Tuesday, 17 May 2016

படிச்சோம் ... கிழிச்சோம் - 8 .. தெக்கூர் பையன் தூள் கிளப்புறான்டா


படிச்சோம் கிழிச்சோம் – 8

தெக்கூர் பையன் தூள் கிளப்புறான்டா

சிவகங்கைக்கு மாவட்டத்தில் இருக்குற கல்லூரணி தான்  எங்க அம்மா காந்திமதி பிறந்த ஊரு. கானூர் கண்மாய் பாசனத்தில் கரும்பு நன்கு விளைந்து செழிப்பாக இருந்த ஊர். அங்கே எனது அம்மா வழிப் பாட்டனார்   திரு.வ.தங்கச்சாமியாபிள்ளை  அவர்கள் தான் கிராமஅதிகாரி. (Head man).  மலேசியாவில் வேலை பார்த்து நல்லா விபரம் தெரிஞ்சவரு. நாலும் அறிஞ்ச வரு. அந்தக் காலத்திலே ‘ரோலக்ஸ்” வாட்ச் வைச்சிருந்தவரு. அவர் முதுமையில் வாதம் வந்து நோய்வாய்ப் பட்டிருந்தார். அப்போ எனக்கு பத்து வயசிருக்கும் . அவரு பெயருக்கு வந்திருந்த ஒரு திருமணப் பத்திரிக்கையை  வாசிக்கும் போது அவர் பெயரை வதங்கச்சாமி  என்று வாய் விட்டுப் படிச்சேன்.அதைகேட்டு அங்கே இருந்த அனைவரும் கண்ணில் நீர் தேக்கினர்.

அந்த தாத்தா  ஒருமுறை எங்கள் தந்தைக்குக் கூறிய அறிவுரை ... “தேடி வைக்காததை கூறி விற்காதே” அது என் நெஞ்சில் ஆழப் பதிந்து விட்டது.  அதனால் எங்கள் பூர்வீகச் சொத்துக்களை ஒரு கட்டாயத்தின் பேரில் தந்தை விற்ற போதேல்லாம் என் நெஞ்சம் கனக்கும். ஆனால் நாம் சிறுவனாக இருந்ததாலும் , தந்தைக்கென்று விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் இல்லாததாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எனது தந்தை சொத்துக்களை விற்றாலும் பிள்ளைகளை நல்லவிதமாக வளர்த்திருக்கிறார்.

எனது அம்மாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர் . திலகவதி சின்னம்மா ,கமலா சின்னம்மா , ஜெயா சின்னம்மா மற்றும் சத்திய மூர்த்தி மாமா ஆகியோர். கமலா சின்னம்மா அவர்கள்  கல்லூரணி நடு நிலைப் பள்ளியில் ஆசிரியை.

சின்ன வயசுல இருந்தே  பெரும்பாலும் கோடை விடுமுறைக்கு கல்லூரணி கிளம்பிறுவேன். ஒரு மாசம் முழுசும் அங்கே தான். தாத்தா, சின்னம்மாக்கள், மாமா அனைவருமே பாசமாக இருப்பார்கள். அம்மாச்சி இல்லை. நான் எனது அம்மாச்சியையும் , அப்பத்தாவையும் பார்த்தே இல்லை. இருவருமே நான் பிறக்கும் முன்பே இறந்துவிட்டார்கள்.

மிகச் சிறிய வயசுல நான் சரியான நை... நை..  ..அழுமூஞ்சி எல்லாம் இல்லிங்க. சும்மா லொட , லொட கேஸ்.. தொன தொன வென எதாவது கேள்விகள் கேட்டுக்கிட்டே இருப்பேன்.

அப்படி மிகச்சின்ன வயசுல நடந்தது இப்போ ஞாபகம் வருது. ஆமாங்க .. ஆட்டோகிராப்பே தான். அப்ப எனக்கு  அஞ்சு  இல்லாட்டி  ஆறு வயசிருக்கும் , அந்த வயசுல ஒரு தடவை கல்லூரணி போயிருந்தப்ப   வீட்டில என் தொல்லை தாங்கலைன்னு  , சின்னம்மா அவர்கள் என்னையும் அவர்களுடன் பள்ளிக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க .நல்ல வேளை .இப்ப  இருக்கிற மாதிரி  பள்ளிகள் அப்ப இல்ல. அந்தப் பள்ளியில் பயிலாத குழந்தை பள்ளிக்கு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை.எனவே நானும் அந்தச் சின்னஞ் சிறுசுகளுடன் தரையில் அடக்கமாக அமர்ந்திருந்தேன்.ஆம். அப்போதெல்லாம் வகுப்பறையில் பெஞ்ச் கிடையாது. சின்னம்மா படம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு சிறுமியை அழைத்து  ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ‘ சொல்லு எனக் கூறினார். அந்தச் சிறுமி திரு திரு என விழித்தார். வேற யாரவது சொல்லுங்க என்று டீச்சர் சொன்னாங்க. ஒன்னு சொல்ல மறந்துட்டேன். எங்க பெரியகோட்டை பள்ளியிலே , லீலாவதி டீச்சர் , தவமணித் தாய் சாமுவேல் டீச்சர் , குழந்தை தெரசா டீச்சர் மற்றும் அமலதாஸ் அசிரியர் அனைவரும் எனக்கு வைத்திருந்த பட்டப் பெயர் ‘முந்திரிக் கொட்டை’ . பழக்கம் போகுமா என்ன ? நான் படக்குன்னு எழுந்து சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.

 

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்றது வெள்ளை பசு உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளை பசு

பாலை நன்றாய் குடிக்குது கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு மடி

முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.”

எல்லா மாணவர்களுக்கும் ஆச்சரியம். டீச்சர் எல்லோரையும் கை தட்டச் சொன்னாங்க. குஷியா எல்லாப் பிள்ளைகளும் கை தட்டினாங்க.  இந்தக் கை தட்டல் இருக்கே அது ஒரு போதை மாதிரி . ஒரு தடவையாவது வாங்கிரணும்னு எல்லோருமே ஏக்கப்படுவோம். ஒரு முறை வாங்கிட்டா இன்னும் வாங்கனும்னு ஓர் ஆர்வம் வந்திரும். டீச்சர் சின்னம்மா வேற என்ன தெரியும்னு கேட்டாங்க.

சான்ஸ் கிடைச்சுதா சங்கரா ... அடிச்சுத் தூள் பண்ணுன்னு அப்பவே மனசு ஆர்டர் போட வரிசையாய் வந்து விழுந்தன...

அறஞ்செய விரும்பு...ஆறுவது சினம் .என்று ஆத்தி சூடியையும்

கற்கை நன்றே கற்கை நன்றே .. பிச்சை புகினும் கற்கை நன்றே.. என்று கொன்றை வேந்தனும்

‘ ஊசி மூஞ்சி மூடா எனக்குக் கூடு கட்டத் தெரியாது அதைப் பிரித்து எரியத் தெரியும் ‘ என் குருவியைத் திட்டிய குரங்கின் கதையையும் அச்சு மாறாம பிச்சு எடுத்து விட்டுட்டோம்ல. .

கை தட்டல் மேலே கை தட்டல். பக்கத்தில இருந்த கிளாஸ் பசங்க எல்லாம் வந்துட்டாங்க.. ஒரே ஆச்சரியம் .

அவுங்க அடிச்ச கமென்ட் என்ன தெரியுமா ?

‘தெக்கூர் பய தூள் கிளப்புறான்டா’

No comments: