நண்பர்கள் / உறவினர்கள் நம்மைப் பற்றி தம்
நண்பர்களுடன் அறிமுகப்படுத்தும் போது அந்த புதிய நண்பர்களும் நாம் கெமிஸ்ட்ரி
படித்ததில் ஏதோ இமாலய சாதனை செய்துவிட்டோம் என்று வியந்து சிலாகித்து பேசி நம்மை
பயமுறுத்துவார்கள். ஏதாவது கெமிஸ்ட்ரியில் கேள்வி கேட்டு நம் வண்டவாளத்தைத்
தண்டவாளத்தில் ஏற்றி விடுவரோ என்று உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பிக்கும்.
அதென்னவோ சில நேரங்களில் நமது புத்தக அறிவிற்கும் , பயன்பாட்டு அறிவிற்கும் கொஞ்சம் கூட ஒட்டு /
உறவு இல்லையோ என்று சந்தேகம் வருகின்றது. பின்னே என்னங்க? மானாட மயிலாட மேடையிலே நம்ம கலா அக்கா,
ராஜஸ்தானி லம்பாடிகாரங்க கிட்டே இருந்து
பம்பர்ல அடிச்ச நகைகளை சுமக்க முடியாமல் போட்டுக் கொண்டு ‘ சந்த்ரு நீ பின்னிட்டேடா, நோ சான்ஸ் ,உனக்கும் ஸ்ருத்திக்கும் கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா
வொர்க் அவுட் ஆகுது’ னு கமெண்ட் அடிக்கும் போது நமக்கு ஒன்னுமே புரியறதில்லைங்க.
ஏனென்றால் நமக்கு தெரிஞ்ச கெமிஸ்ட்ரி எல்லாம் ‘மீத்தேன் , ஈத்தேன் , கரைத்தேன் , குடித்தேன் ‘ அவ்வளவுதான்.இது என்ன ‘கலா அக்கா கெமிஸ்ட்ரி’ என்று என் பிரண்ட் , பிலாசபர் , கைடு, ரசிகை இன்னும் எத்தனையோ அவதாரம் எடுக்கும் என்
சக தர்மினியை (அப்பாடா , இன்னைக்கு சர்க்கரை போட்ட காபி கண்டிப்பா கிடைக்கும்)
கேட்டு விளக்கம் பெற்று கொண்டோம். இது போல தான் , நம் மேலாளர் ‘ நீ அதிகமா உழைக்கணும் , அப்போதான்
அதிக எனர்ஜி கிரியேட் ஆகும் ‘ னு அட்வைஸ் பண்ணும்போது
‘சார் , உங்களுக்கு ஒன்னுமே தெரியவில்லை. தெர்மோடைனமிக்ஸ்ல முதல்
விதியே சொல்லுது எனர்ஜியை யாரும் அழிக்கவும் முடியாது , பிறப்பிக்கவும் முடியாது என்று முகத்துக்கு நேரா
சொல்லிடலாம் போலத் தோன்றும். பின்னே என்னங்க? இதைப்படிக்கிறதுக்கு நாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்? ராங்கா சொன்னா ? என்னது? கொஞ்சம் சத்தமா பேசுங்களேன். என்ன படிச்சுக்
கிழிச்சோம் , எப்படி படிச்சுக் கிழிச்சோம் என்று கேட்கிறீர்களா? அந்த கலை(தை)யையும் தான் இங்கே சொல்லி விடலாமே.
டிண்டைங், டிண்டைங் என்று மியூசிக் கேட்டதும் நமது வாய் தானாகவே
‘ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ னு முனுமுனுக்க ஆரம்பித்துவிடும்.
இன்றைக்கும் நம்மிடையே எத்தனயோ பேர் நம்மைப் போலவே, முக்காலே மூன்று வீசம் தி.மு.க பேச்சாளர்களின் பக்கா
குரலில், டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா வாக வரித்துக்கொண்டு முழுப்பாடலையும்
பாடிவிடுவார்கள். மாடு மேய்க்கும் மகாதேவன்
அண்ணா கூட ‘இரவுக்கும் பகலுக்கும் கோதுமை தோசை , இருக்கவே இருக்கு தேங்காய்
சட்டினி’ என்று கண்ணதாசன் பாட்டை எளிதாக உல்டாசெய்துவிடுவார். இவையெல்லாம் எந்த ஆசிரியர் மண்டி போட வைத்து சொல்லிக் கொடுத்தார்? இல்லை எத்தனை முறை இம்போசிஷன் எழுதி மனப்பாடம்
செய்தனர் இந்தபாடலை? இது தானாகவே வருவது பல தலை முறையாய் நிகழ்வது.
எந்த ஒன்று நமது கனவுகளோடும், கற்பனைகளோடும் ஒன்றிப் போகின்றதோ அது
காலத்துக்கும் நமது மனது விட்டு அகல்வதில்லை.அந்த ஒன்று நாம் படிக்கின்ற பாடமாகவும் இருக்கட்டுமே.பாட்டி சுட்ட வடையும் , பாடும் போது நான் தென்றல் காற்றும் மனதில்
நிறைந்திருப்பதற்குக் காரணம் நாம் அதனை கேட்டோம் , படித்தோம் , ரசித்தோம். எனவே எதையும் படிக்கும்போது அதனை ரசிப்போமே.
