படிச்சோம் ... கிழிச்சோம் .. -7
ஓரம் போ.... ஓரம் போ..... சங்கரு வண்டி வருது.
“என்ன டா சங்கரு ,
வரும் போதே இளைய ராஜா பாட்டுல உன் பேரை சேர்த்துக்கிட்டு வர்றே.... கவிஞர்
கண்ணதாசன்னு நினைப்போ?”
“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நான் கவிஞன் தானுங்க. ஆனா
கண்ணதாசன் , வாலின்னு காவியம்
படைத்தவர்கள் ரேஞ்சுக்கு எல்லாம் இல்லீங்கோ. ஏதோ அவுங்க கால் தூசி அளவு
எழுதினாலும் கவிஞன் தானுங்கோ. அப்பிடி என்ன எழுதினோம் கேக்குறீங்களா?”
“டேய் , நான் ஒண்ணும் அப்பிடி எல்லாம் கேக்கலையேடா! “
“ இல்லைங்க , நீங்க வாயைத் தொறந்து கேக்காட்டாலும் ஒங்க
மனசு கேக்குறது நமக்கு தெரியுதுங்க. எடுத்து விடட்டா?”
“ என்ன செய்யுறது ? என் நேரம்... நல்லா வந்து
மாட்டிகிட்டேன்...காலைச் சுத்துன பாம்பு.... கடிக்காம விடுமா? சரி..சரி சொல்லு .”
“முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.
நான் மாடக் கூடல் தன்னில்
நற்றமிழ் புலவோரின்
ஆய்ந்த காப்பியங்களில்
அக மகிழ்ந்து கிடந்தவளே...
தாயே ... தமிழே
தலை பணிந்து வணங்குகிறேன். “
“அடுத்து என்ன? கவிஞன்னு சொன்னா, ஒண்ணு காதல் தோல்வி
இல்லாட்டி கம்யூனிசம் கொள்கைக் காரன்னு இருக்கும். நீ எந்த ரகம்?””
“அப்பிடி எல்லாம் இல்லீங்கோ... ஆனா எல்லாமும் இருக்கும்ங்க.
காதல் தோல்வின்னு புலம்புனவன்லாம் சந்தோஷமா புள்ளை குட்டிகளோட இருப்பான்.
கம்யூனிசம் பேசுனவன்லாம் , காசு வருதேன்னு
அமெரிக்கா , அயல் நாடுன்னு ஓடிப் போய் சொகுசா வாழறான்...
இங்கே மாத்திரம் என்ன வாழுதாம்? இந்தியால படிச்சுப்புட்டு துபாய்ல
சம்பாரிக்கிறது சரியா?
அதான் சொன்னேன்ல....
திமுக ஆட்சிக்கு வந்தா திமுக கரை
வேஷ்டிய கட்டிக்கிட்டும் , அதிமுக ஆட்சிக்கு வந்தா அதிமுக கரை வேஷ்டிய
கட்டிக்கிட்டும் மார்கெட்ல மாமூல் வாங்கிற அரசியல் அல்லக்கைகள் மாதிரி , பொழப்புன்னு ஒன்னைப் பார்க்கனும்ல.....
அப்படீன்னா கொள்கை, லட்சியம்னு எதுவும் இல்லையா? திமுக
காரன்னு சொல்லிக்கிட்டு சண்டைக்குப் போறது எல்லாம் வேஷமா?
இல்லைங்க... அப்படி இல்லே. திமுக காரன்னு சொல்றது
வேஷமில்லை. அது உணர்வு. அது வேறு..அதைப் பத்தி சொல்லனும்னா தனிய ஒரு பதிவே
போடுவோம்..சரியா? ..இப்போ நம்ம கவிதைக்கு வருவோம்.
கவிஞன்னாலே நேரத்துக்கு ஏத்த மாதிரி வேஷம்
போட்டுக்குவோம்... .
காதல் தோல்வின்னு ஒரு கற்பனைல........
காதல் பறவைகளாய் மாறி
கனவுச் சோலைக்குள் புகுந்து
உறவுக்கீதங்கள் இசைத்து
உலகை மறந்திருந்த
ஆனந்தப் பொழுதுகளில் .....
சாதி எனும் அரக்கன் சாட்டை சொடுக்கிவிட
எழுந்த தீப்பிழம்பில்
எங்கே சென்றாய் என் நிலவே?
தவிப்பு என்னும் தலைப்பில் ............... .
வெளியே.................
இருட்பனி.
மூக்குத்திப் பூக்களாய்
மின்மினிப் பூச்சிகள்.
காற்றில் தவழ்ந்தே கானம் இசைத்திட
உள்ளே ...
குழல் விளக்கின்
ஒளி மழையில்
எண்ணக் குதிரையின் கடிவாளத்தை
இழுத்திபிடித்திட இயலாது
அப்பப்பா என்ன
தவிப்பு....
காதல் மொழி பேசிய விழிகளுக்காக ...............
ஓர விழிப் பார்வையினால்
நீ உணர்த்தும் காதல்
நூறு மொழி சொல்லா
நுண் கவிதை யன்றோ....
மார்கழி மாதப் பஜனைக் குழுவிற்காக .................
தொந்திக் கணபதிக்கும் ஜே ஜே.
அவர் தோப்பனாரு பரமனுக்கும் ஜே ஜே..
மதுரை அழகருக்கும் ஜே... ஜே,,
அவர் மருமகனாம் முருகனுக்கும் ஜே..ஜே..
வில்லொடிச்ச ராமனுக்கும் ஜே ஜே
வெற்றி சேதி சொன்ன ஹனுமனுக்கும் ஜே ஜே.
கலவியைப் பற்றி
கத்தியின்றி ரத்தமின்றி களமென்று ஏதுமின்றி
யுத்தம் ஒன்று நடக்குதடி யுகம் பல ஓடுதடி
தீண்டாய் என்றே உதடிசைக்க தீண்டிடவே அவயம் துடிக்க
காய்ந்த சருகு வழி தேடி கனலொன்றில் வீழ்ந்தற்றே
காளையும் கண்ணியம் காமத்தில் கருகி உருகுதடி.
கை விரலிட்ட காயங்களோ
கானங்கள் எழுப்புதடி
களைப்புற்றே கலவியிலே களித்திருக்கும் நேரமடி
வீழ்ந்தார் எவருமில்லை என்றே இருவரும்
வெற்றிக் களிப்பில் மயங்கும் நேரமடி.
சரி டா .. சங்கரு .. பரவா இல்லே ...ஆமா ஒனக்கு சினிமாப் பாட்டெழுத வருமா?
ஏன் சார்? உங்களுக்கு யாரவுது மியூசிக் டைரக்டரைத்
தெரியுமா? எப்பிடியாவது ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்க சார். பின்னிப் பெடல்
எடுத்திருவோம். கேக்குறீங்களா ?
முதல்ல ஏதாவது பாட்டு
ஒன்னு சொல்லேன்..
அந்தக் காலப் பாட்டா ? இந்தக் காலப் பாட்டா?
அதுலே ஏன்டா ஓரவஞ்சனை? அந்தக் காலத்துக்கு ஒன்னு , இந்தக்
காலத்துக்கு ஒன்னு சொல்லு.
.நல்லா கேட்டுக்கோங்க , எம்எஸ்வி ட்யூன்ல எம்ஜிஆர் படத்துல
வர்ற டூயட்.
வள்ளலே வள்ளலே
வணங்குகிறேன்
வாடிய பயிர் போல் சுனங்குகிறேன்
அள்ளியே நீ என்னைக்
கொஞ்சிடவே
அழைக்கிறேன் அழைக்கிறேன்
.வந்திடுவே.
மென்மையே மென்மையே பூங்கொடியே
மேதினியில் உன் போல
யாரும் உண்டோ
என்னவள்
உன்னைத்தான் இழுத்தணைக்க
ஏங்கிடுதே என் மனம்
ஏங்கிடுதே....
ஆரம்பம் நல்லாத் தான் இருக்கு .. ..இந்தக் காலத்துக்கு ?.....
இந்தக் காலத்துக்கா ... சரி அனிருத் இசையில போடுற பாட்டு மாதிரி
கொடுப்போமா ?
ரோடு மேல போறியேடி ரோஷக்காரி
ரோமாபுரி வேலை காட்டும் வேஷக்காரி
கொழுப்பெடுத்த கருப்பான
குறும்புக்காரா
நீ கொடுப்பதென்ன இனிக்கின்ற கரும்புச் சாரா?
டிங்கி டக்கா டிங்கி டக்கா டிங்கி டக்கா தான்.
தினமும் என்னைத் தேடி நீயும் வந்திடத்தான்
டேய் இரு.. இரு.. இதுக்கு என்னடா அர்த்தம்?
அது தான் இந்தக் காலத்துக்குன்னு சொல்லிட்டேன்ல. அப்புறம்
போயி அர்த்தமெல்லாம் கேக்குறீங்களே நியாயமா ?
உங்க கிட்டே பாடல் பாடிக்காட்டினா ஒன்னும் தேறாதுன்னு நல்லாத் தெரியுது .. .. நான்
கெளம்புறேன். எங்க சார் ஆளைக் காணோம்? சார்...சார்...
No comments:
Post a Comment