Monday, 12 August 2013

நல்ல பசங்க ....... நாங்க நல்ல பசங்க..


நல்ல பசங்க ..... நாங்க  நல்ல  பசங்க.......................
 
இந்தக் காலத்துப் பிள்ளைங்களை , அவுங்க அடிக்கிற லூட்டிகளைப் பார்க்கும்போது  நாங்கள்லாம் ரொம்ப நல்ல பசங்கன்னு தோனுது.
கவனிக்கவும்: பெங்களூருவில் பசங்கன்னு சொன்னா அது பெண் பிள்ளைகளைக் குறிக்குமாம். இங்கே நாம பசங்கன்னு சொன்னா பசங்க தான் சார். தப்பால்லாம் நெனைக்காதீங்க.
பின்ன என்ன சார் ? காலையில எழுந்த உடனே  கையில மொபைல் போனு ,பேஸ் புக்.   இல்லாட்டி லேப்டாப்பு. அவுங்க உலகமே தனி. எதைக் கேட்டாலும் எரிஞ்சு விழுவாங்க. லீவுன்னு விட்டா அது சுட்டெரிக்கும் வெயிலா இருக்கட்டும் .கொட்டும் மழையா இருக்கட்டும் கிரௌன்ட்ல கிரிக்கெட்டு. இவுங்க மாதிரியா நாம எல்லாம் இருந்தோம் ?
யேய் பெரிசு , என்ன ரொம்ப சலிச்சுக்கிறே. அப்படி என்ன தான் நீ நல்ல பிள்ளையா இருந்தே , சொல்லு.அதையும் தான் பார்ப்போம்.
டேய் பொடிப் பசங்களா, நாங்க எல்லாம் ரொம்ப நல்ல பசங்கடா.. ஒங்களை மாதிரி எல்லாம் இல்லே.
அதைத்தான் சொல்லு பெரிசு . சும்மா பில்டப் கொடுக்காதே. ஓவரா சீன போடுறே.
ஒங்களுக்கு என்னடா தெரியும் எங்களைப் பத்தி. நாங்கள்லாம் ரொம்ப தங்கமான பசங்கடா.
இந்தா பெரிசு , பார்த்தியா? அந்தக்காலத்தில காங்கிரஸ் காரங்க பேசுற மாதிரி பேசுறே. அவங்க தான் ஒவ்வொரு வருஷமும் சுதந்திர தினம் இல்லாட்டி குடியரசு தினத்தன்னிக்கு ஒரு கூட்டம் போட்டு  முதல்ல ஒருத்தர் வந்து பேசுவாரு “காந்தி நம் தேசத் தந்தை. அவர் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். வந்தே மாதரம் “. அதுக்கடுத்து இன்னொருத்தர் பேசுவாரு. ‘ காந்தி சுதந்திரம் வாங்கித் தந்தார் .அவர் நம் தேசத் தந்தை. வந்தே மாதரம்.” இது போக அடுத்து ஒருத்தர் வருவாரு அவரு “ இந்தியாவின் தந்தை காந்தி .அவர் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் .. வந்தே மாதரம்”  அது மாதிரி நாங்க நல்ல பசங்க , நடு வீட்டுல தோண்டுன பசங்கன்னுகிட்டு.மேலே சொல்லு.
 
