல
நிழல் தருகின்றது. அந்த நிழலில் , பெரியகோட்டையிலிருந்து தலையினில் சுமை தாங்கி
வருபவர் மற்றும் வெயிலுக்காக தலையில் துண்டை , துணியை போட்டுக் கொண்டு வருபவர்கள்
தங்கி இளைப்பாறும் ‘பயணியர் விடுதியும்’ இது தான். என் தந்தையின் தலைமுறையில்
இருந்து இன்று வரை மூன்று
தலைமுறையினரின் கல்லடிகளை , பெற்ற
அன்னையாய் ஏற்றுக்கொண்டு சிரித்தமுகத்துடன்
இன்றும் தாங்கி நிற்பது அதுவே.
அப்படி என்ன சிறப்பு அந்த மரத்திற்கு? .. இந்த மரத்தின் பழங்கள்
மிகவும் தித்திப்பாக இருக்கும். புளியம்பழம் இனிப்பா இருக்குமா? சங்கர் போங்கு....
டூப் மச் டர் னு நீங்க நினைப்பீங்க. ஆனா அத்தனையும் நிஜமுங்க.அதனால் தான் அந்த
மரத்திற்குப் பெயர் சர்க்கரைப் புளி. இந்த
மரத்தின் புளியம்பழம் எங்கள் பள்ளியில் ஒரு தின் பண்டம். எங்கள் ஊர் வழியாகச்
செல்லும் அனைத்து மாணவர்களும் அன்போடு ஓரிரண்டு கற்கள் வீசி , சக்கரைப்புளி கருணையாய்
தருவதை மகிழ்வாக ஏற்றுக் கொண்டு செல்வர். பள்ளியிலே அந்த மாணாக்கருக்கு ஒரு தனி
அந்தஸ்து தான். அதன் சுவை தனி. அது தான் அந்த மரத்துக்கு சொந்தக்காரர்களை வாய்
திறக்காமல் கட்டிபோட்டது. அந்த மரத்துக்கு சொந்தக்காரர்கள் வேறு யாருமல்ல எங்கள் குடும்பம் தான்.
எனக்கு முன்பாக பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள்
கல்லெறிந்து கொண்டிருக்கும் போது, பள்ளி செல்லும் வழியில் நானும் அவர்களில் ஒருவனாகி விடுவேன். அந்த
நேரத்தில் என் தந்தை அங்கு வந்தால் ?
என்ன , அவரு ஒங்களையெல்லாம் அடிச்சு வெரட்டுவாரா
?
இல்லை..இல்லை.
எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அவர் மிகவும் நல்லவர். இது போன்ற
மற்றவர்க்கு துன்பம் தரும் வேலைகளில் ஈடுபட மாட்டார். மாறாக தனது உடன் வரும்
நண்பர்களை , நம்மை விட வயதில் பெரியவர்களை , கல்லெறியச் செய்து வீழ்கின்ற
பழங்களை மாணவர்களுக்குக் கொடுத்து மகிழ்வார்.
எங்கள் வீட்டின் எழுதாத ஒரே கண்டிஷன். பொது
மக்களோ மாணவர்களோ யாரும் மரத்தின் மீது ஏறி உலுப்பிக் கொள்ளக் கூடாது. நாங்கள்
தான் அதைச் செய்ய வேண்டும்.
அந்த மரத்தின் நிழலில் கோலி விளையாண்டிருக்கிறோம்.
மரத்தின் மீது பழமில்லா நேரங்களில் ‘மரமேறி விளையாட்டு விளையாண்டிருக்கிறோம்.
மரத்தின் கிளையில் கயறு கட்டி ஊஞ்சலாடி இருக்கிறோம். இந்த மரத்தின் அடி பாகம் இரண்டாகப்
பிரிந்து ப’ வடிவத்தில் அமைந்திருக்கும். அதன் நடுவே துண்டை விரித்துப் படுக்கும்
பொழுது அம்மா மடி மீது படுத்து உறங்கும் ஒரு உணர்வு பிறக்கும்..
அந்த மரத்தின் மற்றும் ஒரு சிறப்பு , எனக்குத் தெரிந்தவரை எல்லா புளிய
மரமுமே இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும் , காய்க்கும். ஆனால் இந்த மரம்
வருடம் தவறாமல் பூத்து காய்த்து விடும். இன்றும் வருடத்திற்கு ஒரு முறை அந்த
மரத்தில் பறித்தது என எங்கள் பங்கும் எனது மூத்த சகோதரரிடம் இருந்து வந்து விடும்.
இது போன்றே இன்னொரு மரம் . மாமரம். இது எங்களுக்குச்
சொந்தமானதல்ல. சிவன் கோயிலுக்குச் சொந்தமானது. சிவன் சொத்து குல நாசம்னு சொல்லுவாங்க. . என் வாழ் நாளில்
இந்த மரத்தில் பழம் கண்டதில்லை. காய்களை பழுக்க விட்டால் தானே பழமாகும். காய்களே
அப்படி ஒரு ருசி, நல்ல இனிப்பாக இருக்கும். பற்களில் கூச்சம் ஏற்படுத்துவதில்லை.
பல் கூச்சத்தை எப்படி ஆங்கிலத்தில் கூறுவது எனஒரு
முறை விவாதமே நடந்தது. கூச்சப்படும் அத்தை மகளை வெட்கப்படுகிறாள் எனத் தானே சொல்வோம்.
