படிச்சோம்..........கிழிச்சோம்......part-2
கையில் தலையணை தடிமனுக்கு ஒரு புத்தகத்தை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு உங்களுக்கு குறுக்கும் நெடுக்குமாக மெதுவாக செல்கின்றானே தம்பி இராமகிருஷ்ணன், ஏழாவது படிக்கும் எதிர்கால மன்னன். அவனை விட்றுங்க.. பாவம் , அரையாண்டுத் தேர்வோ முழு ஆண்டுத் தேர்வோ படிக்கட்டும். என்னங்க..அதெல்லாம் ஒன்னும் இல்லையா?. வீக்லி டெஸ்ட் தானா?
அவன் என்னங்க செய்வான்? வாரந்திரமோ ,மாதாந்திரமோ , யூனிட் டெஸ்டோ,காலாண்டோ, அரையாண்டோ, பப்ளிக் எக்ஸாமோ எதுவானாலும் என் பையன் தான் முதல் ரேங்க் வாங்குவான் என்று அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை ஏங்கும் எல்லா அப்பாக்களையும் போல , சரி , சரி, எல்லா அம்மா - அப்பாக்களையும் போல் இவனின் அப்பாவும், அம்மாவும் எதிர்பார்க்கத்தானே செய்வார். எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி விட்டால் எஞ்சுவது ஏக்கங்கள் தானே. இராமகிருஷ்ணன் ‘தன் முயற்சியில் தளராத விக்கிரமன் போல் ‘ ஒவ்வொரு வாரமும் , மாதமும் ரேங்க் என்னும் வேதாளத்தை அவன் வழியில் விரட்டிப் பிடிக்கட்டும்.நாமும் , நம் கூட்டாளிகளும் அந்தக் காலத்தில் எப்படி வேதாளத்தை துரத்தினோம் என்பதை நினைவு கூறலாமா?
பள்ளிப் பாடத்தில் மனப்பாடம் என்று ஒரு பிரிவு. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இது முக்கியமான ஒன்று. ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்கி விடும். தமிழில் இன்னா நாற்பது , இனியவை நாற்பது, பழமொழி மற்றும் திருக்குறள். ஆங்கிலத்தில் சில POEMS. இவைகளை நெட்டுரு போட்டு மனதில் பதிய வைப்பதே ஒரு தனிக் கலை.
ஒரு புறம் ஊதாக்கலர் பாவடையும் வெள்ளைக்கலர் சட்டையும் போட்டுக்கொண்டு நமது தோழிகள் முன்னும் பின்னுமாய் ஊஞ்சல் ஆடுவது போல் ‘ ஊர் ஓரம் புளிய மரம்‘ ரேஞ்சுக்கு ‘ காண மயிலாட கண்டிருந்த வான் கோழியை உள்ளே பதிய வைத்துக்கொண்டிருப்பர்கள். இன்னொருபுறம் காக்கி டவுசரும் , வெள்ளை சட்டையும் அணிந்த மாணவர்கள். அதில் ஒரு சில பேர் ராகம் எதுவும் இல்லாமல் எட்டுக்கட்டை குரலில் கத்திப்படிப்ப்பர்கள். ஆசிரியரின் ‘சத்தம் போட்டு படிச்சாதான் சந்திரனுக்கு பாடம் ஏறும்’ என்ற ஆசியும் உண்டு. இன்னும் சிலபேர் ஏதோ ரகசியம் பேசுவது போல ‘குசு குசு’ வென்று படித்துக்கொண்டிருப்பர்கள்.
ஆங்கிலப் பாடத்தை படிப்பது இன்னும் சுவாரசியம். வாஸு,அண்டு , புட்டு ,சம்மு என்று அந்தக் காலத்திலே தனுஷின் கொலவெறி போல வாசித்துக் கொண்டிருப்பர்கள்.ஒரு வேளை தனுஷுக்கும் அவர் அப்பா தான் சொல்லிக் கொடுத்திருப்பாரோ என்னவோ?வேம்பை மாநகரின் வேந்தர்களில் ஒருவர் ஆங்கிலம் படிப்பதற்கு அருமையான ஐடியா கண்டுபிடித்தார்.‘ஒன்ஸ் அபான் எ டைம்’ என்று ஆரம்பித்து ஒரு பக்கம் முழுவதும் தமிழிலே இருக்கும்.படிப்பதோ ஆங்கிலம். கூகுள் transliteration பயன் படுத்தி நாம் இந்தப் பதிப்பை எழுதுவதே அவர் கற்றுகொடுத்த முறைதான். அவர் ஆங்கிலத்தை தமிழில் எழுதி வாசித்தார். நாம் இன்று தமிழை ஆங்கிலத்தில் எழுதி பழகுகின்றோம். நம்மில் எத்தனை பேர் மின்னஞ்சலில், முக நூலில் , யாஹூ, கூகிள் மற்றும் குறும் தகவல்களில் இம்முறையை உபயோகிக்கிறோம். வேம்பத்தூர் வேந்தர் இதற்கு காப்புரிமை எடுத்திருந்தால் நாமும் ராயல்டி கொடுககவேண்டி இருந்திருக்கும்.அவரும் அந்நியச் செலாவணியை அள்ளிக் குவித்திருப்பார்.