நாங்க காலையில எழுந்ததும் பண்ணைக்குப் போயி பால் வாங்கிட்டு வந்து கொடுப்போம். அப்புறம் காபியை குடிச்சிட்டு வயல்காட்டுக்கு போவோம். அப்புடியே வர்ற வழியிலே ஊருணில குளிச்சுட்டு வீட்டுக்கு வருவோம். வீட்டுல செஞ்சு வச்சிருக்கிறதை சாப்பிட்டிட்டு ஸ்கூலுக்கு சீக்கிரமாகவே கிளம்பிப் போயிருவோம்.
அந்தக் கதையெல்லாம் இங்கே வேணாம். காலையிலே எழுந்த உடனே பால் பண்ணைக்குப் போய் பால் வாங்கிட்டு வர்றது, ஏன்னா அப்பத் தான் ஒனக்கு சீக்கிரமா காபி கெடைக்கும்.ஒரு வேலை போயிருக்கலாம். போகட்டும். இந்த வயக்காட்டுக்கு போவோம் , குளத்தில குளிப்போம் , அப்புறம் ஸ்கூலுக்கு சீக்கிரமாப் போவோம்னு சொல்லுறியே அது தான் கொஞ்சம் ஒதைக்குது.
அப்படி என்னதான் பண்ணுவே? இரு ... இரு .. ஒன்கிட்டே கேட்டா உண்மை வராது. நம்ம சங்கரு தாத்தா கிட்டே கேட்ருவோம். அவரு தான் அப்பப்ப ஏதோ கொஞ்சம் கொஞ்சம் ஒளிவு மறைவு இல்லாம உண்மையச் சொல்றாரு.
சங்கர் தாத்தா , இந்தப் பெருசு சொல்றதெல்லாம் உண்மையா ? ரொம்ப பீத்திக்கிருது .  கொஞ்சம் சொல்லேன்
ஆமாடா. அது சொல்றதெல்லாம் உண்மைதான் . நீ நம்ப மாட்டே. அதுனால நான் விளக்கமாவே சொல்லிடறேன். காலையிலே எழுந்த உடனே  பால் பண்ணைக்குப் போகனும். போய்த்தான் ஆகனும். வேற வழி இல்லே. எழுந்திருக்கிறது எப்படியும் ஆறரை ஆயிடும். பால் பண்ணைய மூடிட்டுப் போயிருவாங்க . அதுனால  வெரசா பண்ணை மூடுறதுக்குள்ள ஓடனும். இல்லாட்டி அன்னைக்கு காப்பி யாருக்கும் இல்லே. காப்பி இல்லேன்னா வட்டியும் மொதலுமா நம்மைத் தான் டின்னு கட்டிருவாங்க.அதுனால போய் பாலை வாங்கியாந்து கொடுத்திருவோம்.
வீட்டுல காப்பி ரெடி ஆனதும் நல்ல பெரிய டம்ளர்ல அமுக்கி அமுக்கி , ஒ அமுக்க முடியாதுல்ல, தழும்ப தழும்ப ஊத்திக் குடிச்சிட்டு வயக்காட்டுக்கு ஓடுவோம். வயக்காட்டுக்கு ஓடுறத்துக்கு ரெண்டு காரணம். முதலாவது வெல்லக்கட்டி காபி தன் வேலைய உடனே காட்டிடும்,சீக்கிரமா தண்ணி இருக்கிற இடமாப் பார்த்து ஓடனும். ரெண்டாவது காரணம் தான் ரொம்ப இன்டரெஸ்டிங். வயக்காடுன்னா அங்கே என்னென்ன கிடைக்கும். சொல்லு பார்க்கலாம்.
நம்ப சாப்பிடுறது எல்லாம் கெடைக்கும்.
எப்பிடி கெடைக்கும்?
செடியில கெடைக்கும். வீட்டுல பூத்தோட்டில வளர்ற பூச்செடியில இருந்து ரோஸ் கெடைக்கிற மாதிரி வயக்காட்டுல தக்காளிச் செடியில தக்காளி கெடைக்கும், கத்தரிக்கா செடியில கத்தரிக்கா கிடைக்கும், அரிசிச் செடியில அரிசி கிடைக்கும் , ரவா செடியில ரவா கிடைக்கும் அப்புறம் சேமியச் செடியில சேமியா கிடைக்கும்.
அப்படின்னா சப்பாத்தி , சப்பாத்தி செடியில கெடைக்குமா?
தாத்தா நீங்க எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நெனைச்சீங்களா? சோறு அரிசியில செய்வாங்க.அந்த அரிசிதான் செடியில கிடைக்கும் அதுமாதிரி  சப்பாத்தி,கோதுமை  மாவுல செய்வாங்க. அந்த மாவுதான் கோதுமை செடியில கெடைக்கும்.
ரொம்பத்தான் தெரிஞ்ச்சிருக்கு உனக்கு. சூப்பர். இப்போ இது போதும். வேண்டாம்ப்பா இனி ஒன்கிட்டே இந்த விஷப் பரிட்சை. நம்ம மேட்டருக்கு வருவோம். பெரிசு வயலுக்குப் போகுமா! பெரிசு என்ன பெரிசு , அப்போ அதுக்குப் பத்துப் பதினஞ்சு வயசிருக்கும். அந்த விடலை பருவத்துல கல்லை வயித்துக்குள்ளே போட்டாலும் கரையும்பாங்க. நம்ம ஆளு வயகாட்டுக்குப் போனதுமே முதல் அட்டாக் ‘கரும்புத் தோட்டம் தான் ‘. ஆமா , நீ கரும்பு சாப்பிட்ருக்கியா? எவ்வளவு சாப்பிடுவே?
ஓ... சாப்பிட்டுருக்கேன். நல்லா இனிக்கும். ஒரு கரும்பு புல்லா சாப்பிட்ருவேன்.
அஞ்சடிக் கரும்பையும் சாப்பிட்ருவியா ?
தாத்தா , ஒனக்கு ஒண்ணுமே தெரியல்லை. ஒரு கரும்பு ஒரு அடிதான் இருக்கும். பத்துக் கரும்பு சேர்த்து ஒரு பாக்கெட்ல போட்டு சூப்பர் மார்க்கெட்ல விப்பாங்க.
சரி தான்.. சுத்தம்.. ஒங்க தாத்தா விவசாயி , நூறு ஏக்கர் நிலம் வச்சிருந்தார் ,நாலு ஜோடி மாடு இருந்துச்சுன்னு எல்லாம் சொல்லிடாதே. நம்ப மாட்டாய்ங்க.சரி நம்ம கதைக்கு வருவோம்.
நம்ம ஆளு கரும்புக்காட்டுக்குப் போய் ரெண்டு முழுகரும்பை ஒடிச்சி வந்து சாப்பிட ஆரம்பிப்ப்பாப்ல..
ரெண்டு கரும்பா?
இல்லே. உன் பாஷைல சொல்லனும்னா பத்துக் கரும்பு. கரும்பை தின்னு முடிச்சிட்டு அடுத்த விசிட் கடலைப் புஞ்சைக்கு..ரெண்டு பெரிய கடலைச் செடியப் பிடுங்கி அதுல இருக்கிற கடலையைப் பூராம் பறிச்சு டிரௌசர் பாக்கெட்ல போட்டுகிட்டு ஒரு ஜூட்.
வீட்டுக்கு கொண்டு வந்திருவாங்க்களா?
வீட்டுக்கா? அப்புறம் யாரு பெல்ட்ல அடி வாங்கிறது? அதுனால வீட்டுக்கு வரும் முன்பு எல்லாத்தையும் தின்னு காலியாக்கிட்டு பின்னே குளத்தங்க்கரை. இவுங்க செட் எல்லாம் ஒவ்வொருத்தரா வந்து சேருவாங்க. எல்லோரும் வந்ததும் குளியல் தான்.. ஒரே கும்மாளம்தான். கடப்பாரை நீச்சல், தவண்டை  , மல்லாக்க நீச்சல்னு ஆட்டம் தான். ஒருவழியா குளியல் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா  அம்மா டிபன் ரெடி பண்ணி வச்சிருப்பாங்க. டிட்லி , தோசை , உப்புமா , புட்டு , இடியாப்பம் , பணியாரம் னு ஏதாவது ஒன்னு. தினம் மாறிக்கிட்டே இருக்கும்.
நீங்க பிரட் , பட்டர் , ஜாம் ,ஆம்லேட் எல்லாம் சாப்பிட மாட்டீங்களா?
பிரட்டா? ஓ ரொட்டிகட்டா ? சாப்பிடுவோமே. என்னைக்காவது காய்ச்சல் அடிச்சா வாங்கிட்டு வந்து ரொட்டிய பாலில் நனைச்சு சாப்பிடுவோம்.டிபன் சாப்பிட்டு முடிச்சதும் , நேத்து கொண்டு வந்து ஆணில இல்லாட்டி கதவுக்குப் பின்னாடி மாட்டி வச்ச பைக்கெட்டைத் தூக்கிட்டு ஸ்கூலுக்குப் போயிருவோம். நாங்க போனதுல இருந்து முதல் மணி அடிக்கிற வரைக்கும் விளையாட்டுதான். சினிமாப் பேரு , ஊர்ப் பேரு ,  உஸ்கி , தாயம் இப்பிடி ஏதாவது விளையாண்டுட்டு முதல் மணி அடிச்சதும் வகுப்புக்குப் போயிருவோம்.அப்புறம் ஸ்கூல்ல வாத்தியாரு பாடம் எடுக்க ஆரம்பிச்சுடுவார். எப்பிடி தெரியுமா?
டேய் ராமு , டீ வாங்கிட்டு வா. டே அளகேசா , அந்தப் பதினோராம் வாய்ப்பாட சொல்லு. யாரவது பேசுனா பேரு எழுதிக் கொடு ன்னு சொல்லிட்டு சேர்லே உட்க்கார்ந்த படி ஒரு குட்டித் தூக்கம்.ராமு டீ வாங்கி வந்து “ சார் ..சார்.. னு கூப்பிடுவான். சார் கண்ணு முழிக்கிற வரைக்கும் கையிலே டீயை வச்சுக்கிட்டு நிப்பான். வாத்தியாரு கண்ணைத் தொறந்து டீயை வாங்கி ஒரு மடக்கு குடிச்சிட்டு , பெரம்பால மேசைல ரெண்டு தட்டு . ‘சத்தம் போடாதீங்கடா.. பாடத்தை கவனிங்க டா ”
தாத்தா அம்மா ஹார்லிக்ஸு குடிக்க கூப்பிடுறாங்க ......ஹார்லிக்ஸு குடிக்கலைன்னா திட்டுவாங்க. நம்ம நாளைக்குப் பேசுவோம்... சரியா?
இது தான் இந்த சின்னப் பசங்க கிட்டே.. ஒன்னு சொன்னா முழுதும் கேக்க மாட்டாங்களே. பக்கிக , வரட்டும் நாளைக்கு. அண்ணே நீங்களும் போயிட்டு வாங்க.
அன்புடன் ஷார்ஜாவிலிருந்து சங்கரலிங்கம்.

