Saturday, 15 March 2014

சக்கரைப் புளி..... , பச்சரிசி மாங்காய்...... ,


சக்கரைப் புளி..... , பச்சரிசி மாங்காய்...... ,

 

இது என் வாழ்வில் என்னுடன் ஐக்கியமான இரு ஜீவன்களைப் பற்றியது. எங்கள் கிராமத்தில் இருந்த இரண்டு அஃறினை உயிர்கள்.ஒன்று சிவன் கோயில் மா மரம். மற்றொன்று  சக்கரைப் புளியமரம். ஆமா , மரங்களுக்கு ஜீவன் உண்டா? மரம் நட்டு , வளர்த்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியும்..

சக்கரைப்புளி..... இது எங்கள் ஊர் எல்லையில் ரோட்டின் மேலே பறவைகளுக்கெல்லாம் சரணாலயமாக இருக்கிறது.  மரத்தின் கிளைகள் நான்கு பக்கமும் சிதறி நல்ல நிழல் தருகின்றது. அந்த நிழலில் , பெரியகோட்டையிலிருந்து தலையினில் சுமை தாங்கி வருபவர் மற்றும் வெயிலுக்காக தலையில் துண்டை , துணியை போட்டுக் கொண்டு வருபவர்கள் தங்கி இளைப்பாறும் ‘பயணியர் விடுதியும்’ இது தான். என் தந்தையின் தலைமுறையில் இருந்து இன்று வரை  மூன்று தலைமுறையினரின்  கல்லடிகளை , பெற்ற அன்னையாய் ஏற்றுக்கொண்டு   சிரித்தமுகத்துடன் இன்றும் தாங்கி நிற்பது அதுவே.

அப்படி என்ன சிறப்பு  அந்த மரத்திற்கு? .. இந்த மரத்தின் பழங்கள் மிகவும் தித்திப்பாக இருக்கும். புளியம்பழம் இனிப்பா இருக்குமா? சங்கர் போங்கு.... டூப் மச் டர் னு நீங்க நினைப்பீங்க. ஆனா அத்தனையும் நிஜமுங்க.அதனால் தான் அந்த மரத்திற்குப் பெயர் சர்க்கரைப் புளி.  இந்த மரத்தின் புளியம்பழம் எங்கள் பள்ளியில் ஒரு தின் பண்டம். எங்கள் ஊர் வழியாகச் செல்லும் அனைத்து மாணவர்களும் அன்போடு ஓரிரண்டு கற்கள் வீசி , சக்கரைப்புளி கருணையாய் தருவதை மகிழ்வாக ஏற்றுக் கொண்டு செல்வர். பள்ளியிலே அந்த மாணாக்கருக்கு ஒரு தனி அந்தஸ்து தான். அதன் சுவை தனி. அது தான் அந்த மரத்துக்கு சொந்தக்காரர்களை வாய் திறக்காமல் கட்டிபோட்டது. அந்த மரத்துக்கு சொந்தக்காரர்கள்  வேறு யாருமல்ல எங்கள் குடும்பம் தான்.

எனக்கு முன்பாக பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கும் போது, பள்ளி செல்லும் வழியில்  நானும் அவர்களில் ஒருவனாகி விடுவேன். அந்த நேரத்தில் என் தந்தை அங்கு வந்தால் ?

என்ன , அவரு ஒங்களையெல்லாம் அடிச்சு வெரட்டுவாரா ?

இல்லை..இல்லை.  எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அவர் மிகவும் நல்லவர். இது போன்ற மற்றவர்க்கு துன்பம் தரும் வேலைகளில் ஈடுபட மாட்டார். மாறாக தனது உடன் வரும் நண்பர்களை  , நம்மை விட வயதில் பெரியவர்களை , கல்லெறியச்  செய்து வீழ்கின்ற பழங்களை மாணவர்களுக்குக் கொடுத்து மகிழ்வார்.

எங்கள் வீட்டின் எழுதாத ஒரே கண்டிஷன். பொது மக்களோ மாணவர்களோ யாரும் மரத்தின் மீது ஏறி உலுப்பிக் கொள்ளக் கூடாது. நாங்கள் தான் அதைச் செய்ய வேண்டும்.

அந்த மரத்தின் நிழலில் கோலி விளையாண்டிருக்கிறோம். மரத்தின் மீது பழமில்லா நேரங்களில் ‘மரமேறி விளையாட்டு விளையாண்டிருக்கிறோம். மரத்தின் கிளையில் கயறு கட்டி ஊஞ்சலாடி இருக்கிறோம். இந்த மரத்தின் அடி பாகம் இரண்டாகப் பிரிந்து ப’ வடிவத்தில் அமைந்திருக்கும். அதன் நடுவே துண்டை விரித்துப் படுக்கும் பொழுது அம்மா மடி மீது படுத்து உறங்கும் ஒரு உணர்வு பிறக்கும்..

அந்த மரத்தின் மற்றும் ஒரு  சிறப்பு , எனக்குத் தெரிந்தவரை எல்லா புளிய மரமுமே இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும் , காய்க்கும். ஆனால் இந்த மரம் வருடம் தவறாமல் பூத்து காய்த்து விடும். இன்றும் வருடத்திற்கு ஒரு முறை அந்த மரத்தில் பறித்தது என எங்கள் பங்கும் எனது மூத்த சகோதரரிடம் இருந்து வந்து விடும்.

இது போன்றே இன்னொரு மரம் . மாமரம். இது எங்களுக்குச் சொந்தமானதல்ல. சிவன் கோயிலுக்குச் சொந்தமானது. சிவன் சொத்து குல நாசம்னு சொல்லுவாங்க. . என் வாழ் நாளில் இந்த மரத்தில் பழம் கண்டதில்லை. காய்களை பழுக்க விட்டால் தானே பழமாகும். காய்களே அப்படி ஒரு ருசி, நல்ல இனிப்பாக இருக்கும். பற்களில் கூச்சம் ஏற்படுத்துவதில்லை.

பல் கூச்சத்தை எப்படி ஆங்கிலத்தில் கூறுவது எனஒரு முறை விவாதமே நடந்தது. கூச்சப்படும் அத்தை மகளை வெட்கப்படுகிறாள் எனத் தானே சொல்வோம். அது போலவே , டீத் ஆர் ஷையிங்னு சொல்லலாமா? டூத் ஏக் என்றே கூறுவோம்.மிக சமீபத்தில் தான் ஆங்கிலத்தில் அதனை சென்சிடிவிடி    எனக் கூற வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த மரத்தில் கல் எறிந்திருக்கிறேன். கை நிறைய மாங்காய் எடுத்து வந்திருக்கிறேன்.  குளத்தில் குளிக்கப் போகும் பொழுது , விடுமுறை நாட்களில் சீட்டாட்டம் ஆடுவதற்கு எங்கள் கிளப்(?!)பிற்கு போகும் போது , மற்றும் வீட்டுக்குத் தெரியாமல் , மறைவாக திருட்டுத் தம் அடிக்கப் போகும் பொழுது  என சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மான் வேட்டை , அல்ல , மாங்காய் வேட்டைதான். யாருமே எதிர்ப்பு செய்வதில்லையா என்ற வினா உங்களுக்குத் தோன்றலாம்.

எதிர்ப்பு இல்லாமலா? சிவன் கோவிலை நிர்வகித்து வந்த அய்யரப்பா குடும்பம் தான் அதற்கு உரிமை கொண்டாடுவார்கள். அதிலும் என் வயது நண்பர்கள் முத்து வடுகநாதனோ , சுப்பையாவோ பார்த்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கையில் இருப்பதில் அவர்களுக்கும் பங்கு கொடுத்து விடவேண்டும். அய்யரப்பா பார்த்தால் , அதட்டிப் பேச துணிவின்றி , நீ எல்லாம் படிச்ச புள்ளே இப்பிடிச் செய்யலாமா எனக் கேட்டுத் தடுத்து விடுவார், ஆனால் அந்த அய்யராத்துப் பாட்டி இருக்கங்களே.. அப்பா.. அவுங்க அவ்ளோ பேசுவாங்க. நாசமாப் போறவனே , கட்டைல போறவனே  என்று ஒரே திட்டு மழை தான். இப்போது அந்தப் பாட்டியும் இல்லை , அய்யரப்பாவும் இல்லை .அந்த மரமும் இல்லை. திருமண மண்டபம் கட்டுவதற்காக அந்த மரம் வெட்டப் பட்டு விட்டது.

இப்போது கோவிலுக்குப் போகும் போதெல்லாம் அந்த இடத்தைப் பார்க்கும் போது மனம் வலிக்கும். அந்த மரமே ஏதோ ஒரு தூணுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ‘சங்கரா.. நான் இங்கே இருக்கேன் ‘ என்று அழைப்பது போல் ஓர் உள்ளுணர்வு தோன்றும். உடம்பே சிலிர்க்கும். இப்போ சொல்லுங்க.. அந்த மரத்திற்கு ஜீவன் இருந்திருக்குமா இல்லையா?

அந்த மரங்கள் மட்டுமல்ல .. குளத்தங்கரையில் இருந்த ஆலமரம் , , அடர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள், தாவிப் பிடித்த என்னை தடுமாறச் செய்து , கையை உடைத்து கட்டுப் போட வைத்த வேப்ப மரம் ,  இனிப்பும் , உரைப்பும் கலந்த ஒரு சுவையில் ‘முட்டாஸ் ‘ தந்த மஞ்சனத்தி மரங்கள் , ஊறிச் சுற்றி வெளியே இருந்த கரு வேல மரங்கள் எல்லாமே ..... ஜீவனோடு இருந்தவை. என் வாழ்வின் ஆரம்பக் காலங்களில் என்னோடு பின்னிப் பிணைந்தவை.

