Friday, 4 January 2013

படிச்சோம்.. கிழிச்சோம் : பள்ளிக் கூடத்திற்குப் போறோமே..



நான் , நான் என்ன நான் , எங்கள்  ஊர்  இம்புட்டூண்டுகள் எல்லாம் 60 களில் பள்ளியில் சேர்ந்த  கதை பார்க்கலாமா ? வீட்டில் அம்மா கொடுப்பதை தின்று விட்டு கொட்டாங்கச்சியை ஜன்னலில் கட்டி வைத்து  சனல் , அம்மா வின் சேலை கரை அல்லது அப்பாவின் வேட்டிக்கரை , இதில் எதாவது ஒன்று , கிழித்து கனெக்ஷன் கொடுத்து, பழைய நோட்டின் அட்டையை ‘L’ லாக்கி அதன் மேல் வட்டமான ஒரு நசுங்(க்)கிய சோடா டப்பா மூடி  வைத்து விட்டால்  ‘ கௌரி சவுண்ட் சர்வீஸ் ‘ அல்லது பாலா ரேடியோஸ்  ரெடி.அம்மாவும் நீயே அப்பாவும் நீயே முதல்   வெத்திலைய போட்டேண்டி வரை எல்லாவற்றுக்குமே ஒரே தட்டு தான். ரேடியோ போடுற நாம்  சொல்றதுதான் பாட்டு. நாமே தான் பாடுவோம். சிலசமயங்களில் பக்கத்துக்கு வீட்டு இன்னொரு வாண்டு தான் ஸ்பீக்கர். கொட்டங்கச்சி  ஜன்னலில் கட்டி  இருந்தால் ஸ்பீக்கரும்அதன் மேலே ஏறி உக்காந்திருக்கும்.பாடினால் வீடே அதிரும்.  ‘என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெனைப்பு’ இல்லாட்டி ‘ருக்குமணிய பொரத்தாடி ஒக்கார வச்சு’  இல்லாட்டி ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா‘ என்று . நேரங்காலமெல்லாம் இல்லை நமது ஒலிபரப்பிற்கு. அப்படியொரு  சந்தோஷமான நாளில், அம்மாவின் மதிய தூக்கம்  போய்விட்ட வெறுப்பில் அப்பாவிடம் ‘ஏங்க பிள்ளையை பள்ளிகூடத்துல  சேருங்க ‘ என்று அப்ளிகேஷன் போட  இந்த வருஷம் பள்ளிகூடம் திறக்கும்போது சேர்த்திருவோம்னு -அப்பா முடிவெடுத்தார். ஜூலை மாதம் முதல் தேதிக்காக  காத்திருக்கும் இடைவேளியில் நமக்குபுது டிரஸ் ,புது பைக்கட்டு புது சிலேட்டு , மற்றும்  குச்சி எல்லாம்  வாங்கி ஒரே அமர்க்களம் தான் போங்க.

பையன் வளர்ற பிள்ளை,சட்டையும் டவுஷரும் கொஞ்சம் பெரிசா தைச்சிருங்க என்ற அம்மாவின் ஆலோசனையை அப்பா செவிமடுத்து நமது ஊர் ஆஸ்தான டெயிலர் மாசானம் பெரியப்பாகிட்ட  கூட்டிக்கிட்டு போனாக. அவரும் கை அளவு , கால் அளவு,  இடுப்பு  சுற்றளவு  எடுக்கும் பொது சந்தோசம் முகத்தில் பொங்கி வழிந்தது. பக்கத்துக்கு வீடு அக்காகிட்டே , நாலாம் கிளாஸ் படிக்கும் பெரிய சாமி அண்ணே கிட்டேன்னு  எல்லார் கிட்டேயும் எனக்கு புது சட்ட இருக்கே , டவுசர் இருக்கே என்று பீத்திக்கொண்டோம்.