Tuesday, 4 June 2013

சயின்டிஸ்ட் சங்கரின் சப்பாத்தி அவியல்-காப்புரிமைக்கு உட்பட்டது..

சில நாட்களுக்கு முன்னர் முக நூலில் தம்பி கார்ட்டூனிஸ்ட் முருகு சாதம்  வடித்த கதையை எழுதி இருந்தார்.அப்போதே நினைத்தேன் நாமும் சப்பாத்தி அவித்த கதையைச் சொல்வோமே என்று.

என்னது சப்பாத்தி அவிச்சீங்களா? சப்பாத்தி சுட்டேன்னு சொல்லுங்க.

ஐயோ இல்லீங்க. சப்பாத்தி சுடலை. அவிச்சோம். நிஜமாவே அவிச்சோம்.

ஓ , சுடத் தெரியாம அவிச்சீங்களா?

இங்கே பாருடா ! அய்யா, நமக்கு சப்பாத்தியும் சுடத் தெரியும் , பள்ளிக்கூடத்தில படிக்கிறப்போ பிலாசிக் கொட்டைய  (சுடுகாய்)தரையில் தேய்ச்சு நம்ம கூட்டாளிகளை தொடையில சுடவும் தெரியும். அது போக  துப்பாக்கியும் சுடத் தெரியும்.

துப்பாக்கியா?  இந்த தீவாளியப்போ சுருள் போட்டு டப் டுப்புன்னு வெடிக்கிற ரோல் துப்பாக்கி தானே

இந்தக் கிண்டல் தானே வேண்டாங்கிறது. நிஜத் துப்பாக்கிங்க, நிஜத் துப்பாக்கி. போலீஸ்கார்லாம் வச்சிருப்பாங்களே,பெரிய துப்பாக்கி, அந்தத் துப்பாக்கிங்க.நாம காலேஜ் படிச்சப்போ N.C.C , Navy ல இருந்தோம். அப்போ பசுமலை ரேஞ்சுல பயரிங் ஸ்குவாட் நடந்துச்சு. நாம் அதுல நல்லா பயர் பண்ணி முதல் இடத்துக்கு வந்து , நேவி ஆபீஷருங்க கிட்டே சபாஷ் வாங்கினோமாக்கும்.என்ன, அதுக்கு அப்புறம் ஒரு வாரம் கழுத்த திருப்ப , கிருப்ப முடியல்லே.

என்ன அண்ணே?  பகுத்தறிவாளர் அய்யா M.R.ராதா அவர்கள் 1967 ல , ஏழை பங்காளன், கொடுத்துச் சிவந்த கரத்தினன், பொன்மனச் செம்மல்., M.G.R .......

"உய்... உய்,.....உய்... உய், உய்... உய் ............."

விசில் அடிக்கிரவுங்க , கை தட்டுரவுங்கல்லாம் முடிச்சுட்டீங்களா?  சரி.. தொடருவோம்.MGR அவர்களைக் கழுத்தில் சுட்டது போல நமக்கு ஆச்சுன்னு நெனைச்சுட்டீங்களா? அதெல்லாம் இல்லைங்க. இது வேற சமாச்சாரம் . சயின்சு. நியூட்டனின் விதியாம். எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. “Every action has got a reaction”. அதாவதுங்க , நீங்க ஒரு பொண்ணப் பார்த்து கண்ணடிக்கிறீங்க.

யேய் , இரு..இரு... நீ நம்மல மாட்டிவிடாம இருக்க மாட்டே போல. நீ சப்பாத்தி சுட்ட கதை நமக்கு வேணாம். ஆளை விடு.

இது சப்பாத்தி சுட்ட கதை இல்லே .அவிச்ச கதை .நீங்க அப்பிடிசொன்ன எனக்கு கோபம் வரும்.  எனக்குக் கோபம் அதிகமாயிருச்சுன்னா ,பசங்க ஜீவா மாதிரி பாக்கெட்டைக் கிழிச்சிருவேன். அப்புறம்  பாவம் நீங்க.

ஏன்டா , ஒன்னோட பாக்கெட்டை நீ கிழிக்கப்போற , அதுக்கு ஏன்டா நான் பாவம்?

ஐயே ,ஆசையப் பாருங்க. நான் கிழிப்பேன்னு சொன்னது ஒங்க பாக்கெட்டை. சரி , சரி அதுக்காக தமிழ்ப் படங்கள்ல ஒரே ஒரு சீன்ல வர்ற துணை நடிகை மாதிரி கையை நெஞ்சில வச்சு மறைச்சுக்க வேணாம். கதையைக் கேளுங்க.நீங்க ஒரு பொண்ணப் பார்த்து கண்ணடிக்கிறீங்க..  அது ஒரு வினை.


டேய் நான் ரொம்ப நல்லவன்டா . வினையே வேண்டாண்டா.
இப்பிடிச் செஞ்சா எங்கப்பா சுத்துக் கட்டு, கல் தூண்ல கட்டி வச்சு புளிய விளார் இல்லாட்டி சிங்கபூரு பெல்ட் ட்ட ஒடம்பு புல்லா கோடு போட்டுருவாரு. விடுடா..

அப்பிடி எல்லாம் இல்லீங்கோ. ஒரு பேச்சுக்குத் தானே.
அதாவது , நீங்க ஒரு பொண்ணப் பார்த்து கண்ணடிச்சீங்கன்னு வச்சுங்கோங்க.அதுக்கப்புறம் என்ன நடக்கும் ?  ஒண்ணு, அந்தப் பொண்ணு கண்ணடிக்கும் , இல்லே கால்ல மாட்டி இருக்கிறதால அடிக்கும். அதுவும் இல்லைன்னா அவுங்க அண்ணன் காரன் , அப்பன்காரன் அரிவாளைத் தூக்கிட்டு வந்து ரெண்டு தட்டு
குடுத்துட்டுப் போவாங்கல்ல அதுதான் ரியாக்ஷன். எதிர் வினை.
அது போல , மிலிடரி துப்பாக்கில டிரிக்கர்ல விரலை வச்சு அழுத்தினா துப்பாக்கிக் குண்டு சீறிக்கிட்டு முன்னாடி பாயும் . குண்டை சுட்ட துப்பாக்கி பின்னாடிப் பாயும். அதை தடுக்கிறதுக்கு துப்பாக்கியை தோள்ல வச்சு கெட்டியா அழுத்திப் பிடிச்சுக்கிட்டு சுடனும். கொஞ்சம் ஏமாந்தோம் , காலர் எலும்பு அம்போ தான். அதுவும் 303 துப்பாக்கி பார்திருக்கீங்கள்ல. அடிப்பக்கம் நல்ல கனமா , வைரம் பாய்ஞ்ச தேக்குல செஞ்சிருப்பாங்க. ஒவ்வொரு அடியும் சும்மா இடிதான். கிட்டத்தட்ட அஞ்சு சுற்று. ஒரு சுற்றுக்கு 10  குண்டு. மொத்தம்  50  குண்டு சுட்டோம்.அதனோட விளைவு தான் , கழுத்துப்பகத்துல ஓரூ வீக்கம் , கழுத்தைச் சரியா திருப்ப முடியாம அவதிப்பட்டோம்.