அம்மா , அப்பா , அண்ணன் , தம்பியைப் பிரிந்து கல்விகற்பதற்காக ஊரை விட்டுச் சென்றவன் நான். ஊரை மட்டுமா பிரிந்து சென்றேன்? இந்த உறவுகளையும் அல்லவா பிரிந்து சென்றேன். ஒரு முறை எனது பேராசிரியர் , மரியாதைக்குரிய மறைந்த திரு. கே.கிஷோர் அவர்கள் ( Prof.K.Kishore , Chairman , Inorganic & Physical chemistry Department , Indian Institute os Science , Bangalore)  இம்மை , மறுமை பற்றி விவாதிக்கும் போது தெளிவாகச் சொன்னார்கள். நமக்கு அழிவு என்பது இல்லை. இறந்த பின்னும் வாழ்வு உண்டு. ஆனால் அது நேரடியாக மனித வாழ்வு அல்ல. நாம் அழிந்த பின்னர் மறுபடியும் உயிர்ப்பிக்கப்டுவது ஒரு மரம் / செடி / கொடியாகத்தான். எரிக்கப்பட்டவர்கள் கார்பன் டை ஆக்சைடாக மாறி மரம் , செடி, கொடிகளால் கிரகிப்பட்டு உயிர்மாற்றம் பெறுகின்றனர்.  அதே போல மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் வேர்களின் வழியாக கொடியாக , செடியாக , மரமாக உயிர்ப்பிக்கின்றனர். மறுபடியும் சுழற்சி துவங்குகிறது. அந்த மூலக்கூறுகள் ஒரு நாள் மனிதனாகின்றன. ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு கருத்து தான்.

என்னுடைய பணி ஓய்வுக்காலத்தில் நிறைவேற்றப் பட வேண்டிய திட்டங்களில் ஒன்று மனித குலத்திற்கு  மறைமுகமாக பலனளிக்க வல்லது. அது என்னால் இயன்ற வரை மரங்கள் பயிரிட்டு வளர்க்கப் பட வேண்டும். அதிலே என் முன்னோர்கள் துவங்கி எதிர் கால சந்ததியினர் வரை வாசம் செய்ய வேண்டும். முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

 

அன்புடன் அமீரகத்தில் இருந்து சங்கரலிங்கம்.

படிச்சோம் ....... கிழிச்சோம் ..... பகுதி -4 ஸ்கூலுக்குப் போறேன்.. நானும் வாறேன்


படிச்சோம் ....... கிழிச்சோம் ..... பகுதி -4
ச்சூளுக்குப் போறேன் .நானும் வாரேன்....

சிறு வயதிலே பொம்ம திரி வெளையாண்டது  ஞாபகம் இருக்கா? யாராவது வீடு கட்ட ஆத்து மணல் லோடு இறக்கிப் போட்டிருந்தா போதும். நமக்கெல்லாம் அது ஒரு பெரிய பம்பர் பரிசு. ஊர் வாண்டுக எல்லாம் , நாமும் தான் , எல்லாம் அங்கே கூடிடுவோம். அரபியர்கள் , ஒரு பெரிய தாம்பாளத்தில் குமித்து வைத்திருக்கும் உணவை வட்டமாக அமர்ந்து அவரவருக்கு எதிரில் உள்ள உணவில் கை வைத்து உண்பது போல நம் வாண்டுகளும் அதை சுற்றி உக்காந்திருவாங்க.
அதுக்கு முன்னாடி , அரபியர்கள் உணவு உண்ணும் முறையை கொஞ்சம் விளக்கலாமேன்னு நம்ம ஊரு சலீம் பாய் கேக்குறாரு , அவருக்கு கொஞ்சம் விளக்கிட்டு அப்புறம் நம்ம மண்ணு திண்ண கதையைச் சொல்வோமா.

அரேபியர்கள் உணவு உண்ணும் முறையே அலாதி தான். முக்கியமா யாரையும் பாக்க வச்சுகிட்டு உண்ண மாட்டாங்க. அவுங்களையும் ஆட்டத்தில சேர்த்துக்குவாங்க. சாப்பாட்டுத் தட்டுக்கு முன்னாடி எல்லோருமே சமம்.வீட்டுப் பெரியவர்ல இருந்து , தோட்டத்துல வேலை பார்க்கிரவரு வரை எல்லோருமே ஒண்ணா உக்காந்து சாப்பிடுவாங்க. அதுவும் எப்பிடி? ஒரே தட்டுல.ஆச்சரியமா இருக்குல்ல. ஆனால் அது உண்மை. வேண்டிய அளவு மட்டும் சாப்பிடுவார்கள். பிரியாணி , கறி அல்லது மீன். கூடவே பச்சைச் செடிகள் , மற்றும் பேரீச்சம்பழம்.  கறியாக இருந்தாலும் , மீனாக இருந்தாலும் அதை நடுவில் வைத்து சுற்றி சாதம் / பிரியாணி வைத்திருப்பார்கள்... இதுவரை , நீ இந்தியன் , நீ இஸ்லாம் அல்லாதவன் என்று என்னை ஒருமுறை கூட ஒதுக்கியதில்லை. அவர்களோடு நானும் சாப்பிட்டிருக்கிறேன்.
 
படிச்சோம் கிழிச்சோமுக்கு வருவோம்..
காலையிலே எழுந்ததும் பால் பண்ணைக்குப் போகணும் . சோமு பெரியப்பா அளந்து ஊத்தும் பால்ல ஒரு 5௦௦ மில்லி வாங்கி வருவோம். அதுலயும் இளம் பசு பால் வேண்டாம்னு அம்மாவோட அட்வைஸ். ஏன்னு கேட்டா , நல்ல மூடுல இருந்தா , அதுல காபி போட்டா கெட்டியா இருக்கும்னு பதிலும் , ஏதோ ஒரு எரிச்சல்ல இருந்தா , தொரைக்கு விளக்கம் சொல்லணுமோ , போயி வாங்கிட்டு வான்னா வாங்கிட்டு வர வேண்டியது தானே ன்னு ஒரே அதட்டலாவும் இருக்கும். பால் வாங்கிட்டு வந்ததும் கேத்தல்ல, சிக்கரி கலந்த ராம தூதன் காபித் தூள் அண்ட் வெல்லக்கட்டி  போட்டுவச்ச  காப்பில பால கலந்து ஒரு பெரிய தம்ளர்ல விளிம்பு வரைக்கும் ஊத்தி வாங்கிட்டு வருவோம். காப்பிய அமுக்கி அமுக்கி ஊத்த முடியாது. இல்லாட்டி நல்ல அமுக்கி எப்படியும் ஒரு ரெண்டு டம்ளருக்கு இல்லாட்டாலும் , ஒன்னரை டம்ளராவது தேத்தி இருக்கலாம்.

காபி குடிக்கிறவரைக்கும் தான் வீட்டுல. அது முடிஞ்சிச்சா , அத்து விட்டுச்சாம் கழுதை எடுத்து விட்டுச்சாம் ஓட்டம்னு  வயற்காடு அல்லது உப்பாற்றுக் கரையோரம். சுமார் 7:30 க்கு ஊரணிக் கரை. கோலிக்குண்டு வெளையாட்டு . இல்லாட்டி இடைக்காட்டூர் டென்ட் கொட்டாயில பார்த்த எம்ஜிஆர் சினிமாவை பத்தின ஒரு அலசல்.அப்புறம் சட்டை டவுசர் எல்லாம் அவுத்து கரையில போட்டுட்டு ஊருணிக்குள்ள ஒரே கும்மாளம் தான். வாடா மச்சான் வாடா ன்னு தண்ணிக்குள்ள பாட்டு வேற. காலேஜ் படிக்கிற அண்ணன்லாம் பிரஷ்ல பேஸ்ட் வச்சு பல்லுத் தேய்ப்பாங்க. மத்தவங்க எல்லாம் சாம்பல் , இல்லாட்டி செங்கல் போடி தான். சோப்பு?? அது இல்லாமலா? என் அழகுமேனியின் ரகசியம் லக்ஸ் சோப்புன்னு எதாவது ஒரு பிரபலமான நடிகை குமுதம் / ஆனந்த விகடன்ல சொல்லியிருப்பாங்க. நமக்கும் கொஞ்சம் அழகு வந்துடாதான்னு ஒரு நப்பாசைல அதையும் வாங்கிட்டு வந்து கரைக்கிறது தான்.

(அழகு வந்துச்சா , வந்துச்சான்னு சோதிக்க வேண்டாம் மோளே. இருக்குன்ன அழகு அங்கன தன்னே உண்டு.கூடிட்டும் இல்லா . கொரைஞ்சிட்டும் இல்லா)

குளிக்கும் போது அடிக்கும் லூட்டி இருக்கே ... யப்பா தாங்காது. ஒண்ணா ரெண்டா ?   நம்ம போடுற ஆட்டத்தைப் பார்த்திட்டு கரையல போர பெரிசு கோபத்துல கரையில் உள்ள  நம்ம டிரெஸ்ஸை எல்லாம் எடுத்து மடப்பள்ளியின் மீது போட்டுவிடும். அது அதன் அதிகாரத்தை காட்டுதாம். நம்ம செட்டுலே உயரமா , மரம் ஏறத் தெரிஞ்சா ஒருத்தனைக் கெஞ்சிக் கூத்தாடி , பள்ளிக்கொடத்துல ஒன்னுக்குத்தண்ணி  விடய்ல கல்கோனா வாங்கித்தர்றேன்னு பிராமிஸ் பண்ணி எப்பிடியோ அவனை மடப்பள்ளியின் மீது ஏற்றி விட்டு டிரெஸ்ஸை வாங்கிப் போட்டுக்கிட்டு , பிள்ளையாருக்கு  ஒரு கும்பிடு போடுவோம். ,அப்புறம் சிவன் கோவில ஒரு சுத்து  வளம் வருவோம்.  வழில இருக்கிற கணபதி நாட்டியமாடிக்கிட்டு இருக்குற பிள்ளையாரைப் சிலையைப் பார்த்து  ‘ இது நடன கணபதி ‘ ‘இல்லேடா நர்த்தன கணபதி ‘ ன்னு ஒரு விவாதம் , அப்புறம் சன்டிகேசவரருக்கு முன்னாடி நின்று ‘டேய் இந்தச் சாமிக்கு காது கேக்காதாம்டா  ‘ ன்னு சொல்லி கைத்தட்டி சாமியக் கும்பிட்டு நவக்கிரகங்களை ஒரு சுத்து சுத்தி நேர வீட்டுக்குத்தான்.

  

வீட்டுல அம்மா தோசை கல்லைப் போட்டு தோசை சுட ஆரம்பிப்பாங்க, மூணு வெள்ளத் தோசை , மூணு கேப்பத் தோசை., தொட்டுக் கொள்ள மிளகாய் சட்னி ... முடிந்தது காலை உணவு.