மற்றுமொரு நண்பரின் முறையே தனி. பாடம் புரியவில்லை என்று தலைமுடியைப் பிய்த்துக்கொண்டார் என கேள்வி பட்டிருக்கிறோம். நிஜமாகவே இவர் பாடம் மனதில் படிக்கும்போது மிகவும் பாசத்துடன் ஒன்றிரண்டு முடிகளைக் கோதிக்கொண்டிருப்பார். பாடம் மனதில் பதிந்ததும் அந்த முடிகள் வேரோடு வெளியேறி இருக்கும்.
அந்தக்காலத்தில் எங்களுக்கெல்லாம் இருந்த முழு நேர பொழுதுபோக்கு ‘ இலங்கை வானொலி’. கே.எஸ்.ராஜாவும் , ராஜேஸ்வரி ஷண்முகமும் அப்துல் ஹமீதும் நம்மை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு வரை தூய தமிழில் பல் வேறு திரைப்பட பாடல்களால் மகிழ்வித்துக் கொண்டு இருப்பார்கள். பக்திப் பாமாலை, பொங்கும் பூம்புனல்,பிறந்த நாள் வாழ்த்து என தொடங்கி குறுக்கெழுத்துப் போட்டி , மற்றும் இசையும் கதையும் என ஒரே இசை மழை தான். மச்சானைப் பாத்தீங்களா என மழலைகளும் , கிருஷ்ணா முகுந்தா என பெரிசுகளும் ரசிக்கும் வண்ணம் எல்லாமே இனிமைதான். வீட்டில் வானொலிப் பெட்டி பாடிக்கொண்டிருக்க கையில் கோனார் நோட்ஸில் கம்பனின் ‘நாகமது நாக்முற நாகமென நின்றான்’ னுக்கு பதவுரை, பொழிப்புரை , இலக்கிய நயம் என பத்தி பிரித்துப் படித்துக் கொண்டிருப்பார்கள் நமது தோழிகள். ‘எனக்கு பாட்டு கேட்டா தான் படிக்கவே வரும்’ என்று விளக்கம் வேறு.
காலாண்டு ,அரையாண்டுத் தேர்வுக்கு வழக்கம் போல கணக்குப் பரிச்சைக்குப் படிக்காமல் மற்ற பாடங்களில் கவனம் செலுத்தி ஓரளவு நம்மைத் தயார் படுத்துவோம். என்ன , காலை ‘எழுந்தவுடன் படிப்பு’ தான் காணாமல் போயிருக்கும்.ஆழ்ந்த உறக்கம், அக்காவுடன் சண்டை ,பால் வாங்கச் செல்வது, பஜனைக்குப் போவது எனப் பல காரணங்கள். மாலைப் படிப்பு உப்பாற்றங்கரையில். கையெழுத்து மறைகின்ற நேரம் , அது தாங்க ‘இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதின் போது’ வீட்டுக்கு திரும்பி குழல் விளக்கின் ஒளி மழையில் தொடர முயலுவோம். அப்போதுதான் சிவன்கோவிலில் இருந்து ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ என்று எல்.ஆர்..ஈஸ்வரி சாமியாட வைத்துக் கொண்டிருப்பர். சிறிது நேரத்தில் இசைத்தட்டு முடிந்து இளவட்டங்களின் இன்னிசை தொடங்கிவிடும். கோவிந்துவின் ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, ஞானசேகரனின் ‘பள்ளிக்கட்டு சபரி மலைக்கு’ விஜயனின் ‘ தங்க மாயம் முருகன் சந்நிதானம், மற்றும் சேது அண்ணனின் ‘முருகனைக்கும்பிட்டு ‘ என்று ஒவ்வொருவரும் தம் கைவரிசையைக் காட்ட நாமும் கூட்டத்தோடு கோவிந்தா போட சேர்ந்து விடுவோம். இவைகளை கடந்து இரவில் சிறிது நேரம் படிப்போம்.’சீக்கிரம் படிச்சிட்டு லைட் ஆப் பண்ணுங்கடா , கரண்ட் பில் ரொம்ப வருது’ என்ற அப்பாவின் நியாயமான கட்டளைக்கு பணிந்து 9:30 க்கெல்லாம் நமது படிப்பு முடிந்துவிடும்.ஓரளவு படித்து அரையாண்டு தேர்வை ஒப்பேற்றிவிடுவோம்.