யோவ் , சப்பாத்தி சுட்ட கதையைச் சொல்லுன்னா ரொம்ப பீலா விடுறே, சப்பாத்தி சுட்ட கதையைச் சொல்லு சீக்கிரம்

இங்கே பாருங்க , சப்பாத்தி சுட்ட கதை இல்லே , அவிச்ச கதை அவிச்ச கதை , அவிச்ச கதை. மறுபடியும் யாராச்சும் சப்பாத்தி சுட்ட கதைன்னு சொன்னீங்க , அப்புறம் மதுரைக்காரன்,என் ஸ்டைலுல ரெண்டு அப்பு கொடுத்திருவேன். சரி கதைக்கு வருவோம்.

சப்பாத்து சுடுறதுன்னா ஆளுக்கு ஒரு அஞ்சுன்னு வச்சு சுட்டாலே எப்பிடியும் ஒரு இருபது சப்பாத்தி சுடன்னும். நல்லாக் அரச்ச சம்பா கோதுமை மாவை நாலு கப்பு ஒரு குண்டான்ல எடுத்து ,எண்ணையோ பாலோ விடாம , கொஞ்சம் உப்புப் போட்டு பிசைங்க. என்ன கேட்டியா இருக்கா? அவசரப்பட்டு தண்ணிய ஊத்த  வேணாம். நல்லா பெசைஞ்சுக்கிட்டே இருங்க. அப்ப அப்பா கொஞ்சம் தண்ணிய தெளிச்சுகிட்டே பிசைங்க.  பத்து நிமஷம் பசைஞ்சுட்டு, அப்பிடியே ஒருபத்து நிமிஷம் வச்சிருங்க. பின்னர் அதை சின்ன சின்ன உருண்டையாக்கி , சப்பத்திக்கட்டைல வைச்சு அழகாய்ப் பொறியும் அம்பிகா அப்பளம் சைசுக்கு ரொட்டியாத் தட்டி வச்சிருங்க. அடுப்புல காய்ஞ்ச தோசைக் கல்லுல என்னை ஊத்தாம, இந்த ரொட்டிய போட்டு புரட்டி  எடுத்து. அந்தச் சூடு குறையாம பக்கத்து அடுப்பு  நெருப்புல போட்டு எடுத்தா , பூரி மாறி வரும் , அதுக்குப்பேரு தான் புல்கா / சப்பாத்தி. கொஞ்சம் தோசைக்கல்லுல என்னைய ஊத்தி எடுத்தா நம்ம ஊரு சப்பாத்தி. ஹிந்திக்காரங்க எல்லாம் அதை பரோட்டா ன்னு சொல்லுவாங்க.
இப்பிடி கஷ்டப்பட்டு  சுட்ட சப்பாத்தியில ரெண்டு மூணு மிஞ்சிப் போச்சுன்னா தூக்கியா போட முடியும் ? செல்லும் செல்லாததுக்கு வீட்டுல ஒரு ஏப்பை , சாப்பை இருக்கும் .பெரும்பாலான நேரத்தில அது நாமாகத் தான் இருக்கும். அடுத்த் வேளை சாப்பாட்டு நேரத்தில அன்போட அத்தான் இத நீங்க சாப்பிட்ருங்கன்னு ஒரு வேண்டுகோள். ஆக்சுவல்லி அது வேண்டாத கோள்.
'என்னம்மா சப்பாத்தி காய்ஞ்சு போச்சே'ன்னு கம்ப்ளைன்ட் குடுத்தா ரெண்டு சொட்டு என்னைய கல்லுல விட்டு மறு படி சுட வச்சுக் கொடுப்பாங்க. அதுக்கு சும்மாவே சாப்பிட்டிருக்கலாம். இதற்கு ஒரு வழி கண்டு பிடிக்காம இருக்கிறதா? சைண்டிஸ்டு ஆச்சே. என்ன பண்ணலாம்னு ரொம்ப நாளா யோசனை.
அப்போ தான் ஒரு நாள் பொரட்டா கடை வச்சு நடத்துற பெரியசாமி அண்ணே ஒரு தொழில் ரகசியத்தைச் சொன்னது ஞாபகம் வந்துச்சு. அதாவது காஞ்சு போன பொரட்டாக்களைத் தூக்கி குப்பைல போடாம வச்சிருந்து அடுத்த நாள் இட்லித் தட்டுல வச்சு அவிச்சு எடுத்து சுடச் சுட கொடுப்பாங்களாம். அத சாப்பிடுறவங்களிடம் இருந்து  "பெரியசாமி கடைப் பொரட்டா சூப்பரு. அடிச்சிக்கிறவே முடியாது " ன்னு கமெண்டு வேறு.

ஆகா புடிச்சாச்சு , யுரேக்கா , யுரேக்கா ன்னு உரக்கக் கத்தி , பெரியசாமி அண்ணே பொரட்டாவ இட்லித் தட்டுல அவிச்சா , சப்பாத்திய நாம ஏன் இடியாப்பத் தட்டுல அவிக்கக் கூடாதுன்னு ஒரு கேள்வி கேட்டு  இடியாப்பத் தட்டுல ஒரு ஐஞ்சு நிமிஷம் அவிச்சு எடுத்தோம் . பின்ன அதை சூடா எடுத்து ருசி பார்த்தப்போ, சூப்பர்
நிஜம்மாத் தாங்க. , நமது வாத்தியாரு...  

 உய்ய்ய்.. உய்ய்ய் ...

டே , டே இருங்கடா , இவங்க ஒருத்தன்ங்க , வாத்தியாருன்னு சொல்ல விடமாட்டேங்கிறாங்க. உடனே  உய்..உய்.. தான்

 நமது வாத்தியாரு, ஆயிரத்தில் ஒருவன்ல நீலக் கலர் பால்ல ஏதோ ஒரு சொட்டு புழிஞ்சு விட , பாலும் வெள்ளையா மாற , சக்சஸ், சக்சஸ்னு கத்துவாரே அது மாதிரி நாமும் கத்திட்டோம்.

டேய் அய்யா, வாத்தியாரு மேட்டரை சொன்னா தப்பு இல்லாம சொல்லு. அவரு எங்கேடா சக்சஸ்னு சொன்னாரு ., வெற்றி , வெற்றி னு தானே சொன்னாரு.

சரிங்க ... தப்பாச் சொன்னதுக்கு ரொம்ப சாரீங்க. இந்தியா , இலங்கை , சிங்கப்பூர், மலேசியா , தாய்லாந்து ..........