கொடியில கெடக்குற முந்தாநேத்து கழட்டிபோட்ட டவுசரு , சட்டைய போட்டுகிட்டு நம்ம ஸ்டோர் ரூம், அதாங்க எதாவது சன்னல் திண்டு , அங்கே தானே புத்தகமெல்லாம் அடுக்கி வச்சிருப்போம் , அதுல அன்னைக்கு வேண்டிய நோட்டு , புஸ்தகம் எடுத்துக்கிட்டு , ஹவாய் செருப்ப  போட்டாச்சுன்னா , பட்டயக் கெளப்ப போறேன்னு இல்லே ..இல்லே  . ஸ்கூலுக்கு கெளம்பிட்டேன்னு அர்த்தம். அம்மா போயிட்டு வர்ரேன் .. அம்மா போயிட்டு வர்ரேன் ன்னு சொல்லிட்டு நடராஜா பஸ் சர்வீசுல பயணப்பட வேண்டியது தான். வழி நெடுக டேய் மனோகரா வாடா , ஞானம் வாடா , டேய் முருகேசா வாடா ,  ஜெகன்னாதா வாடா ன்னு கூப்பிட்டுகிட்டே போக நம்ம சேனையும் பெருகிவிடும். முதல் மண்டகப்படி , சக்கரைப்புளி மரத்துக்கிட்ட.

அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு அருகிலே உள்ள கோயில் மண்டபத்தில , தோப்புல . தோப்பு இல்லாட்டி வேலிக்கருவைக் காட்டுக்குள்ளே. கொஞ்சம் இளைப்பாறல். முதல் மணி அடிக்க வகுப்பறையில் தரையில் அமர்வோம். இரண்டாம் மணி அடிக்கும் வரை சல ... புல... சல புல. பிரேயர். அப்புறம் வழக்கம் போல அன்னைக்கில இருந்து இன்னைக்கு வரைக்கும் என்ன நடத்திகிட்டு இருக்காங்களோ அதே பாடங்கள். . தமிழ் னா , முயல் ஆமைக் கதை , காண மயிலாடக் கண்டிருந்த வான் கோழி... கற்றதனாலாய பயனென்கொல்....  ஆங்கிலத்துல , மிடாஸ் டச் , பெலன்குயின் பேரர்ஸ் , கீதாஞ்சலி , அப்புறம் வரலாறுல அகபர் தீன் இலாஹி மதத்தை தோற்றுவித்தார் , அசோகர் குளத்தை வெட்டினார் ... .எப்படா ஒன்னுக்குத் தண்ணி விடுவாங்கன்னு ஒரே ஆவலா இருக்கும்.

மணி அடிச்சதும் வெளிய ஓடிப்போயி திறந்த வெளியில் ஈரமாக்கிவிட்டு, ஐஸ் வண்டிக்கரரிடம்  அஞ்சு பைசாவுக்கு ஐஸ். மற்றும் பொட்டி கூட இல்லாத பாட்டியின் பொட்டிக்கடைல மூணு பைசாவுக்கு கல்கோனா. 

“ டேய் சங்கரு......  எனக்குடா “

“சத்தியமா காசு இல்லேடா “

“சரி... ஒண்ணு வாங்கு .. காக்கா கடி கடிச்சுவோம்.

மதிய இடைவேளை என்பது ஒருமணி நேரம்.உள்ளூர் மாணவர்கள் அவரவர் வீட்டுக்குச் செல்ல வெளியூர் மாணவர்கள் பள்ளியிலே உணவை முடித்து விட்டு பள்ளியின் வாசலிலும் , கோவில் மண்டபத்திலும் மற்றும் மரங்களின் நிழலிலும் இளைப்பாறுவர். இடையில் ஐஸ் வண்டிக்காரரிடம் அக்கௌன்ட் வைத்து ஐஸ் சாப்பிடுவார்கள்.பாட்டி கடையில் கடலை மிட்டாய் , கொக்கோ மிட்டாய் ,முறுக்கு. இது தவிர சீசனுக்கு ஏற்றார் போல, கொடுக்காபுளி , மாதுளம் பழம் , பனங்கிழங்கு , அவித்த கடலை etc. ..பாட்டி கடையின் வியாபார நேரமும் பகல் ஒரு மணிக்கு தான் மற்றும் அந்த ஒரு மணி நேரம் தான். அந்த இளம் வயதில் ‘ பாட்டி அநியாயமாய்க் கொள்ளை அடிக்குதுடா ‘ என்று எத்தனை வாட்டி கமென்ட் அடித்திருப்போம். அதனை இப்போது நினைத்தால் மனது வலிக்கிறது. பாட்டி செய்தது  வியாபாரம் மட்டும் அல்ல. ஒரு சேவை. அதனைக்காட்டிலும் தன்மானமிக்க உழைப்பு. இன்னும் சொல்லப் போனால் அவருக்கு அதுவே அந்த தள்ளாத வயதிலும் தள்ளி விட முடியாத பிழைப்பு. அவருக்கு என் பணிவான வணக்கமும் நன்றிகளும்.