முழு ஆண்டுத்தேர்வுக்கு முன்னதாக, பரிட்சைக்கு படிப்பதற்காக பத்து நாட்கள் பள்ளி விடுமுறை. அப்போது தான் நமது தோழர்கள் தூசி தட்டி தயார் செய்வார்கள். என்ன , புத்தகம் , நோட்டா ? அதெல்லாம் இல்லைங்க. பம்பரம், கோலிக்குண்டு, கிட்டிப்புள் முதலான உபகரணங்கள். கொளுத்தும் வெய்யிலில், தெரு முனையில் நமது ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும். இதைப் பார்த்து விட்டுச் செல்லும் பெரிசுகள் ‘ இந்த பக்கி களுக்கு வேற வேலையே இல்லையா என்ற அங்கலாய்ப்புக்கு ஹேய் என்று ஒரு பழிப்பு. அப்புறம் ஆட்டம் தொடரும்.யாராவது ஒரு ஆசிரியரின் தலை தெரிந்தால் போதும் , அத்தனை ஆட்டமும் மலை ஏறி விடும்.
தேர்வு நாட்களில் நாம் நடந்து கொள்ளும் விதமே தனி. காலையில் குளித்து பக்திமானாய், வினாக்கள் ஈசியாக வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். பின்னர் ஆடைத் தேர்வு. இந்த சட்டையை போட்டுக்கிட்டு பரிட்சை எழுதினா ஊத்திக் கொள்ளும் என்று ஓரிரு ஆடைகளை ஒதுக்கிவிட்டு முதல் மார்க் எடுக்க வைத்த ஒன்றை மாட்டிக்கொண்டு பள்ளி செல்வோம்.பாதி வழியில் நாம் படித்ததை எல்லாம் மனதில் நினைத்துப் பார்த்தால் ஒன்று கூட நினைவுக்கு வராது. பூஜ்யத்தை தேடி அலைகின்ற இன்றைய தேவை அப்போது இருந்திருக்க வில்லை.இருந்திருந்தால் அன்றே ஞானியாகி இருப்போம். மனதை ஒரு நிலைப்படுத்தி நினைவு படுத்திப் பார்ப்போம். ம்.. ஹும் ஒன்றுமே ஞாபகத்திற்கு வராது. இது போதாதென்று சில நண்பர்கள் , நாம் எதில் கவனம் செலுத்தி படிக்கவில்லையோ அது தான் மிகவும் முக்கியமான பாடம், அதில் தான் பத்து மார்க் கேள்விகள் கேட்கப்படும் என்று நம்மை பயத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்வார்கள். தேர்வு அறைக்கு சென்று கண்காணிப்பாளர் கொடுக்கும் வினாத்தாளை வாங்கி நமக்குத் தெரிந்த அனைத்து சாமிகளிடமும் வேண்டிக்கொண்டு வினாத்தாளை திறந்தால் நமக்குத் தெரிந்த வினாக்களே இருக்கும். ஒரு வழியாக தேர்வை மூன்று மணி நேரம் எழுதிவிட்டு வருவோம். சில நண்பர்கள் ஏதோ ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் அரைமணி நேரத்தில் எழுதிவிட்டு அறையை காலி செய்துவிடுவார்கள். அவர்கள் அம்மா ‘என் பிள்ளை சமர்த்து ‘ என்று பாராட்டுவார்கள்.