டேய் . நிறுத்து . நிறுத்து ,நீ என்ன கோபால் பல்பொடி விக்க ஆரம்பிச்சுட்டே
இல்லீங்க அண்ணா, இது மாதிரி நம்ம ஒரு இருபத்தி ரெண்டு  நாடுகளுக்குப் போயிட்டு வந்திருக்கோம்ல , அதுனால இங்கிலிபீஷு பேசிப் பேசி நமக்கும் கொஞ்சம் பழக்கம் ஆயிப்போச்சு. அதுனால தான் வெற்றின்னு கூவாம , சக்ச்சஸ்னு கூவுனோம்.

சங்கரா, வெல்டன் , தீசிஸ் எழுதிரலாம், ஜர்னல் ஆப் வெட்டியாலாஜி ல பப்ளிஷ் பண்ணி இன்னோரு டாக்டரேட் வாங்கிரலாம்னு முடிவு பண்ணிட்டோம். அப்பிடியே காப்புரிமையும் எடுத்துரனும்னு அன்னைக்கே முடிவெடுத்துட்டோம்.

யான் பெற்ற இன்பம் பெறுக  இவ் வையகம் இல்லையா ? வையகம்னா உலகம் தானே. உலகம் இருக்கட்டும் , மொதல்ல உலகநாதன் புத்திரி ,அதுதாங்க நம்ம முதல் ரசிகை மற்றும் குருவான எங்க வீட்டு வையகத்துக்குச சொல்லிக் கொடுத்தோம். அவுங்களும் அதுல இருந்து , காய்ஞ்சு போன சப்பாத்திய கடமை தராம அவிச்சே கொடுத்தாங்க. அவுங்க தான் இப்போ ஊருக்குப் போயிட்டாங்களா .


"அப்ப என்ன ஜாலி தானே. எஞ்ஜாய் மாமே.."

அட நீங்க  ஒன்னு .. நானே வள்ளுவர் சொன்ன.....

"நீங்கின் தெராஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றால் இவள்" னு தவிச்சுக்கிட்டு இருக்கோம்

"யேய் நிறுத்து , இந்தக்குறளைத் தானே  கொஞ்ச நாளைக்கு முன்னாடி முக நூல்ல போட்டு லைக் அள்ளிக்கிட்டே.. மறுபடியும் அது தானா?"

அதுதான் .ஆனா ஒரு ரகசியம் .அதில தப்புத் தப்பா எழுதிப்புட்டேன். யாரும் கண்டுபுடிக்கலை. எல்லாத்தையும் வாசிக்கிற கலைஞர் அய்யா என்னைக்காவது வாசிக்கும்போது கண்டுபுடிச்சு உரிமையோட நாலு டோஸ் விட்டா 'இல்லை அய்யா , நான் கரெக்டா எழுதி இருக்கேன்னு இதைக் காமிச்சு தப்பிக்கலாம் பாருங்க அதுக்குத்தேன்.

சரி சரி , அதை விடுங்க.நம்ம கதைக்கு வருவோம் . எப்பிடியும் சமையல் நம்ம தானே செய்யனும். அப்பிடி ஒரு நாள் காலையில சப்பாத்தி சுட்டப்போ மிஞ்சிபோச்சு. அதை ஈவினிங் ,ரொம்ப பொறுப்பா அவிப்போம்னு சொல்லி இட்லிச்சட்டில கொஞ்சம் தண்ணி ஊத்தி , இடியாப்பாத் தட்டை மேல வச்சு சப்பாத்திய அதுல அடுக்கி மூடி வச்சுட்டு அடுப்பை ஏத்தி விட்டு வந்துட்டோம். கம்பியூட்டர்ல உக்காந்து surfing னு எதையெதையோ அலசிக்கிட்டு இருந்தோம். நமக்குத் தான் இது வேணாம் , அது வேணாம்னு தள்ளுற பழக்கம் இல்லையே. ஆன்மீகத்தையும் படிப்போம் , அண்ணாவின் கம்பரசத்தையும் படிப்போம்.  சிட்னி ஷெல்டன் தொடங்கி சமையல் ராணி செல்லம்மா சொல்ற பீட்ரூட் சட்னி வரைக்கும் படிப்போம்.


நெட்டுலயும் , கிரிக்கெட்டுலயும் உக்காந்திட்டா , ஒங்களுக்கு எது  நடந்தாலும் தெரியாதே ன்னு  வீட்டுக்காரம்மா , அதுதாங்க , ஹோம் மினிஸ்டரு , அடிக்கடி சொல்லுவாங்க.
அன்னைக்கும் அப்பிடித் தான் ஆச்சு. அஞ்சு நிமிஷத்துல அணைக்க வேண்டிய அடுப்பை அரைமணி நேரத்துக்கு மேல அமத்தாம இருந்துட்டோம். என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லத்தான் வேணுமா?

அடுப்படி முழுதும் ஒரே புகை மூட்டம்.இட்லி சட்டில இருந்த தண்ணியெல்லாம் வத்திப் போயி உள்ளே இருந்த சப்பாத்தி எல்லாம் அடுப்புக்கரியாப் போச்சு. எவர்சில்வர் இட்லிச் சட்டி கருப்பு இருப்புச் சட்டியா மாறிப் போச்சு. சப்பாத்தி போனாப் போயிட்டுப் போகுது. ஆனா சட்டி போச்சே. வந்து பார்த்தா நொந்து , நூடுல்ஸ் ஆகிப்  போயிருவாங்களே. சரி, நல்லா புளி போட்டு வெளக்கி வச்சிருவோம்னு , நாலு நாளைக்கு தேச்சது தான் மிச்சம். ம்ம்ம்... ம்ம்.. கலரு (!!!) போகவே மாட்டேங்குது. இது கதைக்கு ஆகாதுன்னுட்டு  அதை மேல் தட்டுல  ஒளிச்சு வச்சுட்டு புதுசு ஒண்ணு வாங்கி வச்சுட்டோம்.
அம்மக்கரங்களும் வந்த்திட்டாங்க. அடுப்படில போலங்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாக்காரங்க அடுப்படில இருக்கையில எல்லாம் நமக்கு பக் பக். "அத்தான் எனக்கு ஞாபக மறதி சாஸ்தி" ன்னு சொல்லிச்  சொல்லி கல்யாணமான உடனே  கன்னியாகுமரிக்கு கூட்டிட்டுப் போயும், அந்தக்  கடற்கரைல மீனு வாங்கிக் கொடுக்காதத வரி வரியாச் சொல்லுவாங்க. அப்பிடி இருக்கும் போது அவுங்க  பொலங்குன சட்டி அவுங்களுக்குத் தெரியாம இருக்குமா ? ஒரு நாள் கேக்கவும் செய்திட்டாங்க, அத்தான் , இது நம்ம பழைய இட்லிச் சட்டி இல்லையே.அது எங்கப்பா வீட்ல சீதனம் கொடுத்தது. நல்ல கேட்டியா இருக்கும். இது அது மாதிரி இல்லே.