பள்ளிப் பருவம் ... இன்று நினைத்தாலும் விழிகளில் வெள்ளம். எத்தனை நிகழ்வுகள். சண்டை , சமாதானம் , கேலிப் பெயர்கள் , கிண்டல்கள், ஆசிரியரிடம் குறும்புகள் ,  மாணவிகளிடம் பேசும்போது வரும் மின் அதிர்வு., ஏப்ரல் முதல் தேதியில் இங்க் தெளிப்பது , AF என்று ரப்பரில் ஸ்டாம்ப் செய்து அடிப்பது   .. எழுதலாம் ..எழுதலாம் . இன்னும் எவ்வளவோ எழுதலாம். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விடுவோம்.

இவையெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு இல்லையே  என்று ஒரு ஏக்கம் நம் மனதில் . இந்த ஏக்கம்  ஏதோ எம் தலை முறைக்கு மட்டும் என்றில்லை. வீசம் , முக்காலே மூணு வீசம், முந்திரி , மாகாணி  என்று  குருகுலத்தில் படித்த தாத்தாக்களும் ,  வெள்ளி முளைக்கப பள்ளிக்குச் செல்வோம்’ என்று டவுசர் , சட்டை போட்டுச் சென்ற அப்பாமார்களும் ஏங்கிய ஏக்கம் தான். . நாம் கிட்டி, கோலி , பம்பரம் என வரிசைப்படுத்தினால் , நமக்கு அடுத்த தலைமுறை கிரிக்கெட்டில் தொடங்கி , சூப்பர் மரியோ , ஜெயந்த் வில் , ரோல்லர் கோஸ்டர் என்பார்கள். அதற்கு அடுத்த தலைமுறை ,செல்லிடப் பேசியிலே விளையாட்டு. ஒவ்வொரு தலை முறையுமே சொல்லும் 'நாங்க அனுபவிச்சத நீங்க அனுபவிக்கலே" எங்கள் தலைமுறை அனுபவமே வேறு.  நாளை எம் பிள்ளைகளும் இதையே தான் சொல்லுவாரோ

படிச்சோம் .... கிழிச்சோம் ..... பகுதி–05: நான் பாடம் படிக்காட்ட ஒனக்கேன்னவே ???


படிச்சோம் .... கிழிச்சோம் ..... பகுதி–05:

நான் பாடம் படிக்காட்ட ஒனக்கென்னவே ???

வருடா வருடம் ஜூன் /ஜூலையில்  பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது ரிசல்ட் வந்து எல்லோரும் அட்மிஷனுக்காக அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருப்பார்கள். நல்ல ஸ்கூல் , கோச்சிங் நல்லா இருக்கும், நல்ல மார்க் வாங்கனும் பிள்ளை என்று எல்லா பெற்றோர்களும் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்கள் என்றாலே பிள்ளை பிறந்ததிலிருந்து பிள்ளையைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். எனவே அவர்களை விட்டு விடுவோம்.பிள்ளைகளை நாம் கெட்டியாகப் பிடித்துக்கொள்வோம்.

மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் , அம்மா முத்தம் கொடுப்பது போல செய்தித் தாள்களில் போட்டோ , மற்றும் என் வெற்றிக்குக் காரணம் எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர் , நான் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வேன்  என்று பேட்டி . முதல்வர் கையால் பரிசு etc …etc…. . அது என்னவோ தெரியவில்லை யாருமே எனது வெற்றிக்குக் ஒரு காரணம் எனது சகோதர்கள் (சகோதரிகளும் தான்) என்று கூறுவதே இல்லை. ஒருவேளை , நாம் இருவர் , நமக்கேன் இருவர் என்ற கொள்கைப் பிடிப்பில் பெற்றோர்கள் அளவோடு பெற்றுக் கொள்வதும் காரணமாக இருக்கலாம். இன்றைய காலச் சூழ்நிலையில் சகோதர சகோதரிகள் இல்லா நிலையில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். இந்த நிலை நீடித்தால் நாளை அத்தை , சித்தப்பா ,தாய் மாமா , மைத்துனர் என்பதெல்லாம் , சாரிங்க மச்சினிச்சியை விட்டுட்டேன்னு கோவிச்சுக்காதீங்க, நாளடைவில் எத்தனையோ தமிழ் வார்த்தைகள் போல , வழக்கில் இருந்தே ஒழிந்து விடும்.

 

முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர் கூட மருத்துவம் படித்தவர்கள் எல்லாம்  மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய தொடங்கி இருந்தால் இந்நேரம் இந்தியாவில் எழுபத்தெட்டு பெர்சென்ட் நல்ல ஆரோக்யமாக இருப்பார்கள். மருத்துவம் இன்று வியாபாரம் ஆகிப் போய் விட்டதே.நோய் நாடி நோய் முதல் நாடி என்று வள்ளுவர் சொன்னது போய் நன்கொடையாய் / மற்றும் ட்யூசன் பீஸ் என்ற பெயரில் கொடுத்த முதலை வட்டியுடன் சேர்ந்து எடுக்கத் துடிக்கும் ஒரு வணிகமாகி விட்டது மருத்துவம். நாம் நமது கதைக்கு வருவோம்.