இதுதாங்க நம்ம முதல் பாடம். அப்படி ரசித்தது, படித்ததுதான் கணிதம்.அதனால் தான்
அல்ஜீப்ராவும், ஜியோமெட்ரியும் அல்வாவாக
இனித்தது .நமக்கு முன்னே படித்த இரண்டு அண்ணாக்கள் மற்றும் ஒரு அக்காவின் கணக்குப்
புத்தகங்கள் நம்மோடு பிணக்கு கொண்டதேயில்லை.அப்போதே நமக்கு தெரிந்து விட்டது கணிதம் தான் சரியான அடித்தளமாக இருக்கமுடியும்
என்று.
அதே கருத்தை இந்நாளில், ஐநூறுக்கு பேருக்கு விளங்க வைத்த ஒரு நிகழ்வினை நேரில்
பார்த்தோம்.ஒருமுறை கோவையிலிருந்து ஒரு பேராசிரியர் ஒரு பள்ளியில் HOW TO INCREASE THE MEMORY POWER என்று ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.இந்த நிகழ்ச்சியில்
மாணவர்களுக்கு மட்டுமின்றி மாணவர்களின்
பெற்றோருக்கும் அனுமதி இருந்தது.நாமும் ’யாரோ மோகனாங்கியாம்ல , அந்த தில்லானா மோகனாம்பாளும்
என்னதேன் ஆடுராகன்னு பாத்திட்டு வாரேன்’ னு போனோம்.நிகழ்ச்சி ஆரம்பமானது.
தமிழ்த்தாய்க்கு வாழ்த்துப்பாடி , தலைமை ஆசிரியரின் முன்னுரையோடு தொடங்கியது.பேராசிரியரும்
பேசத்தொடங்கினார்.பேச்சில் ஒன்றும் பெரிதாய் இல்லை.நடையோ மிகவும் சாதாரணம்.இதில்
என்ன ஸ்பெஷாலிட்டி என்று கட்டம் போட்ட சட்டைக்காரர் கமெண்ட் அடித்தார். அப்போது
தான் அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எந்த ஒரு மாணவரின் பெயரைக்
கூறினாலும் அந்த மாணவரின் முழு விவரங்களைக் கூறுவதாக அந்தப்
பேராசிரியர்அறிவித்தார்.எந்தப் பெயரைசொன்னாலும்
உடனே எந்திரன் சிட்டி போல கட கடவென்று அந்தக்குழந்தை படிக்கும் வகுப்பு , பகுதி மற்றும் பிறந்த தேதியை அறிவித்தார் பதில்
வந்தது..கையில் கணனியோ , காகிதமோ எதுவுமே இல்லை. அவரது நினைவுத்திறனுக்கு ,
திறமைக்கு நாம் தலை வணங்கினோம். (மன்னிக்கவும்-அவரது பெயர் நினைவில்லை. இதுதான்
நமது நினைவுத்திறன் லட்சணம். பின்னூட்டத்தில் அவர் பெயரை கண்டிப்பாக யாராவது தெரியப்படுத்துவார்
என நம்புவோம்)
‘இது எப்படி சாத்தியமாயிற்று? அவரே பின்னர் விளக்கினார். அந்த எண்களை வைத்து
ஒரு சிறிய,எளிய கதையைப் புனைந்து கொண்டதாகவும்கதையில்
அந்த எண்களை பாத்திரங்களின் எண்ணிக்கை
யாக்கி நினைவுறுத்திக் கொண்டதாக கூறினார்.
ஒரு நல்ல நிகழ்ச்சி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
இதே போல நாம் கெமிஸ்ட்ரி பயிலும் போது லிட்மஸ் பேப்பரையும்,அதன்
BLUE TO RED OR
RED TO BLUE
நிற மாற்றத்தையும் நினைவிறுத்த முடியாமல்
தவித்து நாமும் குழம்பி , நமக்கு கை வந்த கலையான, நம் நண்பர்களையும் குழப்பிக்
கொண்டிருந்த வேலையில் நமக்கு கெமிஸ்ட்ரி ஆசிரியர் ‘’BAR” ஐ நினவு படுத்திக் கொள்ளச் சொன்னார்.அது தான்
முக்குக்கு முக்கு ஒன்னு இருக்கே.நமக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும். – Blue Litmus in ACID turns Red ; Blue
Acid Red என்று நினைவிறுத்தக்
கூறினார். ( BAR – Blue in Alkali turns Red னு நினைசுட்டானு அப்பாவி முகத்தோடு நாம் கேட்க அந்த
ஆசிரியரின் முகத்தில் எள்ளும் கொள்ளும்
வெடிக்க நாம் ஆங்கிலத்தில் உள்ள அத்தனை திட்டுக்களும் அர்ச்சனையாக வாங்கியது ஒரு
தனி ட்ராக். (Alkali என்பதற்குப் BASE
என்று பொருள் கொள்க ).