அது போலவே , டீத் ஆர் ஷையிங்னு சொல்லலாமா? டூத் ஏக் என்றே கூறுவோம்.மிக சமீபத்தில்
தான் ஆங்கிலத்தில் அதனை சென்சிடிவிடி எனக் கூற வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த
மரத்தில் கல் எறிந்திருக்கிறேன். கை நிறைய மாங்காய் எடுத்து வந்திருக்கிறேன். குளத்தில் குளிக்கப் போகும் பொழுது , விடுமுறை
நாட்களில் சீட்டாட்டம் ஆடுவதற்கு எங்கள் கிளப்(?!)பிற்கு போகும் போது , மற்றும்
வீட்டுக்குத் தெரியாமல் , மறைவாக திருட்டுத் தம் அடிக்கப் போகும் பொழுது என சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மான் வேட்டை
, அல்ல , மாங்காய் வேட்டைதான். யாருமே எதிர்ப்பு செய்வதில்லையா என்ற வினா
உங்களுக்குத் தோன்றலாம்.
எதிர்ப்பு இல்லாமலா? சிவன் கோவிலை நிர்வகித்து
வந்த அய்யரப்பா குடும்பம் தான் அதற்கு உரிமை கொண்டாடுவார்கள். அதிலும் என் வயது
நண்பர்கள் முத்து வடுகநாதனோ , சுப்பையாவோ பார்த்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கையில்
இருப்பதில் அவர்களுக்கும் பங்கு கொடுத்து விடவேண்டும். அய்யரப்பா பார்த்தால் ,
அதட்டிப் பேச துணிவின்றி , நீ எல்லாம் படிச்ச புள்ளே இப்பிடிச் செய்யலாமா எனக்
கேட்டுத் தடுத்து விடுவார், ஆனால் அந்த அய்யராத்துப் பாட்டி இருக்கங்களே.. அப்பா..
அவுங்க அவ்ளோ பேசுவாங்க. நாசமாப் போறவனே , கட்டைல போறவனே என்று ஒரே திட்டு மழை தான். இப்போது அந்தப்
பாட்டியும் இல்லை , அய்யரப்பாவும் இல்லை .அந்த மரமும் இல்லை. திருமண மண்டபம்
கட்டுவதற்காக அந்த மரம் வெட்டப் பட்டு விட்டது.
இப்போது கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அந்த
இடத்தைப் பார்க்கும் போது மனம் வலிக்கும். அந்த மரமே ஏதோ ஒரு தூணுக்குப் பின்னால்
ஒளிந்து கொண்டு ‘சங்கரா.. நான் இங்கே இருக்கேன் ‘ என்று அழைப்பது போல் ஓர்
உள்ளுணர்வு தோன்றும். உடம்பே சிலிர்க்கும். இப்போ சொல்லுங்க.. அந்த மரத்திற்கு
ஜீவன் இருந்திருக்குமா இல்லையா?
அந்த மரங்கள் மட்டுமல்ல .. குளத்தங்கரையில்
இருந்த ஆலமரம் , , அடர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள், தாவிப் பிடித்த என்னை
தடுமாறச் செய்து , கையை உடைத்து கட்டுப் போட வைத்த வேப்ப மரம் , இனிப்பும் , உரைப்பும் கலந்த ஒரு சுவையில்
‘முட்டாஸ் ‘ தந்த மஞ்சனத்தி மரங்கள் , ஊறிச் சுற்றி வெளியே இருந்த கரு வேல மரங்கள்
எல்லாமே ..... ஜீவனோடு இருந்தவை. என் வாழ்வின் ஆரம்பக் காலங்களில் என்னோடு
பின்னிப் பிணைந்தவை.
அம்மா , அப்பா , அண்ணன் , தம்பியைப் பிரிந்து கல்விகற்பதற்காக
ஊரை விட்டுச் சென்றவன் நான். ஊரை மட்டுமா பிரிந்து சென்றேன்? இந்த உறவுகளையும்
அல்லவா பிரிந்து சென்றேன். ஒரு முறை எனது பேராசிரியர் , மரியாதைக்குரிய மறைந்த திரு.
கே.கிஷோர் அவர்கள் ( Prof.K.Kishore ,
Chairman , Inorganic & Physical chemistry Department , Indian Institute os
Science , Bangalore) இம்மை , மறுமை பற்றி விவாதிக்கும் போது தெளிவாகச்
சொன்னார்கள். நமக்கு அழிவு என்பது இல்லை. இறந்த பின்னும் வாழ்வு உண்டு. ஆனால் அது
நேரடியாக மனித வாழ்வு அல்ல. நாம் அழிந்த பின்னர் மறுபடியும் உயிர்ப்பிக்கப்டுவது
ஒரு மரம் / செடி / கொடியாகத்தான். எரிக்கப்பட்டவர்கள் கார்பன் டை ஆக்சைடாக மாறி
மரம் , செடி, கொடிகளால் கிரகிப்பட்டு உயிர்மாற்றம் பெறுகின்றனர். அதே போல மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் வேர்களின்
வழியாக கொடியாக , செடியாக , மரமாக உயிர்ப்பிக்கின்றனர். மறுபடியும் சுழற்சி துவங்குகிறது.
அந்த மூலக்கூறுகள் ஒரு நாள் மனிதனாகின்றன. ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு கருத்து தான்.
என்னுடைய பணி ஓய்வுக்காலத்தில் நிறைவேற்றப் பட
வேண்டிய திட்டங்களில் ஒன்று மனித குலத்திற்கு
மறைமுகமாக பலனளிக்க வல்லது. அது என்னால் இயன்ற வரை மரங்கள் பயிரிட்டு
வளர்க்கப் பட வேண்டும். அதிலே என் முன்னோர்கள் துவங்கி எதிர் கால சந்ததியினர் வரை
வாசம் செய்ய வேண்டும். முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
அன்புடன் அமீரகத்தில் இருந்து சங்கரலிங்கம்.