"இல்லேடி செல்லம் , ஒனக்கு ஞாபக மறதி அதிகம்டா . இதுதான்டா கண்ணு நீ வச்சிருந்த பாத்திரம் "னு அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டு அண்ணன்காரனாட்டம் பொய் சொல்லி ஏமாத்திட்டோம். எப்ப மாட்டப் போறோம்னு தெரியலை. அதுக்கு முந்தி எப்பிடியாவது பழைய பாத்திரக்காரன்ட்ட போட்டுடனும்.........ஈயம் , பித்தளைக்கு பேரிச்சம்பழம் , அப்பளப்பூ ன்னு ஒரு குரல்,எட்டுக் கட்டைல  கேட்டுச்சுன்னா நமக்கு ஒரு போன் போட்டுச் சொல்லிருங்க.  நீங்க பாட்டுக்கு வீட்டுப் போனுக்கு அடிச்சிராதீக.வெவகாரம் பெருசாப் போயிரும். அதுனால நம்ம மொபைல் போனுக்கு அடிங்க..நம்பர் இருக்குல்ல. சரியா? வரட்டா?



அமீரகத்தில் இருந்து அன்புடன்  சங்கர்.



Tuesday, 28 May 2013

படிச்சோம் ......கிழிச்சோம் ... part-3.....


படிச்சோம், கிழிச்சோம்  - பகுதி 3

படிச்ச பச்சோந்தி பாலைவனத்துக்குப் போச்சாம்

 

படித்தவனாயிற்றே நாம் . படித்துக் கிழித்தவனாயிற்றே நாம். நம்மைப் போய் பச்சோந்தி என்கின்றானே .. எப்படி இது நியாமாகும் ? எப்படி நேர்மையாகும்? இதைக் கேட்க யாருமே இல்லையா? இந்தப் புலம்பல் கோஷ்டியில் ஒருவரா நீங்கள்? அப்போ நீங்கள் தான் சரியான ஆள். வாங்க விவாதிப்போம்.விவரமாய்ப் பார்ப்போம். 

முதல்ல , நீ படிச்சதுக்கும் , நாங்க மேலே படிச்சதுக்கும் பச்சோந்திக்கும் , பாலைவனத்துக்கும் என்னடா சம்பந்தம்னு கேக்குறீங்கல.தமிழ்த் திரைப்படங்களில் இறுதிக்காட்சியில் ஒருவர் வந்து அந்தப் படத்தின் தலைப்பை இணைத்து ஒரு வசனம் பேசிவிட்டுப் போவார். அதுவரை அந்தத் தலைப்பை ஏன் வைத்தார்கள் என்று முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தவர்களும் , நானும் ஒருவன் தான் அதில் , ஒரு பெரு மூச்சுடன் இருக்கையை விட்டு எழுந்து செல்வர். அது போல நீங்க ஆகி விடக் கூடாதில்லையா? அப்புறம் நம்ம எழுதுறதை , சரி , சரி கிருக்கிரத்தை வாசிக்க ஆள் வேணுமே. அதுனால முதலிலே இந்தத் தலைப்பை விளக்கி விட்டு பின்னர் விவரமாக சொல்லுவோமே.

நான் இதைப் பாலை வனப் பூமியில் இருந்து எழுதுகிறேன். அப்ப ‘பாலை வனம் ‘ வந்திருச்சா? இனி பச்சோந்தியைத் தேடுவோம்.மலையின் கற் பாறையில் இருந்தால் மலைக்கல்லின் நிறம் , மரத்தில் இருந்தால் மரத்தின் நிறம் , இலையில் இருந்தால் இலையின் நிறம் என இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல  தன்னை மாற்றிக் கொள்ளுவதே பச்சோந்தியின் குணம். அப்பாடா , பச்சோந்தியும் வந்திருச்சு. இனி ‘ படிச்ச ‘ தான் வரணும். எவ்வளவோ விளக்கி இருக்கிறோம் . பித்தக் கோரசு , பிசிகல் கெமிஸ்ட்ரி , ஆட்டம் பாம் , அடுப்பங்க்கரை சிம்னி என்று அனைத்திற்கும் சைன்டிபிக் விளக்கம் சொல்ற நாம் இதைச் சொல்ல மாட்டோமா என்ன?.

ஆனா , படிச்சவன் யாராவது வேணுமே... எங்க ஊர்ல நான் சின்னப் பிள்ளயா இருந்தப்போ அவன் என்ன படிக்கிறான்னு கேட்டா , PUC, BA , MA ன்னு சொன்னா தெரியாது. என்ன பன்னிரெண்ட்டாப்பா ,பதினஞ்சாப்பா படிக்கிரீக ன்னு தான் கேப்பாங்க. அப்புறம் ஒன்னாப்புல இருந்து படிச்ச வருஷங்களைக் கூட்டித் தான் சொல்லணும். இருபத்தி ஒன்னாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன்னு சொன்னா ரெண்டு விதமா அடுத்து வரும்.

பாத்து தம்பி , சும்மா படிச்சிக்கிட்டே இருக்காதீக. மூளை குழம்பிப் போயிடும், சீக்கிரம் வேலை வெட்டியப் பார்த்துட்டு கல்யாணத்தப் பண்ணுங்க –இது ஒரு வகை. இதுக்கு நாம  மனசுக்குள்ளே, பிள்ளையப் பெத்த சிவசுப்ரமணியமோ , இல்லே பொண்ணைப் பெத்த உலகநாதானோ தாண்டா கவலைப் படனும், ஒனக்கு எதுக்குடா அந்தக் கவலைன்னு சந்தானமாய் கலாயித்து விட்டு சொல்லிக்கிட்டு , வெளியே சந்தனமாய்“‘இல்லை பெரியப்பா , நாம் இன்னும் படிச்சு பெரிய வேலைக்குப் போகணும்” னு சொல்லிட்டு நடையக் கட்டிருவோம் , இல்லாட்டி அடுத்து நீங்க கலக்டர் ஆவீங்களான்னு  கேப்பாங்க. என்னமோ ரெடியா வச்சுக்கிட்டு , வாடி மாப்பிள்ளைன்னு சொல்லி நம்ம கையில யாரோ கலெக்டர் வேலை  ஆர்டர் கொடுக்கப் போறது மாதிரி.

இன்னோரு வகை , ஆத்தா இந்தப் பிள்ளை சரியான மக்காம் , அதுதேன் பத்தாப்பு படிச்சதும் வெளியூர்ல கொண்டு போய் படிக்க வைக்கிராக, பெயிலாகி , பெயிலாகிப் படிச்சுக்கிட்டே இருக்காம் னு ஒரு டிக்கட்டு சொல்ல , அடுத்த டிக்கட்டு  ‘ ஆமக்கா , எங்க மாமா மகன் கோபாலு ,டவுனுக்குப் போயி மூணு வருஷம் தேன் படிச்சாக. பட்டம் எல்லாம் குடுத்தாகலாம் , போட்டா புடிச்சுக் கூட வீட்டுல பெரிசா மாட்டி இருக்காக.. இந்தக் காந்தி அத்தை மகன் என்னடான்னா பெரிய பத்து பெரியகோட்டைல முடிச்சுப்புட்டு , பத்து வருஷமா வெளியூர்ல படிச்சிக்கிட்டே இருக்காக. கருமாத்தூரு , மதுரை, தூத்துக்குடி , பெங்களூருன்னு ஊர் ஊரா போயிக்கிட்டு இருக்காக. ஒரு எடத்தில நறுக்கினு உக்காந்து படிக்க மாட்டேங்கிராக..ஒரு போட்டோ கூட வீட்டுல மாட்டல. சும்மா டூப் விட்டுக்கிட்டு திரியிறாருக்கா. பாத்து , தங்கச்சியப் பொண்ணு, கிண்ணு கேட்டா கொடுத்திராதீக. அவுக கணிப்பு நம்மைப் பற்றி ... ம்ம்ம்...