எங்கள் தாத்தா திரு.முத்துமேனாட்டுப் பிள்ளை அவர்களுக்கு மூன்று மனைவிகள்  மற்றும் பதினாறு குழந்தைகள். ஆம். எனது தந்தையின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் பதினாறு பேர். எனது தந்தையின் சகோதரர்களில் சிலர் அவருடைய பிள்ளை மற்றும் பேரக் குழந்தைகள் காலத்தவர். தாத்தா திரு முத்துமேனாட்டுப்பிள்ளை மிகவும் பிரபலமானவர் , எங்கள் சீமையிலே (ஏரியா) மிகவும் பவர் புல் மேன். அவரைப்பற்றியும்  , அவருடைய அனுபவங்களை பற்றியும்  மட்டுமே தனியாக பல பதிவுகள் இடலாம்.  கண்டிப்பாக அவரைப்பற்றி ஒரு சில பதிவுகள் இட வேண்டும் எனது பதிவில்.இப்போதல்ல .நேரம் வரும்போது. அவரைபற்றி எழுதாவிட்டால் ‘உப்பாற்றங்கரையோரம் ......... ‘ ஒரு உயிரற்ற வலைப்பூ ஆகி விடும்.

படிச்சோம்......கிழிச்சோமுக்கும் பாட்டனாருக்கும் என்னடா தொடர்புன்னு கேட்பீர்கள் அல்லவா. எங்கள் ஊர்ப் பகுதியில் 1980 வரைபடித்த அனைவருமே அவர் நிறுவிய R.M.கல்வி நிலையத்தில் படித்தவர்கள் தான்.  1957 –ல் R.M. கல்வி நிலையம் என்று உயர்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்து சுமார் ஆறு மைல் சுற்று வட்டாரத்தின் குழந்தைகளுக்கு உயர்கல்வி பெற வழி வகுத்தவர். அந்தப் பள்ளியைப் பின்னர் அரசுக்கே வழங்கிவிட்டவர்.

இந்தப் பதிவில் வரும் நாமும் , மற்ற ஹீரோக்களும் அந்தப் பள்ளியில் படித்து வந்தவர்கள் தான்.பள்ளியின் பெயர் பெரிய கோட்டை உயர்நிலைப் பள்ளி. பெரிய கோட்டை என்றதும் ஏதோ ஆக்ரா கோட்டை போல , செஞ்சிக் கோட்டை போல நினைத்துவிடாதீர்கள். இது ஒரு சிறிய ஊர். ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்ற ஒரு பஞ்சாயத்துக் கிராமம். முன்னாள் ராமநாதபுரம் மாவட்டம் , இந்நாள் சிவகங்கை மாவட்டம் , எந்நாளும் வறட்சியான, பின்தங்கிய மாவட்டம். அதில் உள்ள ஒரு சிற்றூர் தான் இந்த பெரிய கோட்டை. அந்த ஊரைத்தான் ஆண்டவர்கள் , சரி வேண்டாம் , தம் கட்டுப்பாட்டுக்குள் சிலகாலங்கள் வைத்திருந்தவர்கள் எனது தாத்தா திரு.முத்துமேனாட்டு பிள்ளை , அவரது தம்பி திரு.மாயாண்டியா பிள்ளை , பின்னர் எனது தந்தை திரு.சிவசுப்ரமணியம் அவர்கள். என்ன வாரிசு அரசியலா என்ற கேள்வி கண்டிப்பாக உங்கள் மனங்களில் எழும். தவிர்க்க இயலாததே. 

இங்கே ஒன்றை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். என்னடா இவன் முதலிரண்டு பேரையும் பிள்ளை எனப் போட்டு பின்னர் வெறுமனே சிவசுப்ரமணியம் என்று போடுகிறானே என எண்ணலாம்.

என் தந்தை திமுக வில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதனால் சாதிப்பெயர் வேண்டாமென மறுத்து , அதன் பின்னர் எங்கள் ஏடுகளில் எல்லாம் ‘பிள்ளை’ இனி இல்லை என்றாகி விட்டது. திமுக வின் அரசியல் பிரவேசத்தால் பெயரில் வரும் சாதிப் பெயர் எங்கள் வீட்டில் மட்டுமல்ல ,வெகு அளவில்  தமிழகத்தில் நீக்கப்பட்டு விட்டது.

 

கதைச்சது போதும், “நான் பாடம் படிக்காட்ட உனக்கு என்னவே?” க்கு வருவோம். சகோதர , சகோதரிகளுடன் பிறந்த , நன்கு படித்து , நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு , அவர்களின் இன்றைய நிலைமைக்கு சகோதரர்களும் கண்டிப்பாக ஒரு காரணம் தான். எனது சொந்த அனுபவங்களில் இருந்து இதனை விளக்க விரும்புகிறேன்.

எனக்கு முன்னால் பிறந்தவர் மூவர். அடுத்துப் பிறந்தவர் ஒருவர்.

மூத்த அண்ணா , திரு ராஜேந்திரன், எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. படித்தால் என்ன , படிக்காவிட்டால் என்ன பணக்கார வீட்டுப் பிள்ளை என்கின்ற ஒரு எண்ணம். பம்ப் செட் , நிலங்கள் , அப்பாவின் நிழல் என ஆர்வம் கொண்டு படிப்பை பள்ளியுடன் நிறுத்திக் கொண்டார்.