ஜூலை-1 வந்தது. அம்மா காலையிலே குளிப்பாட்டி, நம்மை வெள்ளையாக்கும் முயற்சியில் பாண்ட்ஸ் பவுடரை முகம் பூரா அப்பி புது டிரஸ் போட்டுவிட்டார்கள். சட்டை அது நம்ம ஒரே ஆளுக்கு தானா இல்லே மாற்றான் படத்து சூர்யா போல இன்னொருத்தர் வந்து ஒட்டிகொள்வாரோ என்று பயம். டவுசர் இடுப்பிலே நிக்கமாட்டேங்குது. அம்மா நமதுகருப்புக் கலர் பட்டுக்கயறு எடுத்து அது மேலமாட்டி  சுருக்கி விட்டாங்க. புது பையில ஸ்லேட்டு , குச்சி எல்லாம் எடுத்துக்கிட்டு நம்ம கல்விக்கான முதல் படியை இல்லே அடியை எடுத்துவச்சோம். பின் வந்த நாட்களில் நாம் பட்டனை எல்லாம் பிச்சு  எறிந்துவிட்டு இறுக்கமான முடிச்சொன்றை போட்டு டவுசர் அணிவதற்கு ஒரு புது ட்ரென்ட் உருவாக்கியது , பைக்கட்டை மண்ணில் புதைத்துவிட்டு வயற்காட்டில் பாடம் படித்தது எல்லாம் தனிக்கதை.

நாம் சேர்ந்த பள்ளிக்கூடம் மானாமதுரை பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி,பெரியகோட்டை.  ஒரு பெரிய ஹால , தட்டு தட்டா மரச்சு வச்சு ஒன்னாம் கிளாஸ் , ரெண்டாம் கிளாஸ்னு பிரிச்சு அஞ்சம் கிளாஸ் வரைக்கும் எழுதி வைத்திருந்தார்கள். பள்ளிகூடத்து வாசல்ல தண்டவாளத்து துண்டை கயற்றில் கட்டி தொங்க விட்டிருந்தாங்க.அதுதான் மணி. ஒரு பெரிய அண்ணே காலையில் ஒம்போது மணிக்கு ஒரு ராகத்துல அடிப்பாரு. பின்ன சாயங்காலம் நாலரை மணிக்கு வேற ராகத்தில் அடிப்பார். காலை ராகம் வயித்துல புளியைக்கரைக்கும். மாலை ராகம், உற்சாகம் கலந்த குதூகலம். சரி , நாம் பள்ளியில் சேர்ந்த கதைக்கு வருவோம்.

தலைமை ஆசிரியர் அறையில் நம்மைபோன்று ஒரு பன்னிரண்டு பேர், ஆண்பிள்ளையும், பெண்பிள்ளையும் அவுங்க அப்பா அல்லது அம்மாகூட நின்னுக்கிட்டு இருந்தாங்க. வணக்கண்ணே , வாங்கண்ணே எல்லாம் முடிஞ்சு சேர்க்கை படலம் துவங்கியது..

வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவராய் தலைமை ஆசிரியரிடம் அனுப்பப்பட்டார்கள்.தலைமை ஆசிரியர் ‘ இங்கே வா ,காதை தொடு’ என்றார்.நமக்கு முன்னே சென்றவர்கள் எல்லாம்தலைக்குமேல கையை வச்சு சுத்தி வந்து காதை தொட்டாங்க.

நம்ம முறையும் வந்தது.. நாம தான் அப்போவே புத்திசாலி ஆச்சே. புதுமையாய் செய்வோமே. டக்குனு வலது கையை முகத்துக்கு நேராக பிடித்து இடது காதைத் தொட்டோம்.. ஆசிரியரின் உதவியாளர் கைய தலைக்குமேல சுத்தி காத தொடு என்றார். நமக்கு அம்மா தலைக்கு சுத்திப் போடுவாங்களே , அது நினைவுக்கு வர வலது கையால் தலைக்கு மேல் இரண்டு மூன்று வட்ட மடித்து பின்னர் மறுபடியும் முகத்துக்கு நேராய் தொட்டோம்.தலைமை ஆசிரியரும் , உதவியாளரும் முறைத்துப் பார்க்க அப்பா ‘நம்ம பையன் ரொம்ப சமர்த்துன்னு சொல்லி நிலைமையை குளிர்ப்பித்தார்.உதவியாளர் சிரித்துகொண்டே ( வேற வழி?) நம் கையை தலைக்குமேல் சுற்றி வந்து காதைத் தொட முயற்சித்தார். அப்பவும் இப்பவும் நமக்குத் தான் கை நீளம் இல்லையே.எவ்வளவு முயன்றும் தொட முடியவில்லை.

பையனுக்கு என்ன வயசு?

நாலு முடிஞ்சு அஞ்சு நடக்குது. வர்ற பொங்கலுக்கு அஞ்சு முடியும்.