நாம் ஒரு தடவை, நமது நண்பர்கள் மற்றும் தேர்வு அறையிலிருந்த மற்ற பள்ளி நண்பர்கள் அனைவரின் கனல் வீச்ச்சுக்கு ஆளாகி வெந்து , தர்ம அடி வாங்காமல் தப்பித்து ஓடி வந்த நிகழ்ச்சியை பார்க்கலாமா? சிவகங்கையில் நாம் SSLC தேர்வு எழுதிய நேரம். கணித தேர்வின் வினாத்தாள் அவுட் ஆகியதாக தேர்வுக்கு முதல் நாள் நமது சீனியர் அண்ணா , நமது பள்ளியில் பயின்று முதன் முதலில் பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்து மூன்றாம் ஆண்டில் பயணித்துகொண்டிருந்தவர், கொண்டு வந்து தந்தார். நாம், நமது பள்ளி நண்பர்கள், அதே மையத்தில் தேர்வு எழுத வந்த மற்ற பள்ளி மாணவர்கள் , மற்றும் பதவி உயர்வுக்காக தேர்வு எழுத வந்திருந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என அனைவருக்கும் ‘உதவலாமே’ என்ற உயரிய நோக்கில் அவுட்டான வினாக்களையும், அவற்றிற்கான பதிலையும் விலாவரியாக அனைவருக்கும் விளக்கினோம். மறுநாள் தேர்வு மையத்திற்கு சென்று வினாத்தாளை கையில் வாங்கிப் பார்த்தால் ஒரு வினா கூட அதில் இல்லை. அனைவரின் முகத்திலும் பெரிய ஏமாற்றம். கொடுக்கப்பட்ட வினாத்தாளோ மிகவும் கடினமானதல்ல. நமக்கு எளிதாகப்பட்டதால் எழுதத் துவங்கிவிட்டோம்.(அதில் 100/100 வாங்கினோம், அது வேறு). சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கம் பார்த்தால் பெரும்பான்மையான கண்கள் நம்மையே மொய்த்துக்கொண்டு இருந்தன . நல்லவேளை, அதில் ஒன்று கூட நக்கீரனை எரித்த நெற்றிக்கண் அல்ல. நாமும் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஒன்றும் தெரியாத மாணவனைப் போல் முழித்துக்கொண்டும் , கைகளை மேஜையில் தேய்ப்பதுவும் ,மற்றும் பெருமூச்சு விட்டுக்கொண்டும் பாக்கியராஜைப்போல் போக்கு காட்டிக் கொண்டிருந்தோம். மணியடித்த மறு நொடியே தேர்வுத்தாளை கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு எடுத்தோம் ஓட்டம். பின்னே அங்கே நின்றால் வாங்கும் தர்ம அடியில் எலும்பாவது மிஞ்சுமா என்பதே சந்தேகம். அதன் பின்னர் நடந்த எஞ்சிய மூன்று தேர்வுகளுக்கும் வருவதும் போவதும் தெரியாதவாறு நடந்துகொண்டோம்.
ஒரு முறை M.Sc செமஸ்டர் தேர்வுக்காக படித்த போது நடந்த இன்றும் மறக்க முடியாததொன்று. இரவுநேரப் படிப்பு முடிந்து வராண்டாவில் தூங்கிகொண்டிருந்தோம். அதிகாலையில் சூடான காப்பியுடன் ஹாஸ்டல் அலுவலர் எழுப்பிவிட நாமும் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு கையில் ஒரு புத்தகத்துடன் சுமார் ஆறு மணியளவில் படிப்பதற்காக கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு சென்றோம். மணல் குமிந்து கிடந்த ஒரு இடத்தை தெரிவு செய்து நமது படிப்பை துவங்கினோம்.சிறிதுநேரத்தில் நித்திரா தேவியின் அரவணைப்பில் நாம் நம்மை மறந்தோம். சுமார் ௮:௩௦ அளவில் ஏதோ கனவில் நம்ம யாரோ அழைப்பது போல் உணர்ந்து விழித்துப் பார்த்தால் நமது சீனியர் நம்மை உதை பந்தாக்கிக் கொண்டிருந்தார். நன்கு விழித்த நாம் நான்கு கால் பாய்ச்சலில் அவர் மீது பாய ஆயத்தம் செய்தோம்.
நமது சீனியர் பத்து மணிக்கு தேர்வுக்கு செல்லவேண்டுமே எனக் கூற நமது சப்த நாடியும் ஒடுங்கி , நமது காலடியில் பூமி நழுவுவதை உனர்ந்தோம். அப்போது நேரம் காலை 9:30. அவசரம் அவசரமாக ஹாஸ்டலுக்கு விரைந்து குளித்து , சிற்றுண்டியை முடித்துக்கொண்டு தேர்வு அறைக்குள் நுழையும் போது நேரம் காலை ௧௦:௦௦. அன்று எடுத்தோம் ஓர் முடிவு .எந்த ஒரு காரணத்தினாலும் தேர்வு தினத்தன்று ஹாஸ்டல் அறையை விட்டு வெளியே செல்வதில்லை என்று.
என்னங்க , ரொம்ப போர் அடிச்சிட்டோமா ? இப்போதைக்கு இவ்வளவு போதும்னு முடித்துக் கொள்வோமா?
அன்புடன்,
சங்கரலிங்கம்
1 comment:
சுவாரசியம். சமர்த்து
Post a Comment