இரண்டாவது அண்ணா , பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குச் சென்ற பிள்ளை. அவர் கல்லூரியில் சேர்ந்த காலத்தில் எங்கள் ஊரிலிருந்து கல்லூரிக்குச் சென்றவர்கள் மொத்தமே இரண்டு பேர் தான். முதலாமவர் எங்கள் மைத்துனர் திரு ஜெயராமன் . இரண்டாமவர் எங்கள் அண்ணன் திரு தனபாலன் . திரு ஜெயராமன் அவர்களுக்கு இன்னொரு சிறப்பு. அவர்தான் எங்கள் கல்விக்கூடத்தில் படித்து முதல் முதலாக பட்ட மேற்படிப்பு படித்தவர். ( எனக்கு ரோல் மாடல்களில் இவரும் ஒருவர்).இரண்டாவது அண்ணா இளங்கலைப் பட்டத்துடன் தமது படிப்பை முடித்துக் கொண்டார். இவர் எனது பால்ய பருவத்தில் தினமும் பாடம் படிக்கச் சொல்லிக் கொடுப்பார். அப்படிப் படிக்காத நாட்களில் அடிப்பார். அப்படி அடி வாங்கும் போதெல்லாம் நான் கூறிய வசனம் தான் “நான் பாடம் படிக்காட்ட ஒனக்கேன்னவே?”

மூன்றாவது எனது சகோதரி. என் சிறு வயதில் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றது அவள்.. பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தால் ஒரே சண்டை தான். ஆனாலும் மறு நாள் பள்ளி செல்லும்போது மறக்காமல் என்னை அழைத்துச் செல்வாள். அவள் கொஞ்சம் அடித்தளம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டி வரிசையாக ஆறிலிருந்து எட்டு வரை ஒவ்வொரு வகுப்பையும் இரண்டாண்டுகள் படிக்க நானும் அவளும் எட்டாம்வகுப்பில் கிளாஸ் மேட் ஆனோம்.அப்போதும் போட்டி தான். அவள் பொறாமை கொள்கிறாள் எனபதே எனக்கு ஒரு ஊக்க மருந்தாக இருந்தது. இடை இடையே என் நண்பர்களைப் பற்றிய கம்ப்ளைன்ட். “சங்கரு , உருப்படாத பசங்களோடு சேர்ந்து கெட்டுப் போறான்”.இது வீட்டில் மேலும் சிக்கலை ஏற்படுத்த நமது திறமையைக்காட்டி படிக்க வேண்டி இருந்தது. அவரும் பள்ளியோடு படிப்பைமுடித்துக்கொண்டார்.

வீட்டில் உள்ள அண்ணா, அக்கா, (தங்கை) க்கு திருமணம் முடிந்ததும் அந்த வீட்டுப் பையனிடம் கேட்கப்படும் முதல் கேள்வி ‘ என்ன ? மாப்பிள்ளே, லைன் கிளியர் ஆயிருச்சா?’ ஆமாங்க , அவருக்கும் திருமண வாய்ப்பு வந்து விட்டது. அதே போல தான் நமது கல்வியிலும். சாதாரண ஒரு நடுத்தரக் குடும்பத்தில் , அந்தக் காலத்தில் ஒரு பிள்ளையை கல்லூரியில் படிக்க வைப்பதே சிரமம்.  அதே நேரத்தில் மற்றும் ஒன்றா? மிகவும் மலைப்பாக இருக்கும்.  எனவே , லைன் கிளியர் ஆனாத் தான் படிப்பு. இல்லாட்டி மண்ணு தான் படிப்பில. எனக்குத் தெரிந்து எங்கள் ஊரிலே இரண்டு பேர் அப்படிப் பாதிக்கப் பட்டவர்கள். வெளியில் இன்னும் எத்தனையோ பேர் , ‘சம்சாரம் அது மின்சாரம்’ சந்திரசேகராய் , சகோதரர் கலர் பேன்ட் போட காக்கிப் பேண்ட் போட்டவர்களாக இருப்பார்கள். இல்லை என்றால் கலப்பையைப் பிடித்தவர்களாக இருப்பர். நாம் சொல்லுகின்ற இந்த நிலை உயர் படிப்பிற்குத் தான். உயர் நிலைப் பள்ளிப் படிப்புக்கு அல்ல.

அவ்வவ்போது நான் நினைத்துக்கொள்வேன். எனது இரு மூத்த சகோதரர்களும் மற்றும் சகோதரியும் கல்லூரி வரை படித்திருந்தால் நான் எல்லாம் கல்லூரி வாசலை மிதித்து இருக்க மாட்டேன் என்பதை. அவர்கள் ஆரம்பத்தில் வழி காட்டி பின்னர் வழி விட்டு ஒதுங்க என் கல்விப் பயணம் கரை கடந்து ஓடியது. நான் அவர்களுக்கு நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும். என்னைப் போல இன்னும் எத்தனை பேரோ ? வாருங்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் , நண்பர்கள் என நம் உயர்வுக்கு காரணமானவர்களின் பட்டியலில் நம் உடன் பிறந்த சகோதரர்களையும் இணைத்துக்கொள்வோம். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.