ஆளுக்காளு அவுங்க அபிப்ராயத்த சொல்லட்டும் , நமக்கென்னனு , கவலைப் படாம  , இருபத்தி ஒன்னாப்பு படிச்சு ( 11+1+3+2+4) , எங்கம்மா காந்தி, பட்டத்து மேல பட்டமா வாங்கினவன் என் மகன்னு பெருமைபட்டது போல P.U.C , B.Sc , M.Sc , Ph.D ன்னு பட்டங்களும் வாங்கிட்டோம்.

அப்பாடி , படிச்சவன்னும் வந்திட்டானா?

படிச்சவனும் வந்திட்டான் , பச்சோந்தியும் வந்திருச்சு , பாலை வானமும் வந்திருச்சு. ஆனா CID சங்கர் படத்தில வர்ற மாதிரி காட்சிகள் ஒன்னுக்கொன்னு ஒட்டலையே.  ஏன்? எப்பிடி?
அதைத் தெரிஞ்சிக்கனும்னா, ஒரு டீயும் பண்ணும் சாப்பிட்டுட்டு தொடருவோம். சின்னதா ஒரு  பிரேக்........

*

&

$

ஆச்சு , துபாய்க்கு வந்து 20 வருஷமாச்சு. 94 'பம்பாய் வேலை பார்த்தப்போ ,இந்த ஆயில் கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட , .நம்மையும் நம்பி இங்கே விசாவைக் கொடுத்து , வேலையைக் கொடுத்துட்டாங்க . 20 வருஷமா ஒரே கம்பெனிக்கு உழைச்சு களைச்சுப் போயிட்டோம் . போதும்னு சொல்லி போகலாம்னா, முடியலே. ஏதோ ஒன்று தடுக்கிறது. என்ன அது? விட்ட குறை தொட்ட குறையாக இந்த மண்ணைப் பிரிய முடிய வில்லையா? இந்த மண்ணின் மக்களைப் பிரிய முடியவில்லையா ? மண்ணைப் பிரிவதில் வருத்தம் தான். வளம் கொழிக்க வைத்த மண். மனிதர்கள் எப்படி?,.. பார்த்தால் பயங்கரமாக இருப்பான் பாக்கிஸ்தான் காரன், அடி மடியில் வைத்திருக்கும் சவுக்கால் அடித்து அடிமைப்படுத்துவான் அரேபியாக்காரன் , கடித்தே குதறிடுவான் கருப்பான ஆப்பிரிக்காகாரன் என்று தமிழ்த்திரைப்படங்களைப் பார்த்து மனதில் பதிந்திருந்தவைகள் யாவும் சுக்கு நூறாய், சூறைத் தேங்காயாய் உடைந்து நொறுங்கியது இங்குள்ள மனிதர்களிடம் பழகிய பின்னே. மனிதன் எங்கிருந்தாலும் மனிதனே , அவனுக்குள் மனிதம் , மனிதாபி மானம் , மானம் , சூடு , சொரனை என்று எல்லாமே கலந்து தான் இருக்கிறது. அதுபோல எண்ற்ற நாட்டினர் இங்கே இருந்தாலும் எல்லோரும் சராசரி மனிதர்களே. அவர்களுக்கும் இதயம் இருக்கிறது. சில பேருக்கு இரும்பாய் இறுகி விட்ட இதயம். பலருக்கு பனிக்கட்டியாய் உருகும் இதயம். எரிகின்ற கொள்ளிக் கட்டைகளில் எல்லாக் கட்டையுமே சுடத் தான் செய்யும். இலை விட்டு உதிர்ந்த மல்லிகைகளில் எல்லாமே மணக்கத்தான் செய்யும்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியாராகவும் , எட்டாம் வகுப்பு படிக்கும் போது தலையில் கொட்டி சொல்லிக் கொடுக்கும் தமிழாசிரியரகவும் பத்தாம் வகுப்பில் கிளார்க் , பதினஞ்சாம் வகுப்பில் ஆபீசர் , பதினெட்டாம் வகுப்பில் கலெக்டர் , இருபத்தி ஒன்னாம் வகுப்பில் , இந்தியாவின் விஞ்ஞானி என்று கற்பனைகளில் பல நிறம் , பல வடிவம் எடுத்த இந்தப் பச்சோந்தியைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமே.

அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வி , பின்னர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வி , குருத்துவம் கற்றுக் கொடுத்த கிறித்துவக் கல்லூரியில் (அருளானந்தர் கல்லூரி , கருமாத்தூர் ) பி.யூ. சியும் என முடித்து ஆயிரமாயிரம் 'இஞ்சினீயர் ' கனவுகளோடு மிதந்த காலம் . தந்தையும் அரசியலில் ஓரளவு அறியப்பட்டவராக இருந்ததனால் கனவு மெய்ப்படும் என்று காத்திருந்தோம் . கட்டிக்காத்த , பட்டி தொட்டிகளில் பாமரனுக்கு பக்குவமாய் எடுத்துச் சொல்லி கட்சி வளர்த்த  தந்தையும் காத்திருந்தார் வாய்ப்புக்காக , மைந்தனுக்கு உதவிட வேண்டுமென்று. மனம் இல்லை அன்றைய காலக் கட்டத்தில் மந்திரிமார்களுக்கு. படிப்பதற்கு விலை கேட்கும் பொறியியல் கல்லூரிகள் அன்று தமிழ்நாட்டில் இல்லை .பக்கத்து மாநிலங்களில் பணம் கொடுத்து இடம் வாங்க தந்தையிடம் பணமும் இல்லை. அன்று அவரிடம் இருந்தது நல்ல மனம் மட்டுமே.