அஞ்சு முடியனுமே.சரி பரவாயில்லே.அட்ஜஸ்ட் பண்ணி சேர்த்திருவோம்.

தலைமை ஆசிரியரே ஜூலைக்கு அஞ்சு வயசு முடிவது போலஒரு தேதியைப் போட்டுகொண்டார்.நமக்கு பிறந்த நாள் ஜூன் 15 ஆக மாறியது. நீங்க வேண்ணா பாருங்க. 1950ல இருந்து 1970 வரை பள்ளியில் சேர்ந்த 87 சதவீதம் மக்களுக்கு அவர்களது பிறந்த நாள் மே,ஜூன் அல்லது ஜூலை மாதமாகத் தான் இருக்கும்.எல்லாம் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆசீர்வாதம்..

அந்தக்காலத்தில் ஒருகுழந்தை பள்ளியில் சேர்ந்தால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம். அன்று நமக்கு , பச்சைகலர் காகித சாக்லேட் , கலர் கலராய் ஆரஞ்சு மிட்டாய் , கல்கண்டு  , இல்லாவிட்டால் ஒரு வாய் சர்க்கரை என்று ஏதாவது ஒன்று கிடைக்குமே.அன்றும் ஒரு தாம்பாளத்தில் நாம் வாங்கி வந்திருந்த ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டை கொட்டி பியூன் அண்ணா , நம்மையும் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு கிளாஸ் ரூமிற்கும் சென்று எல்லோருக்கும் கொடுத்தார்கள்.. அழகாய் கொண்டை போட்டு , கையில் பிரம்போடு இருந்த டீச்சர்களுக்கெல்லாம் ஒரு பேப்பரில் சிறிய பொட்டலமாய் கொடுத்தார்கள். டீச்சர்களும் , நம் கன்னத்தை செல்லமாக கிள்ளி கொஞ்சினார்கள்.டீச்சர் ரொம்ப நல்லவங்கன்னு நாம் நினைத்தோம். நமக்கு அப்போது தெரியவில்லை இது சிறிய சாம்பிள் தான் என்று. பின்னாட்களில் , வீட்டுபாடம் எழுதவில்லை என்றும் , அடுத்தவன் கூட பேசினோம் என்றும் , இன்னும் பல பல காரணங்களுக்காக கிள்ளும், கொட்டும் பிரம்படியும் பட்டபோது தான் இந்த டீச்சர் நல்லவங்க இல்லேன்னு நாம் திருத்திக்கொண்டோம்.

நம்மைக் கூட்டிச்சென்று ஒன்னாம் வகுப்பிலே அமர வைத்தார்கள். பக்கத்தில் இருந்த சீனியர்  கண் நமது புது பையின் மேலே இருந்தது. நமது பையும் ரொம்ப நல்லாவே இருக்கும் . அழகாக ஒரு குழந்தை படம் போட்டு  கீழே மணிச்சரம் போல நூல் தொங்கவிட்டிருக்கும். இந்த நூலை படித்து இழுத்து பெரிதாக்கி காண்பித்து நமக்கு டென்ஷன் ஏற்படுத்துவார் சீனியர் என்று அப்போது தெரியவில்லை.இப்படியாகத்தான் நமது ஸ்கூல் அட்மிஷன் நடந்து முடிந்தது.

பள்ளியுள்ளும் , வெளியிலும் , நமது , நம்  தோழர்களது , நமது சீனியர்களது லூட்டி & சாகசங்களை இன்னொரு பதிப்பில் பார்க்கலாமா ?

வணக்கத்துடன்

சங்கரலிங்கம்

 

பி.கு: இந்த பதிப்பு கொஞ்சம் பெரிதாகி விட்டது. இன்றைய நிலையில் ஒருகுழந்தையை ‘LKG’ல்  சேர்ப்பதற்கு சென்னையில் ஒருவர் பத்து லட்சம் ‘அன்பளிப்பு' கொடுத்தார் என்ற தகவலின் தாக்கமே இந்த பதிப்பு. 60 களில் ‘school admission’ என்பது எவ்வளவு எளிதாக இருந்தது!  இன்றைய தலை முறைக்கு இது தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிப்பு.

 

1 comment:

Aruna said...

Nice one.Dress Code,Green Wrapped choclates,School bag Picture.,Good Memory uncle......The DOB by School HM u can say until 1980.