சில
நேரங்களில் சில விதிகளில் ஒரு சிறிய வார்த்தை மிஸ் ஆகியதால் அதனை மதிப்பிடும்
ஆசிரியர், அப்பீலுக்காக காத்திருந்து இந்தியப் பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கும்
அம்பயர்களைப் போல உடனே ஒரு சுழி போட்டு அரை மார்க் அல்லது ஒரு மார்க் , சில
நேரங்களில் முழுவதுமாக குறைத்து தன் தொழில் தர்மத்தை நிலை நாட்டிடுவர். ‘ஒரு திடப்
பொருள் திரவத்தில் (தங்கு தடையின்றி) மூழ்கும்போது அது இழப்பதாக தோன்றும் எடை ‘ என
ஆர்க்கிமிடீஸ் விதியினை நீங்களும் நீரில் மூழ்கிக் குளிப்பதோடு தொடர்பு
ஏற்படுத்திக்கொண்டால் ‘ தங்கு தடையின்றி ‘ என்பது
எப்போதுமே தங்கு தடையின்றி நினைவுக்கு வரும.
சின்ன சின்ன
விதிகளையும் அதன் இணைப்பான எண்களையும் நமக்கு நன்கு தெரிந்தவற்றோடு பிணைத்துக்கொண்டு படித்தால்
கண்டிப்பாக மனதில் பதியும் என்பதே நாம்
கற்ற இரண்டாம் பாடம்
‘அறத்தான்
வருவதே இன்பம்’ என்பதில் அவசரமாக ‘ற’ வை விழுங்கிவிட்டு ‘அத்தான் வருவதே இன்பம்’
என்று எட்டாங் கிளாசில் போர்டில் எழுதி இன்று வரை எங்களின் கேலிப்பேச்சுக்கு முகம்
சிவக்கும் நண்பி (பெயர் வேண்டாமே.ப்ளீஸ்) கற்றுதந்த பாடம் கவனக்குறைவைத் தவிர்.
.
மற்றபடி
எல்.கே.ஜி , யூ.கே.ஜி என்று காலீல் ஷூ மாட்டி , கலர் ,கலராய்
யூனிபோர்ம்
போட்டுப் படித்ததில்லை. ஏ பி சி டி எல்லாம் எட்டாம் வயதில் தான் , அட ஆமாங்க
சத்தியமா , மூணாங்கிளாஸ் படிக்கும்
போதுதான் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.
படிக்கும்போது
புத்தகப் புழுவாய் மாறி எந்நேரமும் பளு தூக்கியதில்லை. சினிமா பார்க்க வேண்டுமா ? பார்த்துவிடுவோம்.பின்னர்
படிப்பில், பயங்கலந்த கவனம்
இருக்கும்.எழுதிப்பார்த்தோம் . பேப்பர் இல்லையா? இருக்கவே இருக்கிறது
அறையின் சுவர்கள்.அம்மாவோ ,ஹாஸ்டல்
வார்டனோ திட்டாதவரை அதுதான் நமக்கு விளையாட்டரங்கம்.காட்டினோம் கை வரிசையை.
கண்டதைத் தின்றால் குண்டனாகலாம் , பார்ப்பதை எல்லாம் படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று
ஈசாப் நீதிக்கதையில் தொடங்கி இன்குலாப்
ஜிந்தாபாத் , என்று எத்தனை முடியுமோ அத்தனையும் வாசித்தோம். கம்பனை மட்டுமல்ல
கம்பரசத்தையும் ரசித்தோம்.
எங்கள்
பெரியகோட்டை நூலகத்திலே ‘ செய்து பாருங்கள் விஞ்ஞானியாகலாம் ‘ என்று ஒரு புத்தகம்
பல செயல் முறை விளக்கங்களுடன் இருந்தது. அதில் எளிதானவைகளை இளம் சிறுவர்கள் முன்
செய்து காட்டி இருக்கிறோம் . அதில் ஒன்று. உடைத்து வைத்த ஈர்க்குச்சியில்
தவமுனிவர் செய்வதுபோல் தண்ணீரைத் தெளித்து உடைந்த குச்சிக்கு உயிர் கொடுத்தோம். (
இது போல நெறைய சரக்கு தனியா இருக்கு. பின்னூட்டம் வழியாக விசில் அடித்தால் தவறாமல்
அஞ்சலில் அனுப்புவோம்)
என்னவோ பெருசா
படிச்சத எதிர்பார்த்து வந்த நீங்க இது எல்.கே.ஜி குழந்தைக்கு அறிவுரை என்று தெரிந்து,
மனம் நொந்து பிடி சாபம் என கொடுக்கும் முன்பே விடு
ஜுட்.
ஜகா வாங்கும்
சங்கரலிங்கம்
2 comments:
Sharjah வந்ததும் வீட்டில் லேப் ஆக்கிடுவோம்...
ஒண்ணு கூட எங்களுக்கு சொல்லித் தரலை. டாடி நீங்க ரொம்ப அள்ளி விடுறீங்க
Post a Comment