ஏமாற்றப்பட்ட ஏக்கத்தில் , ஏற்பட்ட கோபத்தில் ,தனியே இல்லாமல்  தாகியார் துணையுடன் மந்திரிமார்களிடம் அலுத்துக் கொண்டார் தந்தை. அரசியலில் அடித் தொண்டனுக்கு கிடைப்பதென்ன அல்வா தானே.மந்திரிமார் மாதவரும் , நாவலரும் மறு வருடம் பார்ப்போமென பொறுப்பாய் கூறினரோ அன்றி போக்குக் காட்டினரோ? வெட்டியாகி விடுவோம் வீட்டில் இருந்தால் என அஞ்சி , வேதியல் படிக்க அமெரிக்கன் கல்லூரியில் விண்ணப்பித்தோம். தங்கமான முதல்வர் தங்கராசு அய்யா அவர்கள் ,தயக்கம் சிறிதும் இன்றி  இடம் கொடுக்க ஆஸ்டலில் தங்கிப் படித்தோம். கூடவே  எண்ணற்ற ஆசைகளையும் வளர்த்தோம். பெரியகோட்டைப் பள்ளிக்கு ஆசிரியர் , பேங்கிலே அக்கௌன்டன்ட் , பேச்சாளராகி அரசியலில் ,அதிகார வர்க்கத்தில் ஒருவன் என எத்தனையோ வடிவங்களை கனவூற்றி வளர்த்தோம். கற்பனையில் மிதந்தோம். கவிதை , கதை கட்டுரை என்று இரண்டு ஆண்டுகளைக் கழித்து இறுதியாண்டில் விழித்துக்கொள்ள எடுத்தோம் ,படித்தோம், எழுதினோம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றோம்.

அப்பாவின் வேண்டுகோள் வைக்க , அதனை அர்த்தம் மாறாமல் தாகியார் சித்தப்பா தயக்கமின்றி வழி மொழிந்திட , பண்பாளர், பாமரனின் அன்பாளர், ஆத்திகர் அய்யா பழனி வேல் ராஜன் அவர்களின் ஆதரவில் நமக்கு அகப்பட்டது பட்ட மேற்ப் படிப்பு.  

தூத்துக்குடி ..சி. கல்லூரியில் சேர்ந்து எம்.எஸ்.சி படித்தோம் , முடித்தோம். கல்வித் தகுதி கூடியதால் கனவுகளில் நமக்கு புரமோஷன் தான். பள்ளி ஆசிரியர் கல்லூரி ,ஆசிரியராக , பேங்க் அக்கௌன்டன்ட் , பெரிய ஆபீசராக....... ..கனவில் வட்டம் அகன்றது .

அண்ணா திமுக, அனைத்திந்திய அண்ணா திமுக வானது போல , பெரியகோட்டை சங்கரலிங்கம் பெங்களூர் சங்கரலிங்கம் ஆகி விட்டான் பி.எச்.டி படிக்க பெங்களூர் சென்றதனால்..ஆசிரியர் , ஆபீசர் கனவெல்லாம் ஆராய்ச்சியாளருக்கு மாறி , ஆல்வா எடிசன் , ஐன்ஸ்டீன் என்று திசை திரும்பியது.கூடவே அமெரிக்கக் கனவுகள் .

மற்றவர் சிபாரிசு ஏதும் இல்லாமல் மத்திய  அரசு வேலை 1984 இல் கிடைத்தவுடன், அண்ணா.., அறிஞர் அண்ணா ஆனது போல் , கருணாநிதி.., கலைஞர் கருணாநிதி ஆனது போல் சங்கரலிங்கம் ,சைன்டிஸ்ட் சங்கரலிங்கமாக மாறியாயிற்று.Central power research Institute (CPRI) ,Bangalore. இது மத்திய அரசின் நிறுவனம் . மின்சாரத்தோடு இணைந்த அனைத்து தொழில்களுக்குமான ஆராய்ச்சிக்கூடம் .எரிபொருள் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம்பெற்றவன் இந்திய ஏவுகணைத் தளங்களில் எரிபொருள் பொறுப்பாளராக இருந்திருந்தால் பொருத்தம். ஆனால் சேர்த்ததோ CPRI இல் எலக்ட்டிரிகல் என்ஜினீயர்கள் பிரதானமாய் இருக்க,என்னைப் போன்ற ஏனையோர் இரண்டாம் சிட்டிசன் தான் இங்கே.

ஐந்தே வருடத்தில் அரசு வேலை அலுத்துப் போக எடுத்து விட்டோம் ஓட்டம் இந்தியாவின் வணிகத் தலை நகராம் மும்பைக்கு. அங்கே கரெண்டு எண்ணை (Transformer oil ) தயாரிக்கும் கம்பெனியில் தரக் கட்டுப்பாடு மேலாண்மையாளராக சேர்ந்து, இரண்டே வருடங்களில் ,தரக் கட்டுப்பாடு ,   ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ( R&D ), தொழில் நுட்ப சேவைகள் என மூன்று பிரிவுக்கும் தலைவராகி மேலாண்மையின் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தோம்.எல்லாமே சரிதான், இந்தியாவின் எல்லா மூலைக்கும் சென்று வந்தோம். மாதம் இரண்டு அல்லது மூன்று பயணம். பின்னே என்ன? விதி வலியது.அதை யாரும் வெல்ல முடியாது..ஆண்டவாளைப் பாக்கலியோ... . டேய் ட்ராக் மாறாம சீக்கிரம் முடி டா .  சாரிங்க... சரிங்க.

இப்போது போல அப்போது தொலைத் தொடர்பு வசதிகள் இல்லை. வீட்டுப் போன் இணைப்பிற்காக காத்திருப்போர் பட்டியலில் கடைசி வரிசையில் நாம். செல்லுமிடம் எல்லாம் கூட வரும் செல்போனும் இல்லாத நேரம். போதாக்குறைக்கு தீவிர வாதம் தலை விரித்து ஆடிய காலம். பாபர் மசூதி இடிப்பு. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் மும்பையில் பதினோரு இடங்களில் குண்டு வெடிப்பு. முடித்திடுவோம் மும்பை வாசம் என முடிவெடுத்துக் காத்திருந்த போது காற்றும் வந்தது.கதவைத் தட்டியது அமீரக வாய்ப்பு. அன்னையையும் பிள்ளையையும் சிவகங்கையில் விட்டு விட்டு அமீரகம் வந்தோம். பணியில் சேர்ந்தோம். விட்டு விட்டு வந்த சொந்தத்தை இரண்டாண்டுகளுக்குப் பின்னர் இழுத்துக் கொண்டோம் நம்மிடமே.

பள்ளியில் முதல்வனாய் இருந்தவன் இங்கே பணிக்கூடத்தின் முதல்வன் ஆனேன். நல்ல வேலை.. நல்ல ஊதியம் .. எல்லாமே நன்று தான் . ஓடி விட்டது. உருண்டோடி விட்டது இரு பத்து வருடங்கள்.முதல் பத்தில் வீடு. இரண்டாம் பத்தில் இரு பிள்ளைகள் என்ஜினீயர்கள். மூத்தவர் மணம் முடித்து முத்தாய் ஒரு பேத்தி. இன்னும் என்ன வேண்டும்?

இது எப்படி சாத்தியமாயிற்று ? இதை எண்ணும் போது  ஒரு மலைப்பு.

இந்த மண்ணே.அமீரக மண்ணே

தத்தெடுத்து ஏற்றி விட்டாய் என்னை.

தயக்கமின்றி , மயக்கமின்றி பிரிவதெங்கன் உன்னை?

ஆனாலும் பிரியத்தான் வேண்டும்.

பிரியமுடன் பிரியத்தான் வேண்டும்.

மா ஸலாமா. .மா துஜே சலாம்.